Friday, July 8, 2011
செவிடன் மனைவி
திருமணமான இந்த மூன்று மாதத்தில் ரொம்பவே
சோர்ந்து போனாள் சாதனா. செவிடனான கந்தனை
கட்டிக் கொண்டதிலிருந்து இப்படித்தான் மாறிப்
போயிருந்தாள் அவள். பட்டாசு சத்தம் போல் வெளிப்படும்
அவளின் தொடர் சிரிப்பு எங்கோ காணாமல்
போய்விட்டிருந்தது. இருவோரமும் கண்ணீரால் நனைந்த
தலையணைகள் அவளுக்கு மிக நீண்ட இரவை
தந்துக் கொண்டிருந்தது.
கடைக்குட்டியாக ஆறாவது பெண் சாதனா.
வறுமையும் அப்பாவின் பக்கவாத பாதிப்பும் குடும்பத்தை
ஆட்டிப் படைத்தன. ஐந்து பெண்களையும் தட்டுத்தடுமாறி
கட்டிக் கொடுத்த அப்பா இவள் முறையின்போது ஏதும்
செய்ய இயலா கல்லாகி போனார்.
இதன் பொருட்டு அவர் குமைந்த போதெல்லாம்
அவரை ஆதரித்து தம் மயிலிறகு பேச்சால் வருடிக் கொடுப்பது
அவளின் வாடிக்கை.
அவளின் 28வது வயதில் அவள் முன் 2 வரன்களின்
விவரங்களை அப்பா தலையை தொங்க போட்டபடியே
தெரிவித்தார். செவிடனான இளவயது கந்தன் ஒன்றும்,
48 வயது மூர்த்திக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்படுவதுமாக
இரு சந்தர்ப்பங்கள்.
அப்பாவிற்கு பின் தனக்கு யாரென்ற நிஜம் சுட, தராசு
கோல் போல தன் கைகளால் நிறுத்திப் பார்த்து கந்தனை
கட்ட சம்மதித்தாள். இந்தியா பாகிஸ்தான் உறவு போல்
அவ்வப்போது பேச்சுவார்த்தையுடன் முறிந்து போன பழைய
வரன்களை போல் இல்லாது முகூர்த்தத்தில் முடிந்தது.
வாழ்ந்து கெட்ட குடும்பமாதலால் அவளின் உறவுக்கு முன்
தலை நிமிர்ந்து வாழ வேண்டிய கட்டாயம். கந்தனோ
சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை போல் அவ்வளவு
அப்பிராணியாக இருந்தான். கிட்டதட்ட 16 வயதினிலே
கமல் ரகம். என்ன கொஞ்சம் செவிட்டு கமல். சமயத்தில்
வாயும் திக்கும்.
மணமான 20-ம் நாளே தனிக்குடித்தனம். வீட்டில்
நிலவிய ஒருவித வெறுமை பேயை போல் பிய்த்துத் தின்றது.
துயிலெழுந்ததிலிருந்து படுக்கை வரை ஓயாமல் பேசும்
அவளின் இளரோஜா வண்ண இதழ்கள் பேச இயலாமல்
வெடித்துப் போயிற்று. அவன் சொற்களுக்கு பதிலாக இவள்
சமிக்ஞைகள் செய்த வண்ணம் இருந்ததால் இவளின் உதடுகள்
ஒட்டிக்கொண்டு பிரிய மறுத்தன. பேசுவதே மறந்து
எப்போதும் அபிநயம் பிடிக்க ஆரம்பித்துவிட்டாள், இவள்
என்னவோ ஊமை போல.
தெரு நெடுகிலும் அவளை செவிடன் பொண்டாட்டி
என்றே அழைத்தனர். அவளின் பெயர் தேர்தல் சமயம் தரும்
வாக்குறுதி போல் மறந்து மண்ணோடு போயிற்று. அந்த
அடைமொழியை களைவது எப்படி என்ற யோசனையில்
அசூயை உண்டானது.
விடுமுறை தினங்களில் தாய்வீட்டு தெரு மழலைகள்
இவளின் கதை சொல்லும் திறனில் சொக்கிப் போய்
திண்ணையில் அமர்ந்து கதை கேட்க ஆளாய் பறந்த
சேதிகள் கடல் கொண்ட பூம்புகாராய் அழிந்து போயின.
கணவன் மனைவி சேர்ந்து பேசிப் பகிர வேண்டிய
சந்தர்ப்பங்கள் தனக்கு வாய்க்காமல் போனது எவ்வளவு
பெரிய துரதிஷ்டம் என்பதில் மருகினாள். எதை இட்டு அந்த
வெறுமையை நிரப்புவது என்பதில் குழம்பிப் போனாள்.
ஆனால், அப்பா ஏற்படுத்திக் கொடுத்த இல்வாழ்க்கையை
நிராகரிக்கக் கூடாது என்பதில் மட்டும் அவளின் உறுதி
தென்பட்டது.
இருசக்கர வாகனத்தில் பேசிக்கொண்டே நெடுந்தொலைவு
செல்லும் காதலர்கள், கடற்கரையில் மனைவியை சமாதானம்
செய்ய வார்த்தைகளாலான அஸ்திரத்தை பிரயோகிக்கும்
கணவன், பள்ளி விட்டு அழைத்து வரும் தம் மகளிடம் சுவாரசிய
உரையாடல் புரிந்தபடி வரும் நடுத்தர வயது இளைஞன் இப்படி
எதிர்ப்படும் அனைவரையும் கண்டு மனம் பிசகியது தொடர்
கதையாயிற்று.
இத்தருணத்தில்தான் பக்கத்து வீட்டுக்கு புதியதாய்
குடித்தனம் வந்தனர் வினோத் தம்பதியினர். வெளிப் பார்வைக்கு
சினிமா கதாநாயகன் போல்தான் இருந்தான் வினோத். ஆனால்
இரவானால் தண்ணி கிண்ணி போடாமலேயே அவன் பேசும்
பேச்சு அத்தனையும் பேசக்கூடாத ரகம். சென்சார் கொண்டு
கத்தரிக்க தகுந்தவை.
சந்தேகத் தீ அவனை ஆட்டிப் படைக்க அவன் மனைவிக்கு
கொச்சை வார்த்தைகளில் நித்தம் அர்ச்சனைதான். அன்று அந்த
நீண்ட மழை இரவிலும் அப்பட்டமாய் கேட்டது அவனின்
இடியோசை. இப்படியும் ஒரு மனிதனா என காதை
பொத்திக் கொள்வாள் சாதனா.
மறுநாள் மழை விட்டுச் சென்ற மிச்ச சொச்ச இடங்களில்
மெல்ல நடந்து வந்தாள் வினோத்தின் மனைவி.
‘கொஞ்சம் டீத்தூள் இருக்குமா? மளிகை சாமான் இன்னைக்கு
வந்துரும். நாளைக்கு காலம்பற கொடுத்துடுறேன்’.
இதோ தரேன். வாங்க உள்ள…
இரவு நடந்த பேச்சுக்கும் அவளுக்கும் சம்பந்தமே
இல்லாததை போன்ற முகமலர்ச்சி, கொண்டு வந்த கரண்டியில்
தூளை நிரப்பியபடியே கவனித்தாள் சாதனா.
“கேள்விப்பட்டேன்… உங்க வீட்டுக்காரரு செவிடாமே?”
தப்பா நெனச்சிக்காதீங்க. இந்த தெருவே செவிடனை கல்யாணம்
பண்ணிக்கின பெரிய மனசு பொண்ணுன்னு ரொம்ப பெருமையா
பேசிக்குறாங்க.
பேசிய அர்த்தம் முகத்தில் அறைந்ததும் இவளுள் இருந்த
ஏதோ ஒன்று உடைந்து நொறுங்கியது போலிருந்தது.
உங்களுக்கு ஒன்னு தெரியுங்களா? என் காது
செவிடாயிட கூடாதான்னு நான் நித்தம் ஏங்குறேன். அதுகூட
ஒரு குடுப்பினை தாங்க எனக்கு.
சாதனா ஸ்தம்பித்து நின்றாள். அவளுடைய
உள்ளத்திலிருந்து எந்தக் குப்பையையோ வெளியில் வாரிப் போட
வேண்டியிருந்தது போல் அவளுக்கு தோன்றியது. அந்தக்
குப்பைதான் நித்தமும் மக்கி நினைவுகளிலெல்லாம் நாற்றமடித்தது.
அவள் சென்ற நீண்ட நேரம் கழித்தும் இவளின் கண்கள் நீர்
சுரந்த வண்ணம் இருந்தது.
மொட்டை மாடி அழுக்கை துடைத்தெறிந்த அடைமழை
போல அவளின் புழுங்கிப் போன மனம் கண்ணீரில் கரைந்து
காணாமல் போனது.
இப்போதெல்லாம் யாரேனும் அவனை கூப்பிட்டால்
அவனுக்கும் சேர்த்து இவள் காதில் வாங்கிக் கொள்கிறாள்.
அவனுக்கு செய்யும் சமிக்ஞைகளில் கூட அன்னியோன்யம்
அதிகரித்தது. செவிடன் பொண்டாட்டி என யாரேனும்
கூப்பிட்டால்முதலில் புன்முறுவல் பூக்க அவளின் இதழ்
தயாராயிருந்தது. பின் எப்போதும் அவள் தலையணை
ஓரங்கள் கண்ணீரில் நனையவில்லை.
நன்றி :தேவதை
Subscribe to:
Post Comments (Atom)
உளறுவாயனுக்கு ஊமை மேலல்லவா!
ReplyDeleteஅருமையான கதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி
ReplyDeleteமனசு ஆறுதல் கொள்ள ஆயிரம் வழிகள்.
ReplyDeleteவேடிக்கையாய் சொன்னாலும் (அ) மனப் பூர்வமாய் சொன்னாலும்தினசரி வாங்கிக் கட்டிக் கொள்ளூம் மனசுக்குத்தான் அந்த ரணம் புரியும்.
//உங்களுக்கு ஒன்னு தெரியுங்களா? என் காது
செவிடாயிட கூடாதான்னு நான் நித்தம் ஏங்குறேன். அதுகூட
ஒரு குடுப்பினை தாங்க எனக்கு.//
// பேசிய அர்த்தம் முகத்தில் அறைந்ததும் இவளுள் இருந்த
ReplyDeleteஏதோ ஒன்று உடைந்து நொறுங்கியது போலிருந்தது.
உங்களுக்கு ஒன்னு தெரியுங்களா? என் காது
செவிடாயிட கூடாதான்னு நான் நித்தம் ஏங்குறேன். அதுகூட
ஒரு குடுப்பினை தாங்க எனக்கு.//
மிகவும் அழகிய படைப்பு. 25.12.2012 வலைச்சரம் பார்த்து வந்தேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.