blogger tricksblogger templates

Tuesday, April 3, 2012

விளம்பரங்களில் பெண்
பில்லியர்ட்ஸ் ஆட்டத்தில் ஒரு விதி உண்டு. எந்த ஒரு காயையும் நேரடியாகக் குழிக்குள் தள்ளக் கூடாது. ஒரு வெள்ளைக்காயின் உதவியுடன்தான் தள்ள வேண்டும். அப்படித்தான் ஆகிவிட்டது இன்றைய விளம்பர உலகம். எந்த பொருளை சந்தையில் விளம்பரப்படுத்த எண்ணினாலும், பெண்களை பயன்படுத்தாமல் அவர்களால் துளி கூட காய் நகர்த்த முடியாது.

சரி, இது ஆரோக்யமான விஷயம் தானே என புருவம் தூக்க வேண்டாம். நம் விளம்பரங்களில் பெண்கள் பற்றிய புனைவுகள் இருக்கிறதே… அப்பப்பா! பலசமயங்களில் சகித்துக் கொள்ள முடியாததாகவே இருக்கிறது. இப்படி சித்தரிக்கப்பட்ட பெண்கள் பல்வேறு பிம்பங்களாய் பார்க்கப்படுகிறார்கள். முதலாவதாக தன் குழந்தைகளுக்கு சிறந்ததையே வாங்கிக் கொடுக்கும் கெட்டிக்காரத் தாய் மற்றும் வீட்டு நிர்வாகத்தை சிறப்பாய் கட்டிக் காக்கும் சிறந்த குடும்பத் தலைவி பிம்பம். தன் குழந்தையின் நண்பர்கள் கேலி செய்வதை கண்டு வெகுண்டு, சிறந்த ஊட்டச்சத்து பானத்தை உபயோகித்து, தன் குழந்தையை மற்ற குழந்தையின் வளர்த்திக்கு ஈடுசெய்து தான் சிறந்த அன்னை என நிரூபிப்பது. சிறந்த குடும்பத்தலைவியாக இருந்து எப்படிப்பட்ட கடினமான கறையையும் ஒரே சிட்டிகையில் களைந்து விடுகிறாள் மந்திர மாயக்காரி போல. மசாலா பொருட்களை பயன்படுத்தி பழைய பாரம்பரிய சமையலை இட்டுக் கொண்டு வருவதாய். அதிலும் எப்படி? கணவன் மோப்பம் பிடித்தபடி வருவதாய் காண்பிப்பது. சமையலறை முதல் கழிவறை வரை பளபள என சாமர்த்தியமாக மின்ன வைப்பது என அது ஒரு பெரிய கன்னித்தீவு லிஸ்ட். இதுகூட பரவாயில்லை ஏற்றுக்கொள்ளலாம். மற்றொரு பிம்பமாக பெண் என்பவள் மிக அதிக கவர்ச்சியை வெளிபடுத்தும் ஒரு போகப் பொருளாக சித்தரிக்கப்படுவது. அங்கங்களை அடையாளப்படுத்தி அங்காடித் தெருவில் விற்றுக் கொண்டிருப்பது போல் அசிங்கப்படுத்துகிறார்கள். ஆண்கள் பயன்படுத்தும் அனேக பொருட்களுக்கு பெண்களின் கவர்ச்சியை முன்னிலைப்படுத்தாமல் விளம்பரங்கள் வருவது அனேகமாக அரிதாகி வருகிறது.

சாதாரண ஒரு ரேஸர் விளம்பரத்துக்குக்கூட கவர்ச்சி கன்னியுடன் அந்த ஆண் கெட்ட ஆட்டம் போடுகிறான். கிரிக்கெட் மைதானத்தில் தனக்கு முன் உள்ள இளைஞன் தனக்கு மைதானத்தை மறைக்கிறான் என்பதனால் அவன் மேல் வாசைன திரவியம் அடித்துவிட அவனை பெண்கள் பட்டாளம் மொய்த்து தனியே அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். பின் இவன் மைதானத்தை நன்கு வேடிக்கை பார்க்கிறான். அவர்களின் புத்தி கூர்மை எந்த வகையில் வெளிப்படுகிறது பாருங்கள். ஒரு ஆண் உபயோகிக்கும் பெர்ஃபியூமிற்கு மயங்கி பல கவர்ச்சிக் கன்னிகள் அவனை படுக்கைக்கு அழைப்பது போன்ற காட்சிகள் அருவருப்பின் உச்சகட்டம். இதைவிட பெண்களை கொச்சைப்படுத்த முடியுமா?

பத்திரிகைகளில் வரும் உள்ளாடை விளம்பரங்களை கூட ஏற்றுக் கொள்ளலாம். இதுபோன்ற அவலங்களை குடும்பத்துடன் பார்க்கும்போது அசிங்கத்தை காலால் மிதித்து அவதிப்படுவது போன்ற உணர்வு. அடுத்து வரும் தலைமுறை பெண்களை எப்படி பார்க்கும்? நினைத்தாலே பகீரென்கிறது. பெண்களின் கவர்ச்சியை மட்டும் தான் அவர்கள் நம்பி இருக்கிறார்களா? அப்படியானால் அவர்களின் பொருளின் தரம் என்பது என்ன?

திருமண நாளன்று மணவாளனை கரம் பிடிக்க இருக்கும் கண நேரத்தில் மற்றொரு ஆடவன் உபயோகித்த பொருளை கண்டு மனம் மாறி அவனுடன் ஓடுவது, “ஓடிப் போய் கல்யாணம் பண்ணிப்போம் ரிசப்ஷனுக்கு எல்லாரையும் கூப்பிடுவோம்” என்று ஒரு பவுடர் தரும் புத்துணர்ச்சியில் பெண் உரைப்பது என எவ்வளவு வடிகட்டினாலும் கட்டி கட்டியாய் கசடுகள் மிஞ்சுகிறது. நான் எல்லா விளம்பரங்களையும் குறை கூறவில்லை. “‘ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக” நம்மை வசீகரித்து எத்தனை அழகான கருத்துகளை நம்முன் வைக்கின்றன விளம்பரங்கள். நான் சொல்ல வந்தது என்னவெனில் நகைக்கடைக்குக் கூட அரை நிர்வாண போஸ் தேவையா? இப்படிப்பட்ட விளம்பரங்கள் பெண்களை தவறாக பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தவறாக வழிநடத்தவும் செய்கிறது என்பதுதான் வேதனையான விஷயம். உதாரணமாக அழகு சாதன விளம்பரங்களைச் சொல்லலாம். கருத்த பெண் தன்னம்பிக்கை இல்லாது அலைவது போலவும் குறிப்பிட்ட ஒரு சாதனத்தை உபயோகித்த உடன் சிலநாட்களிலேயே அவன் சிவப்பு சருமம் பெற்று அவளை முதலில் கண்டு கொள்ளாத காதலன் பிறகு வேறு பெண்ணுடன் பேசுவதை விடுத்து இவளுடன் உறவை துளிர்ப்பதுமாக நீளும் காட்சிகள் படு அபத்தம்.


ஒரே ஒரு வாரத்தில் சிகப்பழகு என்று அப்பட்டமாய் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள். அதையும் நம்பி வாங்குவது பெண்களுக்கு வாடிக்கையாய் போயிருக்கிறது. விளம்பரங்களில் வரும் உண்மைத்தன்மையை நம்மில் எத்தனை பேர் கேள்வி கேட்கிறோம். பலர் கூடி முணுமுணுத்து சிரித்துக் கொள்வதோடு சரி. உண்மையில் இப்படிப்பட்ட கண்மூடித்தனமான விளம்பரங்கள் பெருகி போயுள்ளதற்கு காரணம் சமூகத்தில் தலைவிரித்தாடும் கருப்பு சிவப்பு பாகுபாடுதான். “கருப்பே அழகு காந்தலே ருசி” என்றதெல்லாம் அந்தக் காலம். ஆணானப்பட்ட அமெரிக்காவில் கூட இத்தனை வருடங்கள் கழித்து இப்போதுதானே ஒபாமா வந்தார்.

இந்தியா எம்மாத்திரம்? சிவப்பாக இருப்பதுதான் அழகு என இவர்களிடம் சொன்னது யார்? இவ்வளவு ஏன்? நம் இந்தியாவில் கருப்பு பெண்களே இல்லையா? ஏன் ஒரு விளம்பரத்தில் கூட அவர்கள் காட்டப்படுவது இல்லை? இது கொடுமையிலும் வன்கொடுமைதானே. சிவப்பாக இருப்பவா;கள் ஏதோ வானத்திலிருந்து குதித்தவர்கள் போலவும், மற்றவர்கள் பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டவர்கள் போலத் தானே இங்கு நடத்தப்படுகிறார்கள். என்ன சொல்ல … எல்லாம் இந்த விளம்பரங்களில் விதைக்கப்படுவதுதான். பெண்களிடம் கொட்டிக் கிடக்கும் ஆற்றலைப் பற்றி யாரும் எதுவும் குறிப்பிடுவதில்லை.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது, நானும் என் தோழி புவனாவும் பள்ளியில் அவளும் நானும் நின்று பல நாட்கள் நடனம் பழகிக் கொண்டிருந்தோம். திடீரென்று ஒருநாள் வந்த தலைமை ஆசிரியை என் தோழியை மூன்றாம் வரிசைக்கு அனுப்பிவிட்டு அங்கே நின்றுக் கொண்டிருந்த சிவப்பு நிற பெண்ணை எனக்கு பக்கத்தில் நிறுத்தி வைத்தார்.

நல்ல துடிப்பும் திறனும் நேர்த்தியும் இருப்பினும் என் தோழி பின்னுக்குத் தள்ளப்பட்டதற்கு ஒரே காரணம் அவள் கருப்பாய் இருந்ததுதான். இன்றும் புவனாவை நினைக்கும் போதெல்லாம் முகம் வெளிறி பல்லைக் கொண்டு கீழுதட்டை கடித்து தனக்குள்ளேயே குமைந்ததுதான் எனக்கு ஞாபகம் வருகிறது. எத்தனை திறனை நாம் இப்படி மழுங்கடித்து வீணாக்கி இருக்கிறோம்.

“கண்ணா… கருமை நிறம் கண்ணா” என்ற பாடலைத்தான் நாம் ஹிட் ஆக்கி இருக்கிறோம். கருப்பான கதாநாயகிகளை அல்ல. ஒரு கருப்பின பெண் ஒப்ராவின்ஃபரே. தன்னுடைய திறமையின் மூலம் உலகையே திரும்பிப் பார்க்கச் செய்யவில்லையா? சிவப்பு மட்டும்தான் அழகு என்ற விதியை ஏற்படுத்தியது எவ்வளவு வெட்கக்கேடான விஷயம். பார்க்கப் போனால் நம்முள் இருக்கும் குறைகளை களைந்து வெளித்தோற்றத்தை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியம்தான் - ஏனெனில், அது சிறந்த தன்னம்பிக்கையை கொடுக்கும். ஆனால், தற்போது அது நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளை கடந்து அழகிற்கு சம்பந்தப்படாத மற்றொரு பாதையில் பயணிக்கிறது. எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயம் திசை திரும்பி கவர்ச்சிப் பாதையில் விஸ்வரூபம் எடுத்து கொண்டது.

பெண்ணுக்கு புற அழகு மட்டும்தான் வாழ்க்கை என்பது போலல்லவா ஆகிவிட்டது. இதையெல்லாம் எதிர்த்து பெண்களாகிய நாம் இன்றே குரல் கொடுப்போம். ஆலமரத்தின் விதை கடுகைவிடச் சிறியதாக இருக்கலாம் ஆனால் விளைச்சலும் பயனும் மகத்தானது. நம் விதைகளில் சில விளைச்சலைத் தரலாம், சில பழுதாகலாம் அதற்காக விதைப்பதை நிறுத்தக் கூடாது. திறக்கும் வரை கதவை தட்டிக்கொண்டே இருப்போம். ஒரு ஆண் படித்தால் சம்பாதித்துக் கொண்டுதான் வரமுடியும். ஒரு பெண் படித்தால் அந்தக் குடும்பத்தையே முன்னேற்றம் செய்ய முடியும் என்ற ஒரு சூழ்நிலை உருவாகி அனைத்துத் துறைகளிலும் ஆணுக்குப் பெண் சளைத்தவள் அல்ல என்பதை ஆதாரபூர்வமாக நிலைநாட்டினோம்.

நினைக்க மனம் பெருமிதம் அடைந்தது. ஆனால் … தொடர்ந்து ஏன் இப்படிப்பட்ட போராட்டம்? “பெண் ஏன் இன்றும் ஏதாவது ஒரு விஷயத்தில் போராடிக் கொண்டிருக்கிறாள்? மறுபடியும் சமுதாயத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டுக் கொண்டு வருகிறது. தெரிந்தோ தெரியாமலோ பெண் மறுபடியும் சகதியில் தள்ளப்பட்டுக் கொண்டு வருகிறாள். தந்தை பெரியாரின் பெண்ணுரிமை கோட்பாடுகளையும் மகாகவி பாரதியின் புதுமைப் பெண்ணும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, பெண்ணிற்கு பெண்ணே எதிரிஎன்ற நிலை ஏற்பட்டு அதை மாற்ற முயற்சிக்காமல் காரணம் சொல்லிக் கொண்டே வருகிறோம்.

புற அழகு மட்டுமே வாழ்க்கை என்று நினைத்தால் நிம்மதியற்ற மனம்தான் நமக்கு பரிசாகக் கிடைக்கும்.

நம்மை கடந்துச் செல்லும் எண்ணற்ற பெண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழலில் ஒவ்வொரு செயலில் உலக அழகியாக ஜொலிக்கிறார்கள். அழகு என்பது எண்ணத்தில், செயலில், அன்பில், வாழ்த்தில், நேசத்தில், பரிதவிப்பில், அடக்கத்தில், பொறுமையில், பண்பில், பாசத்தில், போதிப்பில், அரவணைப்பில்… இப்படி அங்குலமாக சிதறி பரவிக் கிடக்கிறது.

எதையும் பார்க்கும் பார்வையில் இருக்கிறது அழகு. பிறவியிலிருந்தே பார்வையற்ற வாலிபரை விரும்பி கட்டிக்கொண்ட பக்கத்துத் தெரு காமாட்சி அழகு, எல்லோர் வீட்டுக் குப்பைகளையும் எவ்வித அருவருப்பும் காட்டாது அள்ளும் எங்கள் வார்டு துப்புரவு பெண்மணி அழகு, கணவனின் உழைப்பை எதிர்பாராது கடன் பெற்று தொழில் செய்து வெற்றி பெற்ற சுயஉதவிக் குழு பெண்கள் அழகு, பாட்டியின் கைகளில் தென்படும் சுருக்கங்களை நீவி விடும் பேத்தியின் கைவிரல் அழகு. “அண்ணா, உங்க வண்டியில லைட் எரியுது” என சொல்லிய எதிரே வந்த பெண்ணின் எண்ணத்தில் இருக்கிறது அழகு. உங்களுக்காக ஆசை ஆசையாய் செஞ்சி வெச்சேன், சாப்பிடுங்க என உபசாpக்கும் அன்பு உள்ளத்திடம் இருக்கிறது அழகு. மார்புக் காம்புகளில் மழலை பால் உறிய உலகையே மறக்கும் நிலை அழகு. இவ்வளவு ஏன்? அன்னை தெரசா தன் தள்ளாத வயதிலும் அழகு தானே!

2 comments:

 1. ivvalavu azamana karutha nan pavithra kitta irunthu yedir parkale? but superb.. go ahead

  ReplyDelete
 2. // புற அழகு மட்டுமே வாழ்க்கை என்று நினைத்தால் நிம்மதியற்ற மனம்தான் நமக்கு பரிசாகக் கிடைக்கும்.//
  ஆஹா..அருமையான ஆக்கம்..இதுவே மொக்கை,சினிமா,ஒன்றுக்கும் உதவாத பதிவு போட்டிருந்தீர்களானால் குறைந்தது 20,30 பேராவது பின்னூட்டம் இட்டிருப்பார்கள்
  இதிலேருந்தே தெரிகிறது மக்களின் கேடுகெட்ட ரசனை..
  எப்போதான் திருந்துவார்களோ....!!!

  ReplyDelete