சீறும் சிறப்புமாக மகள் ரம்யா திருமணம் நடந்து
முடிந்ததில் ஆனந்தம் தாண்டவமாடியது மீனா
உள்ளத்தில். திருமணம் முடிந்த மூன்றாம்
நாள் மாப்பிள்ளையுடன் மகள் ரம்யாவை அவர்கள் வீட்டுக்கு அனுப்பும் பரபரப்பில்
மீனாவும் கணவர் பாண்டியனும் சுழன்று கொண்டிருந்தனர்.
மதகு திறந்த அணையாய் கண்ணீர் வெள்ளம் பொங்கி
வழிய விடைபெற்றாள் புதுமணப்பெண். அவளுக்கு பிரியா விடை
கொடுத்து வீட்டுக்குள் வந்த மீனா, பூஜையறைக்கு
ஓடி அங்கே
தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள்.
“என்ன மீனா, இப்படி நடந்துக்கற. ரம்யா
வீட்டிலே
இல்லாதது எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. அதுக்காக பொண்ண
பெத்துட்டு கட்டி கொடுக்காம வீட்லயே வச்சுக்க
முடியுமா?
கண்ட்ரோல் யுவர்செல்ப்” என்றார் பாண்டியன்.
“இல்லங்க...ரம்யா
போனதுக்காக நான் அழல...” சன்னமான
குரலில் கண்களை துடைத்தபடி சொன்னாள் மீனா.
“பின்ன?”
“நம்ம
பொண்ணுக்கு நல்லபடியா கல்யாணம் செய்து புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தது ரொம்ப
திருப்தியா மன நிறைவா இருக்கு. ஆனா இந்த
சந்தோஷத்தை என்னை பெத்தவங்களுக்கு கொடுக்க தவறிட்டத நினைச்சு பார்த்தா மனசு பூரா
ஒரே குற்ற உணர்வா இருக்குங்க. சொந்த
பந்தங்க முன்னாடி அவங்களுக்கு பெரிய தலைகுனிவை ஏற்படுத்திட்டு, ஊரை விட்டே ஓடி
வந்தோம். அந்த வயசுல எனக்கு நீங்க மட்டும்
தான் முக்கியமா தெரிஞ்சீங்க. இப்ப பெத்தவங்க
நிலைமையிலே நின்னு பார்க்கறப்பதான் எனக்கு என்னை பெத்தவங்களோட நிலைமை தெரியுது. அதை நினைச்சு பார்க்கும் போது கண்ணீரை அடக்க
முடியலீங்க, நம்மளை மாதிரி நம்ம பொண்ணும்
அவ இஷ்டத்துக்கு ஓடிப்போயி கல்யாணம் செய்திருந்தா என்ன ஆகியிருக்கும். ஆனா, நம்ம பொண்ணு நமக்கு நல்ல பெயர் கிடைக்க வச்சுருக்கா. அவளைப்போல நான் இல்லாம போயிட்டேனேங்க...” நெகிழ்ந்து உடைந்தாள் மீனா.
இருவரின் பெற்றோர்
படங்களும் பூஜையறையில் சிரித்துக் கொண்டிருக்க... விழி முழுவதும் திரையிட்ட
நீருடன் மனைவியின் கண்ணீரை துடைத்தார் பாண்டியன்.
நன்றி:தினமலர்-வாரமலர்
No comments:
Post a Comment