வெறித்துப் போன வீதியிலே
விரித்து போட்ட பாலைவனமாய்
தன் முத்திரையை கோலோச்சி
புவனம் ஆள்கிறது வெயில்
பருத்த கொடுங்கோல் அரக்கனாய்
பிசுபிசுத்த ஈர நாக்கு விரித்து
கசகசப்புக்கிடையே பூமியை சுட்டெரிப்பினும்
நெகிழ்ச்சியான தருணங்களுக்கும் இங்கு இடமுண்டு
கத்திரி வெண்டை என
கண்ணில் படுபவற்றையெல்லாம்
வற்றலாக்கும் கலையில்
ஆழ்ந்திருக்கிறாள் அம்மா
விடுமுறையில் கொட்டமடித்தபடி
சொந்தங்களை வாசல்
பார்த்து வரவேற்று
உறவு பாலம் அமைக்கிறது வாண்டுகள்
பிள்ளைகள் படிப்பின்பால்
கிடைக்கும் தற்கால இளைப்பாறலில்
தேர் திருவிழாக்களில்
அசைந்தாடுகிறது பெண்மையின் மனம்
தர்பூசணியும் வெள்ளரியும்
பலாக்காயும் முலாம்பழமும்
குளுகுளுப்பிகளாய் வயிற்றை நிறைத்து
சண்டையிடுகின்றன மாங்காய்பிஞ்சுடன்
சுற்றுலா எண்ணத்தை
காய்ச்சி மனதினுள்
ஊற்றுகிறது வெக்கை
வியர்வை ஊற்றுக்கிடையே
தாமரை மலர்கள்
வைகறை தொட்டே
வெடித்து சிரிக்கிறது
தன் காதலனை பார்த்து
தண்ணீரை அனுபவித்து அருந்தியும்
மத்திம கால தம் பணிகளுக்கு
விடுப்பு விடுத்தும்
ஓய்வெடுக்கிறார் தாத்தா
தொடர் மழையை
வையும் சாபக்கேட்டின்
பிடி விலகுவது
கோடையில் மட்டுமே
தகிக்கும் நெருப்பாக மட்டுமின்றி
வசந்தத்தின் பெரு நதியாகவும்
திகழ்கிறது வெயில்
யதார்த்தத்தின் வாயிலில் நின்றபடி
வெக்கையின் ஈர நினைவுகள்
மூளைக்குள் தேங்கி குளிர
பெய்யென பெய்கிறது
மனதிற்குள் பெருமழை
பதிவுகளின் சாட்சியாய்
வரலாற்றின் நீட்சியோடு
நம்பிக்கையை நீர் கொண்டு
நெஞ்சில் விதைக்கிறது வெயில்
நினைவுகளை கட்டவிழ்த்தபடி...
தமிழன் டி.வி. கவியரங்கில் வெயில் குறித்து நான் வாசித்த கவிதை
//தமிழன் டி.வி. கவியரங்கில் வெயில் குறித்து நான் வாசித்த கவிதை//
ReplyDeleteமகிழ்ச்சி.
அருமையான வெயில். பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
தங்களின் சுறுசுறுப்புக்கு என் சூடான நன்றிகள்
ReplyDeleteஅருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி திண்டுக்கல் சார்
ReplyDelete