21 வயது கல்லூரி மாணவி வித்யா. திருமணமாகி ஓராண்டே ஆன நிலை. சமீபத்தில் தன் கணவனை ஒரு விபத்தில் இழந்துவிட்டாள். கணவனின் உடல் இன்னும் வீட்டுக்கு வராத நிலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டாள். அவள் தற்கொலைக்கு முன் தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறாள். அதில் கட்டிய கணவன் இறந்த பின் மனைவிக்கு செய்யும் சடங்குகள் என்னை அச்சுறுத்துகிறது. என் வீட்டில் உள்ளவர்களோ பழமையில் ஊறியவர்கள். என்னால், அந்த இம்சைகளை தாங்க முடியாது. என் கணவன் சென்ற இடத்திற்கே நானும் போய்விடுகிறேன் என்று இருந்ததாக சொல்லப்படுகிறது.
வித்யா ஏன் தற்கொலை செய்து கொண்டாள்? தற்கொலைக்கு முன் என்னென்ன நினைத்திருப்பாள்? சடங்கு என்ற போர்வையில் சதக் சதக் என வெட்டி கூறுபோடும் அவலத்தை நினைத்து பார்த்திருப்பாளோ?
பிறந்தது முதல் வைத்திருந்த பொட்டும், தலை கொள்ளாத பூவும் 15 நாட்களுக்கு மேல் இனி நமக்கில்லை என்ற நிஜம் சுட்டிக்காட்டியிருக்குமோ? ஈமக்காரியத்துக்கு வாங்கி வந்த புடவைகளை முக்காடாக போட்டு போட்டே மூச்சு திணறடிக்கும் கூட்டத்திற்கு நடுங்கியிருப்பாளோ? இனி உன் முகத்தில் விழிப்பது லாயக்கில்லை என சகுனம் பார்க்கும் கூட்டத்திடம் எப்படி காலம் முழுவதும் கழிப்பது என்ற எண்ணமிருக்குமோ? முகம் தெரியாத அந்த பெண்ணிற்காக… இப்படி என் மனதில் தோன்றிய அடுக்கடுக்கான கேள்விகள்.
எனக்கு திருமணமான புதிதில் என் நெருங்கிய உறவினர் ஒருவர் காலமானார். அவரின் மனைவிக்கு வயது 71. அவர் அழுது ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தபோதே, நான் அத்தை முறை நான் பூவைத்தே ஆக வேண்டும் என்று 3 முழ பூவைக் கொண்டு வந்து அந்த குருவிக்கூடு போன்ற சிறு கொண்டையில் திணித்தனர். ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று வினவியதற்கு, இதே இளந்தாரியா இருந்தா ’பூ என்ன ஜடையே தைப்போம்’ என்றார்கள். அடடா! ஜடை தைக்கும் நேரமா அது… இறந்தவரின் மனைவி யார் என்பது உறவினர்களுக்கு சரியாக தெரிய வேண்டுமாம். அது சரி!
பின் சடலத்தை குளிப்பாட்டும் முன்பு, அந்த பாட்டியையும் எதிரில் அமர வைத்துவிட்டு, தலைக்கு நீருற்றி பழுக்க மஞ்சள் பூசி, 2 ரூபாய் நாணயம் அளவு குங்குமம் இட்டு, பூ வைத்து அவரை அலங்கரிக்கிறேன் பேர்வழி என்று அலைகழிக்கிறார்கள். ஏற்கனவே சாப்பிடாமல் அழுது அழுது களைத்திருந்தவருக்கு ஜன்னி வந்து மயங்கியே போனார். உடனே அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை. முதன்முதலில் அப்படியொரு காட்சியை அன்றுதான் பார்த்தேன். இப்படியெல்லாமா நடக்கிறது என மனம் பதைபதைத்தது. சொந்த பந்தங்கள் இதை வேடிக்கை பார்க்கின்றனரே அன்றி, யாரும் தடுக்க முன்வருவதில்லை.
நாங்களெல்லாம் இதுபோன்ற சடங்குகளுக்கு கட்டுப்படவில்லையா? இதுபோன்ற கஷ்டங்களை நாங்கள் படவில்லையா என்பதே அவர்களின் கேள்வி. அவர்கள் வேதனைப்பட்டது உண்மைதான். ஆனால், அதேபோன்ற மனவேதனையை இன்னொரு பெண் அனுபவிக்கக் கூடாது என்றல்லா நினைக்க வேண்டும்?
இதெல்லாம் என்ன ஜுஜுபி. அந்த காலத்தில் நாங்கள் அனுபவித்ததை எல்லாம் சொன்னால் ரத்தக் கண்ணீரே வடிப்பீர்கள் என்று சொல்லத் தொடங்கினார் அந்த பிராமணப் பெண்மணி. கேட்ட என்னால் ஒருவார காலத்துக்கு சரிவர தூங்க முடியவில்லை. அதைப் பற்றிய ஒரு சின்ன பிளாஷ்பேக்கிற்கு போவோமா…
அன்றைய இந்திய சமூகத்தில் குழந்தைத் திருமணம் மிக சகஜம். அதேபோல குழந்தை விதவைகளும் அதிகம். சென்னை பிரசிடென்சியில் 1911ல் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு வயது கூட ஆகாத விதவைகள் 31 பேர். ஐந்து வயது நிரம்பாத விதவைக் குழந்தைகள் 673 பேர். 1928ம் ஆண்டு கணக்கின்படி, முப்பது வயது நிரம்பாத விதவைகள் 4 லட்சம் பேர். இத்தனைக்கும் அப்போது மக்கள் தொகை மிக மிகக் குறைவு.
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 1751 முதல் 1791 வரை நடந்த பெண்களின் தற்கொலைகள் பற்றி ஆய்வு செய்த அறிஞர் குணே, தற்கொலை செய்துகொண்டு இறந்தவர்களில் பெரும்பாலான பெண்கள் பிராமண விதவைகளே என்று கண்டறிந்தார். கணவன் இறந்த மறுநொடியே விதவைக்கான சித்ரவதைகள் தொடங்கி விடுகின்றன. இறந்த புருஷ்னின் சடலத்துக்குப் பக்கத்தில் மனைவியையும் கிடத்துவார்கள். குடம் குடமாக தண்ணீர் கொட்டிக் கொண்டே இருப்பார்கள். அவளுக்கு சாப்பிட எதுவும் தரமாட்டார்கள். குடிக்க ஒரு வாய்த் தண்ணீர் கூட தரக்கூடாது என்பது விதி. கடைசிச் சடங்குக்கு சுடுகாடு வரை இழுத்துச் செல்லப்படுவார்கள். பாடைக்கும் பின்னாலே வருகிற பிராமண விதவையை இதர பிராமணப் பெண்கள் யாரும் தொடக்கூடாது. காரணம், விதவையானதும் அவள் தீண்டத்தகாதவளாகி விடுகிறாளாம். தீண்டத்தகாத சாதிப் பெண்கள் இருவர்தான் அவளை இழுத்து வருவார்கள். விதவையின் நிழல்கூட சுமங்கலிகளின் மீது விழக்கூடாது. நா வறட்சியில் அவள் குடிக்கத் தண்ணீர் கேட்டால் யாரும் தரக்கூடாது. மீறிக் கொடுத்தால், கொடுத்தவள் தீட்டாகி விடுவாள். கொடுத்தவளுக்கு பெரிய தண்டனைகள் காத்திருக்கும். விதவையை இழுத்துச் செல்லும் தீண்டத்தகாத பெண்கள்தான் அவள் கழுத்து, காது, மூக்கில் இருக்கும் நகைகளை விலக்குவார்கள். கணவனுக்கு கொள்ளி வைக்கப்படும்போது, விதவைப் பெண்ணை ஆற்றில் இறக்கி கழுத்து வரை நீரில் நிற்க வைப்பர். கணவனின் பிணம் வெந்து முடியும் வரை அப்படியே அசைவின்றி நீரில் நிற்கவேண்டும். எத்தனை மணி நேரமானாலும், சரி.
வயதுக்கு வரும் முன்பே திருமணமும் முடிந்து விதவையாகிவிட்ட குழந்தைகள், வலுக்கட்டாயமாக தாய் வீட்டிலிருந்து வரவழைத்து கணவன் வீட்டில் வேலைக்காரியாக்கிவிடுவதும் நடந்திருக்கிறது. அப்படி ஒரு இளம் விதவை பின்னாளில் விதவைகள் இல்லத்தில் தங்கிப் படிக்கச் சென்றபோது, அவளுக்குப் பதிலாக நியமித்திருக்கும் தங்கள் வீட்டு பணிப்பெண்ணுக்கு ஆகும் செலவை நஷ்ட ஈடாகத் தரவேண்டும் என்று (இறந்துவிட்ட) கணவன் வீட்டார் விடுதி நிர்வாகத்திடம் கேட்டுப் பெற்ற நிகழ்ச்சியெல்லாம் நடைபெற்றிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அப்பப்பா… அதிலிருந்து நமது சமூகம் இவ்வளவு தூரம் முன்னேறி வந்துவிட்டது என்பதை நினைத்துப் பார்க்கவே எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது. ஆனால், இவை எல்லாம் அவ்வளவு எளிதில் நடைபெறவில்லை. அந்தரத்தில் ஆபத்தாய் கம்பி மேல் நடந்து கொண்டிருந்தது, தற்போது அதற்கென தனியே கப்பி சாலை போட்டு நடந்து கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம். வேத புராணங்கள், இதிகாசங்கள், உபநிஷத்துக்கள், நீதி இலக்கியங்கள் என எதை திருப்பினாலும், அவற்றில் எதிலும் பெண்ணுக்கு சரியான நீதி இல்லை என்ற கருத்து உறுதியாகிறது. இன்று ஆண்களிடமிருந்து பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று இன்று வாய் கிழிய பேசுகிறோம். ஆனால், பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்ற ரீதியில்தான் போய்க் கொண்டிருக்கிறோம்.
இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு திருமண விழாவிற்கு சென்றிருந்தேன். நான்கு மாதங்களுக்கு முன் தன் கணவனை இழந்த கைம்பெண் ஒருவர் விழாவிற்கு தன் தோழியுடன் வந்திருந்தார். அவரை நன்கு அறிந்த சில பெண்கள் என் முன் இருக்கையில் குசுகுசுவென பேசிக்கொண்டது என் காதுகளில் கேட்டது. ’புருஷன் செத்து வருஷம் திரும்பல. அதுக்குள்ள கல்யாணத்துல கலந்துக்க வந்துட்டா பாரு’ என்றனர். கேட்பதற்கே கஷ்டமாக இருந்தது. விதவைப் பெண்கள் எப்படி வாழ வேண்டுமென்பதை அவர்களே முடிவு செய்யும் சுதந்திரம் தேவை. பிறந்ததில் இருந்து ஆசையாய் வைத்துக்கொண்டிருந்த பூவுக்கும், பொட்டுக்கும் கணவனை அடையாளமாக சொன்னது யார்? கணவன் கட்டிய தாலி என்பதால் அதை தூக்கி எறிய வேண்டுமா? நேற்று வரை சூட்டி அழகுப் பார்த்த பூவையும், பொட்டையும், இனி தன் வாழ்நாள் முழுதும் சூட்ட அருகதையற்றவள் என்பதை ஒரு பெண்ணால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? இதனால்தான் பல இளம் விதவைப் பெண்களுக்கு மனச்சிதைவு நோய் ஏற்படுகிறது.
இதுபோன்ற சடங்கு என்ற பெயரில் பெண்களின் சந்தோஷத்தை பறிப்பது சக பெண்கள்தான். மதங்களும் சாதிகளும் பெண்களுக்கென்றுதான் நிறைய சட்டத்திட்டங்கள் வகுத்திருக்கிறது. ஆயிரக்கணக்கான இதயங்களில் இருக்கும் இந்த கேள்விக்கு ஒன்று கூடிதான் பதில் தேடவேண்டும். விடியலை உருவாக்க வேண்டும். சில கேடுகளை களைய போரிடத்தான் வேண்டுமென்றால் போரிடுவதில் தவறில்லை.
நகர்ப்புறங்களில் இந்த விஷயத்தில் சற்று தேவலாம் என்றாலும் சொல்லிக் கொள்ளும்படியான முன்னேற்றம் இல்லை என்றே படுகிறது. அது சரி, மாற்றத்துக்காக குரல் எழுப்பும் பெண்ணை வீட்டிலும் சரி, வெளியிலும் சரி திமிர் பிடித்தவள் என்று முத்திரை குத்தி ஒதுக்குவதுதான் நம் சமூக வழக்கமாயிற்றே. எங்கள் எதிர்வீட்டில் வசித்த ஒரு நபர் சாகும் தருவாயில் தன் மனைவியிடம், நான் இறந்த பிறகு நீ கண்டிப்பாக பூ சூடிக்கொள்ள வேண்டும், பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அவர் இறந்த பிறகு அந்த பெண்ணின் தாயாரும், மாமியாரும் அவளை அவள் கணவர் சொன்னது போன்று வாழவிடவில்லை.
அழகு என்பது ஆடம்பரம் அல்ல, அதுவும் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு என்பதை அனைவரும் உணர வேண்டும்.
ஒரு சீன பழமொழி சொல்கிறது… சந்தேகம் வரும்போது கேள்வி கேட்கிறவன் அந்தநேரம் மட்டும் முட்டாள். கேள்வி கேட்காதவன் வாழ்நாள் முழுவதும் முட்டாள். நாமெல்லாம் வாழ்நாள் முட்டாள்களா?
மனம் கனக்கச் செய்து போகும் பதிவு
ReplyDeleteஒழிக்கப் படவேண்டிய இந்த சமூகஅவலத்தை
மிகச் சரியாகப்பதிவு செய்துள்ளீர்கள்
படிக்க படிக்க மனம் பதறுகிறது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தயவு செய்து வேர்ட் வெரிஃபிகேசனை நீக்குங்கள்
ReplyDeleteபின்னூட்டமிடுபவர்களை அது அதிக சிரமப்படுத்தும்
பலவிஷயங்களை அலசி ஆராய்ந்து ஓர் பயனுள்ள கட்டுரையாகக் கொடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteஉடன்கட்டை ஏறுதல் என்ற மிகப்பெரிய கொடுமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சமுதாயத்தில் பல மாற்றங்கள் வந்துள்ளன. இனியும் கட்டாயமாக வரவே செய்யும்.
ஆண் பெண் என்ற அனைவருமே, அதுபோல பாதிக்கப்படும் நபர்களின் மனநிலையை எண்ணிப்பார்க்க வேண்டும்.
அந்த பாதிப்புக்கு உள்ளாகும் நபரின் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்க வேண்டும்.
நல்லதொரு எண்ணங்களும், புரட்சிகளும், சமூக மாற்றமும் சமுதாயத்தில் ஏற்பட தங்கள் கட்டுரை பயன்படட்டும்.
வாழ்த்துகள். vgk
PLEASE REMOVE "WORD VERIFICATION" AS TOLD BY OUR Mr RAMANI Sir.
ReplyDeleteஇது பின்னூட்டமிட வருபவர்களுக்கு மிகுந்த எரிச்சலைத் தரக்கூடியது என்பதை தாங்கள் தயவுசெய்து உணரவும்.
vgk
உங்கள் தகவலுக்கு நன்றி.'word verification'ஐ நீக்கி விட்டேன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஉங்கள் கட்டுரை தொடர வாழ்துகள்
ReplyDeleteஇந்த கட்டுரை நான் முன்பே படித்திருந்தாலும் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியை பார்க்கும் போது உங்கள் பதிவு ஞாபகத்திற்கு வந்ததால் இந்த பின்னூட்டம்:- இதை இப்படிதான் செய்ய வேண்டும்… என்று விலங்கு பூட்டி விடும் சம்பிரதாயங்களிலிருந்து மக்கள் எப்போது வெளிவருவார்களா..? அப்படியே ஓரிருவர் சுய சிந்தனையுடன் வெளி வந்தாலும் சுற்றியிருப்பவர்கள் மூட நம்பிக்கைகளை விதைத்து அவர்களை பயமுறுத்ததானே செய்கிறார்கள்..! சம்பிரதாயங்களை சொல்லி அச்சுறுத்தி வருபவர்களைதான் முதலில் நாம் விலக்க வேண்டும்.
ReplyDeleteபெண்களை புரிந்து கொள்ளாத சமூகம் அவர்களை அடக்கி வைக்கப் பார்க்கிறது.தற்போது மாற்றங்கள் ஏற்படுகின்றன.முழுமையாக மாற இன்னும் சில காலம் பிடிக்கும்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteநான் இலங்கையச் சேர்ந்தவர். தமிழ் நாட்டில் கணவன் இறந்ததும் மனைவிக்குச் செய்யும் விதவைச் சடங்கைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது, எனக்கு முழுமையான விளக்கம் அளிக்க முடியும்மா ? யாழ்பாணத்தில் எமது முறை வித்தியாசமானது, நீண்ட சடங்குகள் எல்லம் வைப்பதில்லை
நன்றி
உங்களின் கருத்தை படித்து அறிந்தேன்.நீங்கள் சொன்னது போல் பெண்களுக்கு பெண்கள்தான் எதிரி மாறாக ஆண்கள் இல்லை. ஆண்கள் சமூகம் பெண்களுக்கு விட்டுகொடுத்ததினால் பெண்ணின் சுதந்திரம் பாதியளவு மீண்டுள்ளது. ஒரு பெண்னிற்காக பெண்களின் சமூகம் எதிர்த்து போராடினால் அன்றே பெண்சுதந்திரம் முழுமை அடைந்துவிடும்.ஒரு பெண்ணாக பெண்ணிற்கு நடக்கும் அவலம் கண்டு மிகவும் வருந்துகிறேன் மாற்றம் வேண்டுகிறேன்.
ReplyDelete