Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Friday, December 31, 2010

எச்சில் இலை பலகாரம்



      அந்த விஸ்தாரமான திருமண மண்டபத்தில் திருமணம்
முடிந்து முதல் பந்தி நடந்துக் கொண்டிருந்தது.  சாப்பிட்டுக்
கொண்டிருந்தவர்களின் இலையையே வைத்தக் கண்
வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பவுனு.

      பம்மி பம்மி போனவள் நீண்ட கழியின் கீழே கும்பலாய்
அமர்ந்திருந்த அவளின் சகாக்களை நோக்கி மெல்ல
கிசுகிசுத்தாள்.

     “ஏய் குப்பு, நாகு, பாப்பா உங்கள நம்பிதான்டீ இந்த
காரியத்துல இறங்குறேன்.”

     “அட, நீ ஒன்னு.  எத்தினி தபாதான் அதையே சொல்லீனு
கிடப்ப.  எல்லாம் பாத்துக்கலாம் வா…”  வேகமாக
இடைமறித்து வசனம் பேசினாள் சாயம் போன கத்திரிப்பூ
சேலை அணிந்திருந்த பாப்பா.

     “அதில்லடீ, கல்யாணத்துக்கு வந்துக்குற ஜனத்த
பாத்தா மிச்சம் மீதி மீறுமான்னு தெரில பாப்பா.  அதான்,
ஒரே கவலையா கீது… வேன்னா என் பொண்ணு வனஜாவோட
தோட சேட்டு கடையில வெச்சி ஓட்டல்ல சாப்பாடு
சொல்லிடலாமா… ம்..”

     “யக்கா, சும்மா கிட.  ஏற்கனவே அந்த சுப்பு கடன்காரப்
பய பத்தாயிர ரூவா கடனுக்கு தினம் வந்து கூவிட்டு போறான்.
இதுல எங்கிருந்து நீ செலவு வெச்சிக்கப் போற.  பாவம், நம்ம
வனஜா குட்டி போட்டுனு இருக்கறதே அந்த ஒத்த தோடுதான்.

      யக்கா, காத்தாலயே சமையக்கட்டாண்ட பாத்தேன்.
புலவு சோறு ஒரு ஊருக்கே ஆவுறாப் புல கிளறி வெச்சிருக்கு.
புலவு சோறு, வெள்ள சோறு, குழம்பு, ரசமெல்லாம் மீந்தா
நமக்கே குடுத்துடுவாங்கக்கா.  ஆனா, எந்த கல்யாணத்துலயும்
தித்திப்ப மட்டும் வூட்டுக்குத்தான் எடுத்துனு பூடுவாங்க.  அதே
கணக்கா வடை கூட கிடைக்காது.  இலை எடுக்குறச்சயே பாத்து
எடுத்து வச்சாத்தான் உண்டு.”

    “பாத்து நாகு… எச்சில் பட்டது.  பாதி சாப்பிட்டு மீதி
வச்சது இதெல்லாம் வேணாம்.  இந்த வயசான ஆளுங்க,
சர்க்கரை நோவுக்காரங்க இவங்கெல்லாம் சாப்புடாம வுட்டு
வெச்சிருப்பாங்க.  அத மட்டும் தனியா கவருல போட்டு
எடுத்தாந்திடுங்க.  ஒரு இருவத்தஞ்சு தேறுச்சுனா போதும்.
மாப்புள்ள வூட்டு ஜனத்துக்குத்தான்.”

     “சரி.. வனஜா குட்டிய சிங்காரிச்சுனு இருக்க சொன்னியா,
மாப்புள்ள வூட்டுக்காரங்க டான்னு 1 மணிக்கு வந்துடுவாங்கன்னு
சொன்னே.  நீ போறதுக்கே எப்படியும் 12 ஆயிடும்.”

     “ம்… சொல்லிட்டுதான் வந்துருக்கிறேன்.  எப்படியோ…
மாரியாத்தா இந்த சம்பந்தத்தையே முடிச்சி குடுத்துடு, ஆடிக்கு
முந்தியே ஒரு தபா கூழ் காச்சி ஊத்துறன்டீயம்மா” என்றபடி
மேலே பார்த்து கண்மூடி கும்பிட்டாள் பவுனு.

      தாலி  இல்லாத அவளின் வெறுங் கழுத்தில் கத்திரி
வெயிலின் புண்ணியத்தில் மொட்டு மொட்டாய் வியர்க்குருகள்
கண்ணை உறுத்தின.  பச்சை நிற தேய்ந்த ரப்பர் வளையல்கள்
கணக்கு வழக்கின்றி இரு கைகளிலும் மாறி மாறி அணிந்திருந்தது
அவளுக்கு எடுப்பு கூட்டவில்லை.  நைந்து போன ரேசன் சேலை,
தொள தொள ரவிக்கை, தாரில் பால் கலந்தாற்போன்ற நிறம்.

      பந்தி முடிவதை பார்த்து கையில் இலை அள்ள பெரிய
கூடையும் இடுப்பில் சொருகிய கவர் வெளியே
தெரியாதவண்ணம்புடவை கொசுவத்தில்
மூடியபடியுமாக இலை எடுக்க பந்தி சபைக்கு வந்தாள்.
அவளின் சகாக்களும் சேர இலை எடுக்கும்படலம்
ஆரம்பமானது.

      பந்தி பார்ப்பவர்களின் “ம்.. சீக்கிரம், ஆச்சா, முடிஞ்சுதா
சுத்தம் பண்ணு விரசா…” போன்ற அதட்டல் உருட்டல்
பேச்சுக்களின் இடையே இவர்களின் தித்திப்பு எடுக்கும்
தேடல் கசந்தது.

     “நின்னு நிதானமா எடுத்தா நாலுல ரெண்டு பொறுக்கலாம்.
அப்படி விரட்டி காதாண்ட கத்துறானுவ, அவங்க எதிரில் எப்புடி
பவுனு எடுக்க” சிணுங்கினாள் குப்பு.

     எப்படியோ, இரண்டே இரண்டு ஜாங்கிரியை பொறுக்கிக்
கொண்டு வந்திருந்தாள் நாகு.

    “ஐயையோ, இந்த கல்யாண சாப்பாட நம்பி மோசம்
போயிடுவனா” பதறினாள் பவுனு.

     “மொத ரெண்டு பந்திக்குத்தான் நம்மட்ட சீறுவாங்க.
பொறவு ஒரு ஈகாக்கா கண்டுக்காது.  பாத்துக்கலாம் தைரியமா
இருக்கா,” நம்பிக்கை கொடுத்தாள் பழையபடி பாப்பா. 
இரண்டாம் பந்தியில் ஒரு பத்து ஜாங்கிரி, ஒன்பது வடை என
சேர்ந்தது.  நாலு பந்தி முடிய 28 ஜாங்கிரி, 30 வடை, கொஞ்சம்
சிப்ஸ் என இருந்தது.

      “அடியே பாப்பா, சத்தரத்துக்காரர்கிட்ட சொல்லி மீந்த
பலகாரத்த குடுக்க சொல்லுடி.  எனக்கும் மணியாவுது.”

      மெல்ல சத்தரத்துக்காரர் காதில் போட்டாள் பாப்பா.
எண்ணெயில் போட்ட கடுகாக தாளித்தார் சத்தரத்துக்காரர்.
“அப்படியின்னா அவசரம், கலெக்டர் வேலைக்கா ஓடப்
போறீங்க? இன்னிக்கு மீதி கீதி எதுவும் கிடைக்காது. 
பக்கத்துல இருக்குற பார்வையற்றோர் பள்ளிக்கு
சாப்பாடெல்லாம் போகப் போவுது. இன்னும் 5 நிமிஷத்துல
வேன் வந்துடும்.  ஆக்கி அரிச்ச பாத்திரத்த அலசி எடுக்குற
வேலைய பாரு… போ… போ…”

       தலையில் இடிவிழுந்த கதையாக கேட்டு மருகினாள் பவுனு.
பாப்பா, நாகு, குப்புக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது. 
வூட்டுல கிடக்குற வேலய வுட்டுட்டு இந்த வேலைக்கு வந்ததே
இந்த சாப்பாட்ட நம்பி தான்.  சும்மா இருக்குற நாளெல்லாம்
அண்டா சோறு குடுப்பாங்க.  இப்படி நம்பி மோசம்
போயிட்டேனே.  கண்கள் கலங்கிவிட்டது பவுனுக்கு.

      இனி வீட்டிற்கு போய் வனஜாவின் தோடை அடகு
வைப்பது என முடிவிற்கு வந்தவளாய் கண்களின் வழியே
எட்டிப்பார்த்த கண்ணீருக்கு முட்டுக்கட்டை போட்டபடி
தோழிகளுக்கு  கைகளால் சைகை செய்தபடி புறப்பட்டாள்.

      பார்வையற்றோர் பள்ளி வேன் வந்து வாசலில் நின்றது.
தயாராக இருந்த சாப்பாட்டை எறும்பை போல் வரிசையாக
வண்டிக்கு எடுத்துச் சென்றனர் சப்ளையர்கள்.

      அதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த பட்டு
வேட்டி நபரிடம் பம்மி சென்ற பாப்பா கும்பிடு போட்டபடி
மெல்லகேட்டாள்.  “ஐயா, எங்க புள்ள குட்டி எல்லாம்
வூட்டுல பசியில் காத்துக்கினு கிடக்குதுங்க.  கொஞ்சம்
புலவு சோறும் சால்னாவும் மட்டும் கொடுத்தாக்கா
உங்களுக்கு புண்ணியமாய் போவும் சாமி.”

     அந்த பட்டு வேட்டி நபருக்கு முகம் சுருங்கிப் போனது.
என்ன நினைத்தாரோ சற்று நேரத்திற்கெல்லாம் “யோவ்,
 அந்த ரெண்டு டிபன அப்படியே நிறுத்து.  இவங்களுக்கு
கொடுத்துடு. நம்ம விசேஷத்துக்கு வேலை செஞ்சவங்க. 
திருப்தியா போவட்டும். அதான் நிறைய இருக்கே.”

      நொந்துக் கொண்டு வெளியேறுகையில் பவுனுக்கு காதில்
தேன் ஊற்றுவதாய் இருந்தது இந்த சேதி.

     “யக்கா… இந்த இரண்டு டிபனையும் நீயே வூட்டுக்கு
எடுத்துனு பூடு.  நாங்கெல்லாம் இந்த சாமான துலக்கி
கவுத்துட்டு வர்றோம்.”

      “சரி டீ,” கைகளில் இரண்டு டிபனையும் எடுத்துக் கொண்டு
மகிழ்ச்சியுடன் கிளம்பினாள்.  இடுப்பு மறைவில் சொருகியிருந்த
கவர் வழுக்கி விழுந்து மூன்று ஜாங்கிரி கீழே விழ சரியாக வந்து
சேர்ந்தான் சத்திரத்துக்காரன்.

     “ஐயா, இதுங்களுக்குப் போய் பெரிய மனசு பண்ணீங்களே.
 நீங்க ஸ்வீட்டே கொடுக்கல.  சொல்லாம கொள்ளாம திருடினு
போவுதுங்க.”

      இத்தனை வருஷத்துல எவ்வளவு உழைச்சி தேய்ஞ்சும்
திருட்டு பட்டம் வாங்கியதில்லை பவுனு.  நிலை குலைந்து
நின்றுவிட்டாள்.  கண்களிலிருந்து குபுக்கென கண்ணீர்.

     விடுவிடுவென நடந்து சத்திரத்துக்காரன் முன்னால்
வந்தாள் பாப்பா.

    “யோவ், உனக்கு தெரியுமாய்யா.  அந்தக்கா எடுத்தத நீ
பாத்தியா, சாமி மேல சத்தியம் பண்ணு.  எங்க புள்ளைங்க
மேல சத்தியமா சொல்றோம், பந்தியில இருந்த எச்செலயில
மிச்ச மீதிவச்ச தித்திப்பதான்யா காஞ்சு போன எங்க புள்ள
குட்டிங்களுக்கு தூக்கினு போறோம்.  அதுகூட
பொறுக்காதாய்யா உனக்கு.”

     இடைமறித்த பட்டு வேட்டி நபர் சத்திரத்துக்காரரை
அமைதிப்படுத்தி பவுனை அனுப்பி வைக்கும்படி சைகை
செய்தார்.

      தகிக்கும் வெயிலில் வெறுங்காலுடன் வீட்டிற்கு வந்து
சேர்ந்த பவுனுக்கு  இந்த சோத்துக்கா இந்த கதியென… விசிறி
கடாசிவிடலாம் போன்ற தோணல்.

     மெல்ல எடுத்து வந்த சோத்தை வாளியில் கொட்ட
யத்தனித்தாள்.

      “வனஜா… வனஜா… தயாராயிட்டியா, என்னடி பண்ற,
ஒரு எட்டு இங்கு வா…”

      கூப்பிட்ட குரலுக்கு பதில் வராததால் அந்த பத்துக்கு
இருபதென தடுக்கப்பட்ட வீட்டில் தேடினாள்.  கண்ணாடியின்
மேல் ஒட்டப்பட்டிருந்த அந்த கடிதத்தை எடுக்க அவள் கைகள்
நடுங்கியது.

      அம்மா, என்னை மன்னிச்சிடு.  உனக்கு எத்தினி முறை
ஜாடமாடயா சொல்லியும் நீ புரிஞ்சுக்கல.  உனக்கு ஜென்ம
பகையான நம்ம மாமா பையன் அருணோட கல்யாணம்
கட்டிக்கினு  இந்த ஊரை விட்டே போறேன்.  என்னைத்
 தேடாத.இப்படிக்கு வனஜா.

      கண்கள் இருள தலையில் கைவைத்தபடி அப்படியே
சாய்ந்தாள் பவுனு.  அழக்கூட திராணியின்றி அண்ணாந்து
வெறித்துக் கொண்டிருந்தாள்.

வீடெங்கும் புலவு சோறின் வாசம் பரவிக் கொண்டிருந்தது.


 நன்றி:தேவி

1 comment:

  1. அழகான ஆரம்பம்.... அசத்தலான கதை சொல்லும் பாங்கு என்று மிளிர்கிறீர்கள் பவித்ரா.... என் கவிதைகளை krishnapriyakavithai.blogspot.com என்ற முகவரியில் போய் பாருங்களேன்....

    ReplyDelete