Friday, February 1, 2013
சதுரங்க காய்கள்
கதவு தட்டப்படும் ஓசையைக் கேட்டு திறந்த பொன்னி தலைகீழாய் புரட்டிப் போட்டது போல் ஒரு கணம் திக்கு முக்காடித்தான் போனாள். மாண்டார் மீண்டார் என இதுவரை அவள் கேள்விப்படாத சங்கதியை கண்முன்னே விதி நடத்திக் காட்டும்போது அவள் கதிகலங்கியதில் ஆச்சர்யமில்லை.
வெளியே கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன் சுனாமியில் காணாமல் போய் இறந்துவிட்டான் என தெரிவிக்கப்பட்ட தன் கணவன் சிதம்பரம் நின்றுக் கொண்டிருந்தான். கட்டுக்கதையாய் சில சங்கதிகள் புனையப்பட்டாலும் அனிச்சையாய் அவள் கண்கள் அவனின் பழுப்பேறிய வேட்டியினிடையே மறைந்திருந்த கால்களை நோட்டம் விட கீழிறங்கியது.
முன்பு போல் அல்லாமல் அவன் தோற்றம் வெகுவாக மாறியிருந்தது. தங்கமான கோதுமை நிறம் மங்கி கருத்துப் போயிருந்தான். நீண்டு வளர்ந்திருந்த மயிர்க்கற்றைகள் அவனின் முன்நெற்றியை மறைத்தவண்ணம் இருந்தது. ஒரு மாதமாய் சவரம் செய்யப்படாத தாடி, மெலிந்த தேகம், குழிக்கண்கள் என எண்ணற்ற மாற்றங்கள். தட்டுத் தடுமாறி வார்த்தைகள் வெளிவந்தன பொன்னியிடமிருந்து
உ …. உள்ளாற வாங்க மாமா …
மீன் செதில்களாய் காய்ந்து வெடித்து போயிருந்த உதடுகளை மெல்ல பிரித்தான். பொன்னி, உன்னைய திரும்ப பாப்பேன்னு சாமி சத்தியமா நினைச்சி பாக்கல புள்ள … நம்ம மவன் ராசு…
‘இருக்கான் மாமா, பள்ளியோடம் போயிருக்கான்’
புழக்கடையில் மாட்டுக்கு நாலு வெக்கப்பிரியை பிரித்து போட்டிருந்த தனவேல் காலடி சத்தம் கேட்டு முன் வாசல் வர, அப்போதுதான் பொன்னிக்கு தனவேல் தன் கழுத்தில் கட்டிய இரண்டாம் தாலி நினைவுக்கு வந்தது.
‘பொன்னி, யாரு புள்ள அது?’ தனவேல் கேட்ட கேள்விக்கு பதில் கூற பொன்னிக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது.
சி… சி… சிதம்பரம் மாமா. ராசோட அப்பா வந்துருக்காவ. நெருஞ்சி முள் சிக்கிய தொண்டையாய் மிக கஷ்டப்பட்டு வெளி வந்தன அவளின் வார்த்தைகள்.
பேயறைந்தவன் போல் ஸ்தம்பித்து நின்றான் தனவேல். மூளை செயலிழந்தது போல் ஒரு வெறுமை சட்டென ஆட்கொண்டது அவனை. தட்டுத் தடுமாறி ‘உள்ளாற வாங்க’ என்றான்.
மெல்ல படி தாண்டி உள்நடை பக்கம் வந்தான் சிதம்பரம்.
பக்கவாட்டில் அமைந்த சிறிய அறையில் தொங்கிய தூளியில் நீண்ட குரலெடுத்து அழ ஆரம்பித்தது குழந்தை.
அதை மாரோடு அணைத்தவண்ணம் வெளியே எடுத்த பொன்னியின் செயலும் தனவேலின் இருப்பும் சிதம்பரம் மனதில் பொறி தட்டியது. குழந்தையை தாங்கி நிற்கும் பொன்னியை தற்போது அவன் பார்த்த விதம், அவளால் தாங்க இயலவில்லை.
கண்கள் தரையை தவிர்த்து பிறவற்றை பார்ப்பதாய் இல்லை. மூவர் இடையிலும் ஓர் அமானுஷ்ய மௌனம். மௌனத்தை கலைக்க நல்லவேளையாய் ஊர்மக்கள் திரண்டு வாசல்வரை வந்திருந்தனர்.
‘ஏலே சிதம்பரம். இம்புட்டு நாளா எங்கவே போயிருந்த?’ கிராம பெரிசு கொக்கி போட்டார்.
‘எங்கிட்டோ போயி என்னென்னமோ ஆயி… சித்தங் கலங்கி சின்னா பின்னமாயி மறுபொறவி எடுத்துனு வந்திருக்கேன்’. எம்பழைய கத எதுக்கு… எம் பொஞ்சாதி புள்ளைய பாக்கலாம்ட்டு இதோ புத்தி தெளிஞ்சி புயக்காத்தா ஓடியாந்தேன். ஆனா…’ அதற்கு மேல் முடியாமல் அவனின் மார்பு புடைத்துக் கொண்டு அவன் விசும்புவதாய் சாட்சி சொன்னது.
‘எலே சிதம்பரம், கலங்காதய்யா. நாட்டாம்ய்யா வெளியுர் போயிருக்காவ. சேதி சொல்லி விட்டிருக்கு. உம்ம ஆயி அப்பனும் பக்கத்தூருலருந்து வரட்டும். நாள பஞ்சாயத்து கூட்டி பேசித் தீர்த்துக்கலாம்… ஏம்மா பொன்னி, இன்ன ராவு பொழுது இவன் இங்கயே தங்கட்டும். பள்ளியோடம் வுட்டு வந்ததும் அவன் புள்ளய கண்ணுல காமி. நாங்கெல்லாம் வாறோம்’.
பள்ளியோடம் விட்டு வந்த ராசு அப்பா என கூவியபடி தனவேலிடம் ஓடிப்போய் பள்ளியோட சேத்திக்காரன்களின் கதைகளை அளந்துக் கொண்டிருந்தான்.
‘அப்பா, யாருப்பா அவுக, நமக்கு சொந்தமா, எதுவும் பேசாம என்னயே வெச்ச கண்ணு வாங்காம பாக்குறாவ’.
உதடுகள் பிரிய மறுத்தன மூவருக்கும்.
தனவேல்தான் அடர்ந்த மௌனத்தை மெல்ல உடைத்தான்.
‘எனக்கு அண்ணன் முறைடா’.
‘அப்ப நான் பெரியப்பானு கூப்புடுவா?’
எவ்வளவு நேரம்தான் பொன்னி அடக்கிக் கொண்டிருப்பாள். அழுகை வாய்வழியே வெடித்துச் சிதறியது.
பொன்னியை யார் சமாதானப்படுத்துவது என தெரியாமல் இருவரும் தவித்தனர். மௌன யுத்தம் இருவருக்குள்ளும் அரங்கேறிக் கொண்டிருந்தது. பொன்னி ஏன் அழுகிறாள் என ஏதும் தெரியாமல் ராசு விழித்தான்.
மெல்லத் தன்னைத் தானே தேற்றி வந்திருந்தவனுக்கு ஒரு வா காப்பித் தண்ணியை போட்டுக் கொடுத்தாள்.
காடு கரை திரும்பி புதிதாக சேதி அறிந்தவர்கள் ஏதோ காட்சிப் பொருளை பார்ப்பது போல் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து சிதம்பரத்தை பார்த்தவண்ணம் இருந்தனர். பேசி ஒரு முடிவு எடுக்கலாம் என்ற சிதம்பரத்தின் ஆவலுக்கு முட்டுக்கட்டையாயினர் அவர்கள்.
இருளை இதமாக போர்த்திக் கொண்டது வானம். இரவு உணவை இரு கணவன்களையும் பக்கவாட்டில் அமர வைத்து பர்மாற வேண்டிய நிலை. உயிரை உயிரே பிய்த்துத் தின்னுவது போல் ஒரு குற்ற உணர்வு அவளை அரித்தது. யாரை நினைத்து யார் அழுவது. எந்த தெய்வத்தை துணைக்கு அழைப்பது. ஏதும் விளங்கவில்லை அவளுக்கு.
அந்த ஓட்டு வீட்டின் மெல்லிய விளக்கொளியில் மூவரும் படுத்து தூங்கிக் கொண்டிருப்பதாக ஒப்பனை செய்தவண்ணம் இருந்தார்கள்.
அடர்ந்த மார்கழி மாத பனி வெளியே பெய்துக் கொண்டிருந்தது. மனதெல்லாம் வெக்கையால் புழுங்கியது அவளுக்கு. மகாபாரதத்தில் திரௌபதியின் நிலை ஒருகணம் மனதில் வந்து போனது. அவள் இதிகாசக்காரி, ஏற்றுக் கொண்டார்கள். என் நிலை என்ன? …. ஐயோ.. ஐயனாரே, நாள தீர்ப்பு என்னவாவும். ஆளுக்கு ஒரு பிள்ளையென பெற்றெடுத்தாயிற்று. யாருடன் யாரை விட்டுச் செல்ல தீர்ப்பாகுமோ - நினைக்கையில் நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது. ஐயோ… இன்னமும் இந்த உசுரு உடம்போட உடும்பாட்டும் ஒட்டிக் கெடக்குதே, போய் சேர்ந்திரக் கூடாதா…
பரிதவிச்சு வந்துருக்க மனுஷன பாக்கறதா, பட்டமரமா நிக்கையில் வாழ்க்கை தந்த மவராசன பாக்குறதா…
பொன்னி தேர்ந்த அழகுக்காரி மட்டுமல்ல நல்ல குணவதி. யாரையும் வாய் சொல்லில் புண்படுத்தாத மனசு. இப்படிப்பட்டவளை இழக்க யாருக்குத்தான் மனம் வரும். இரு ஆண்களின் வயிறும் விறகின்றி எரிந்துக் கொண்டிருந்தது. யாருக்கும் உறக்கம் பிடிபடவில்லை.
நேற்று இரவு தனவேலுடன் இன்புற்றிருந்த இதேவேளையில் அவள் நினைத்துப் பார்க்கவில்லை இப்படிப்பட்ட அலைகழிப்பு இரவை அவள் அடையப் போகிறாள் மறுதினமே என்று. வாழ்ந்த காலங்கள் வெறும் பாலைவனத் தடங்களாக மாறிய உணர்வு. எந்த உறவில் உயிர்த்தன்மையை தேடுவது. வெம்பினாள். வீடெங்கிலும் உணர்வுக் குவியல்களின் உஷ்ணங்கள் பரவிக் கிடந்தது.
இவர்களின் கண்ணீர் இரவை காண சகியாமல் நிலவு வேகமாகவே மறைந்தது.
தூங்கும் மழலையை தோள்மேல் போட்டபடி பஞ்சாயத்தின் கிழக்கு மூலையில் நின்றிருந்தாள் பொன்னி.
பளீர் வெள்ளை வேட்டியில் நெற்றி முழுதும் இழுக்கப்பட்ட 3 விபூதி பட்டையுடன் நடுநாயமாக வீற்றிருந்தார் நாட்டாமை ஆதிகேசவன். அந்த விஸ்தாரமான அரச மரம் திரண்டிருந்த அத்தனை கூட்டத்திற்கும் வஞ்சனையின்றி நிழலை கொடுத்துக் கொண்டிருந்தது.
தனவேல் பொன்னியின் அருகாமையில் நிற்க சிதம்பரம் மக்களோடு மக்களாய் கலந்திருந்தான்.
முசுமுசுவென முணுமுணுக்க தொடங்கினர் ஊர்மக்கள். ‘ஐயோ பாவம்டி பொன்னி. இதே ஒரு ஆம்பளையாயிருந்தா ரெண்டு பொண்டாட்டிய வெச்சு வாழுனு உத்தரவு போட்டுருவாக …ம் பொட்டச்சி கதயில ரெட்ட புருஷன் ஒத்த வூட்டுல ஏத்துக்கிட மனம் வருமா. நம்ம சமூகம்தான் வுட்டுருமா. என்ன தீர்ப்பாவப் போவுதோ…
ஏன்கா, ரெண்டு புருஷனும் அவ எனக்குத்தேன் வேணும்னு அடம்புடிச்சா யாரு பக்கம் நாட்டாம தீர்ப்பு சொல்வாரு. பொன்னியுந்தான் யாரு பக்கம் நிப்பா. அந்த புள்ளைக்கு கடவுள் இந்த சோதன செய்யக்கூடாது கா.
இந்த தனவேல் பய ஒரு வாய் செத்தவன். அவனுக்குனு பரிஞ்சி பேச பொன்னியவுட்டா யாரும் இல்ல.
ஆமாமா… சிதம்பரத்தோட ஆத்தாக்காரி ராட்சஷி. பொன்னிய வுட்டுக்குடுக்க மாட்டா…
சரிதான், … சிதம்பரத்துக்கு வேற ஒரு பொன்னப் பாத்து கல்யாணம் கட்டி வெக்கலாமுல்ல.
சித்தங்கலங்கி சீரானவன கட்டிக்க எவடி ஒத்துவருவா அதுவும் இந்த காலத்துல…
ம்… வரவேண்டியவங்கெல்லாம் வந்துட்டாவளா… சுப்பா ஆரம்பிக்கவா, கணீர் குரலில் அடியெடுத்து வைத்தார் நாட்டாமை.
சிதம்பரத்தோட ஆயி அப்பனும் வந்துட்டாங்கய்யா. பொன்னிக்கும் தனவேலுக்கும்தேன் யாரும் கிடையாதே. ஆரம்பிச்சுடலாங்கய்யா.
சிதம்பரம் 10 வருட காலம் எங்கிருந்தான் எப்படியிருந்தான் என்பதை அவன் வாயாலே கேட்டறிந்தார். ஊர்மக்கள் உச்சி கொட்டினர்.
ஆழ்ந்து கேட்டவர் தீர்ப்பு சொல்ல நிமிர்ந்து உட்கார்ந்தார். நம்ம கிராமம் இதபோல ஒரு பஞ்சாயத்து சங்கதிய பாத்ததில்ல. இது மொத தடவ. நம்மோடது முற்போக்கு கிராமம். அதாலதான், இதே சிதம்பரம் காணாம போய் இறந்துட்டான்னு சொன்னப்ப, கதிகலங்கி நின்ன பொன்னிக்கு விதவைத் திருமணத்த ஆதாரிச்சு தனவேலுக்கு அவள கட்டிக் கொடுத்தோம்.
இப்ப மனந்தளர்ந்து உயிர் ஒடுங்கி வந்திருக்க சிதம்பரத்துக்கு கண்டிப்பா ஒரு தொண தேவ. அதால பொன்னியும் அவ மொத புள்ள ராசும் சிதம்பரத்தோட வாழ வேண்டியது.
தனவேலு அவனுக்கு பொறந்த குழந்தய பாத்துக்க வேண்டியதுதான். அவன் இஷ்டப்பட்டா மறுகல்யாணம் பண்ணிக்கலாம்னு இந்த பஞ்சாயத்து தீர்ப்பு சொல்லுது.
நாலாப்பக்கமும் இடிஇடித்து தன் தலைமேல் விழுந்ததாய் உணர்ந்தான் தனவேல்.
பொல பொலவென கண்ணீர் கொட்டியது பொன்னிக்கு. தாலியை கழற்றி மாற்றலாம். மனதை அவ்வப்போது மாற்றிக் கொள்ள இயலுமா? தலை கோபுரத்தை இழந்த கோவில் போல் களை இழந்தது அவள் முகம். மாரோடு அணைத்து பால் கொடுக்கும் குழந்தையை மறந்துவிடுவதா. தவித்துப் போனாள்.
ஐயா, எனக்கு எந்த புருஷனும் வேணான். என் குழந்தைங்க ரெண்டு பேரையும் எங்கூடவே அனுப்பிடுங்க. நான் தனியா வாழ்ந்துக்குறேன்.
ஏ புள்ள, உனக்கு ரெண்டாங் கல்யாணம் முடிச்சு வெக்கச் சொல்ல மட்டும் ஒத்துக்கிட்ட. இப்ப ஏன் பஞ்சாயத்த எதிர்த்து பேசுறவ. அதல்லான் காணாது. தீர்ப்ப ஏத்துக்கத்தான் வேணும்.
ஐயா… தயவு காட்டுங்க.
ஏ புள்ள, இல்லாட்டி ஊர விட்டே ஒதுக்கி வச்சிடுவோம். ஜாக்கிரத.
நாட்டாமகாரய்யா… தீர்ப்ப திருத்திச் சொல்லுங்க.
சிதம்பரத்தின் உரத்த கரகரத்த குரல் கேட்டு அதிர்ந்து நின்றார் நாட்டாமை.
எல, உனக்காண்டி தானலே பேசினேன்.
‘என்னய உசுருக்குசுறா பாத்துக்கிட்டவ எம் பொஞ்சாதி. அவளுக்கு ஏற்கனவே நான் கொடுத்த கஷ்டமெல்லான் போதும்யா. செத்தவன் செத்தவனாவே இருந்துட்டு போறேன். புது வாழ்க்கை வாழுறவங்கள என் வரவு கெடுக்க வேணான் சாமி. என் புள்ளைக்கு நான்தேன் அப்பன்னு கூட தெரியல. அவன் இங்கிட்டு நல்லாருக்கான். அது போதும்யா’.
சொன்னவன் தனவேலின் கைபிடித்து தரதரவென இழுத்து வந்து பொன்னியின் கைகளுக்குள் திணித்தான்.
புள்ள, இந்த ஊர் எல்லைய என் பொணம் கூட இனி நெருங்காது. என்னைய பத்தி உருகாம சந்தோஷமா இருங்க… நான் வாரேன்… இல்லல்ல போறேன்.
‘மாமா, எனக்காண்டி நீங்க போவாதிய’. உலுக்கிய பொன்னியின் பேச்சு அவன் மனதுக்குள் சென்று சேர்வதற்குள்,
கண்களில் கசிந்த ஈரத்தை மறைத்தபடி திரும்பிப் பார்க்காமல் விடுவிடுவென நகர்ந்தான்.
‘எலேய்… சிதம்பரம்… என் ஐயா… என் பேச்ச கேளுய்யா. உன் புள்ளயயாவது ஒருக்க பாத்துட்டு போய்யா’ அரம்பியபடியே அவன் பின்னால் ஓடினாள் ஆத்தாக்காரி.
பள்ளியோடம் போய் தன் புள்ளையை ஒரு எட்டு பார்த்துவிட்டால், எங்கே தன் மனதிற்கு போட்ட இரும்பு கதவு தகர்ந்து விடுமோ என பயத்தில் அவனை பாராமலே ஊர் எல்லையை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது அவன் கால்கள். பின் எப்போதும் அது திரும்பவேயில்லை.
நன்றி:தினமலர்-வாரமலர்
Subscribe to:
Post Comments (Atom)
மிகவும் விறுவிறுப்பான கதை.மனதைக்கலங்க வைத்த கதை. சிதம்பரம் கடைசியில்ம் எடுத்த முடிவுவும் விட்டுக்க்கொடுத்தலும் பாராட்டுகுரியது தான்.
ReplyDelete//பொல பொலவென கண்ணீர் கொட்டியது பொன்னிக்கு. தாலியை கழற்றி மாற்றலாம். மனதை அவ்வப்போது மாற்றிக் கொள்ள இயலுமா? தலை கோபுரத்தை இழந்த கோவில் போல் களை இழந்தது அவள் முகம். மாரோடு அணைத்து பால் கொடுக்கும் குழந்தையை மறந்துவிடுவதா. தவித்துப் போனாள்.//
பொன்னியின் நிலை எந்தப்பெண்ணுக்குமே வரக்கூடாது.
// ஐயா, எனக்கு எந்த புருஷனும் வேணான். என் குழந்தைங்க ரெண்டு பேரையும் எங்கூடவே அனுப்பிடுங்க. நான் தனியா வாழ்ந்துக்குறேன்.//
அது தான் உண்மையான தாயுள்ளம். ;)
தினமலர் வாரமலர் வெளியீட்டுக்குப் பாராட்டுக்கள்.
ஐயா,
ReplyDeleteதொடர்ந்த உங்களின் வருகைக்கு மிக்க நன்றி. தங்களின் உணர்வுபூர்வமான விமர்சனத்திற்கு நான் தலை வணங்குகிறேன்.
முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என எண்ணினேன். அப்படியே இருந்தது. எதிர்பார்ப்புடன் படிக்க வைத்தது. பெண்ணிற்குதான் எதிலுமே சிரமங்கள். வாழ்த்துக்கள் தோழி
ReplyDeleteமுடிவை யூகித்திருக்கிறீர்கள். நன்றி தோழி.
Deleteஏங்க
ReplyDeleteகண்ண கலங்கவச்சுபுட்டிங்க போங்க....
இன்னைக்கு தூங்கும்போது நாளைக்கு என்ன வரப்போகுத்துன்னு தெரியாமதான் தூங்குறோம்... விடியல் நமக்கு என்னாத்த கொண்டுவருமோ. பொன்னி பாவம்தாங்க... ஆனாலும் ezhil பெண்ணுக்கு பரிஞ்சு பேசுராங்கன்னுதான் சொல்லுவேன்... சிதப்பரம் பாவமில்லையாங்க. அவனுக்கும்தான் தந்தைபாசம் வாட்டுது.... சரிங்க சரிங்க, அதெல்லாம் விடுங்க. இங்க உங்க கதையைத்தான் விமர்சிக்கனும், இல்ல... சாரி.
உயிரோட்டமுள்ள கதைதாங்க கண்ணை கலக்கும். உங்க கதை என் கண்ண கலங்கவச்சுடுசுங்க. stupendous.
ஒரு சின்ன குறை சொல்லலாமா? தப்பா எடுத்துக்காதிங்க.
கதைல வாரவங்க பேசிக்கிரமாரி வழக்குத்தமிழ்லயே உங்க நடை இருந்து இருந்தா இன்னும் எதார்த்தமா செமயா இருந்து இருக்கும்ல?...
- கண்ணன், தஞ்சையிலிருந்து.
தங்கள் வருகைக்கு நன்றி கண்ணன். தங்களின் யோசனைக்கும்
Deleteவிமர்சனத்திற்கும் நன்றிகள் பல.