மழைப்பெண்ணே...
உமக்கும் எமக்கும்
பிறந்தவீடு புகுந்தவீடென்று
இரு வீடுகள் உண்டு
நிலமகள் தாலாட்ட
ஆறு குளம் ஏரி கடலென
பிறந்த வீட்டு பெருமைகள்
உனக்குண்டு ஏராளம்
திருமணம் புரிந்து
எங்களை பிரிந்துச் சென்றாய்
வானமண்டலம் நோக்கி
புக்ககத்தில் நீ எதிர்கொள்ளும் சண்டைகள்
இடியும் மின்னலுமாய் வெளிப்பட
பிறந்தகம் தேடி வந்து
அவ்வப்போது குளிர்வித்துச் சென்றாய்
யார் கண்பட்டதோ!
தாய்வீட்டுடனான உன் பிணக்கில்
பஞ்சத்தில் பரிதவித்தோம் நாங்கள்
ஏன் இந்த பாராமுகம் என
பெரும் வேள்வி கொளுத்தினோம்
அமிர்தவர்ஷினியை அடாது பாடினோம்
நல்லிணக்க ஒப்பந்தமாய்
நளினமாய் தான் வந்திறங்கினாய்
ஒரு நவம்பர் திருநாளில்
அடைமழையாய் ஆரம்பித்து
அடங்காத மழையாகினாய்
அதிரசமாய் இனித்த நீ
அர்த்தமற்றதாய் மாறிப் போனாய்
பயிர்களை சீர்குலைத்து போட்ட
ருத்ரதாண்டவ ஆட்டம் அது
முதன்மைசாலைகலும் முட்டுச்சந்துகளும்
நச்சுப்படலம் பூசிக் கொண்டது
பலத்த...மிக பலத்த...என
உன் பராக்கிரமங்கள் கூடக்கூட
நனைந்தோம்! நீந்தினோம்!
மிதந்தோம்! மூழ்கினோம்!
அச்சம் அதிர்ச்சி ஆற்றாமை
என வடதமிழகம் வாய்பிளந்தது
மழைப்பெண்ணே...
பிறந்த வீடென்பது அவ்வப்போது
வந்துவிட்டுச் செல்லத்தான்
நிரந்தரமாக தங்கிவிட அல்ல
உன் அழிச்சாட்டியத்தை
கணவன் வீட்டாரிடமே வைத்துக்கொள்
தமிழகம் பிழைத்துப் போகட்டும்!!!
சமீபத்திய சனிக்கிழமை 28.11.2015 தினமலர்-பெண்கள் மலரில் வாசித்து மகிழ்ந்தேன். மழை இன்னும் விடாது பொழிவதால் மீண்டும் இங்கும் வாசித்தேன்.
ReplyDeleteபிறந்த வீட்டைப்பிரிய மனமில்லாமல் அல்லவா இன்னும் இங்கேயே இருந்து அடம் செய்து வருகிறாள் :)
பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
ReplyDeleteஇப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.
ReplyDelete- சாமானியன்
எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி