Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Friday, April 6, 2012

நான்காவது கோணம்


இந்த கட்டுரையை எழுதுவதற்கு முன் சில கேள்விகளை எனக்குள்ளேயே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டேன்.  ஆம் இது சரிதான் என்ற முடிவுக்கு பின்னரே இதை எழுதுகிறேன்.  என்னை கடந்து சென்றவர்களில், பார்த்த உறவுகளிடத்தில், தெருவாசிகளிடத்தில் ஏன் பூ விற்கும் பாட்டியிடமிருந்தும் நான் ஆழ்ந்துணர்ந்த சில கருத்துக்களை இங்கு முன்வைக்க இருக்கிறேன்.  இதற்கு கண்டன குரல்கள் கூட ஒலிக்கலாம்.  ஏனெனில் நான் சார்ந்த இப்பெண் குலத்திடமிருக்கும் சில குறைகளை இங்கே அலசியிருக்கிறேன்.  நுழைவோமா….


    எனக்கு நன்கு அறிமுகமான குடும்பம்.  சில வருடங்களுக்கு முன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.  சில நாட்களிலேயே மாமியார் மருமகளுக்குள் கருத்து வேறுபாடு.  சில பல மனக்கஷ்டங்களுக்குப் பிறகு மருமகள் பிறந்த வீட்டுக்கே வந்துவிட்டாள்.  சமாதானம் பேச வந்த குடும்ப உறுப்பினர்களிடம் அந்த மருமகள் முன்வைத்த வாதம் என்ன தெரியுமா?  என் மாமியாரும் மாமனாரும் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.  அதன் பிறகே என் கணவருடன் வாழ்க்கை நடத்துவேன் என்பதே.  இதைக் கேட்டு அந்த குடும்பமே அதிர்ச்சி அடைந்தது.  மிக மிக அற்பமான ஒரு சிறு விஷயம் ஊதி பெரிதாக்கப்பட்டு இறுதியில் பலூனைப் போல் வெடித்துப் போயிற்று.

    இதில் விசேஷம் என்னவெனில் இருவரையும் தனிக்குடித்தனம் வைக்க அவனின் பெற்றோர் தயாராக இருந்தனர்.  கணவனுக்கு தன் மனைவியின் மேல் அன்பிருந்தும் அவள் சொன்ன அந்த வார்த்தைகளில் இருந்த உக்கிரம் அவர்களை பிரித்துவிட்டது.  ‘என் பெற்றோரை பலர் முன்னிலையில் அவள் காலில் விழ வைத்துதான் எனக்கு வாழ்க்கை என்ற நிலை வேண்டாம்’ என்று அந்த இளைஞர் விலகிக் கொண்டார்.

    ‘ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும்’ என சும்மாவா சொன்னார்கள்?  பூத்துக் குலுங்க வேண்டிய மரம் வீணாக பட்டுப்போய் யாருக்கும் பயன்படாமலேயே போய்விட்டது.  இதற்கெல்லாம் மூலகாரணம் அறியாமலும் அவசரத்திலும் நம் வாயிலிருந்து வெளிப்பட்டு விடும் அரக்க சொற்கள்.

    எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் வள்ளுவர் எழுதிவிட்டுப் போன ‘தீயினால் சுட்ட புண்’ என்ற குறள் இப்பொழுதுள்ள நடைமுறை வாழ்க்கைக்கும் பொருந்துகிறதென்றால் மனித உணர்வுகள் என்றும் சாகாவரம் பெற்றதற்கு சான்றாய் அல்லவா இருக்கிறது.

    குதிரைக்கு கடிவாளம் போட்டிருப்பது போல பெண்களாகிய நாம் நம் வாயினுள் சிற்சில பூட்டுகள் போட்டுக்கொள்வது அவசியமாகிறது.

    ‘சொந்தங்கள் சொல்லத்தானே பந்தங்கள்
    சோதித்துப் பார்த்தால் வேறு அர்த்தங்கள்’

    என்ற கவிதை வரிக்கு ஏற்ப வாழ்க்கையின் தத்துவங்கள், மாறுபட்டு வேறுபட்டு பயணிக்கின்றன.

    அதுமட்டுமல்ல பெண்களின் பாதுகாப்பிற்காக அரசு பல புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.  ஆனால் எத்தனை பேர் இதை சரியாக பயன்படுத்துகிறார்கள்?  புகுந்த வீட்டின் மேல் இருக்கும் தங்கள் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக் கொள்ளவே வரதட்சணை தடுப்பு சட்டத்தை பெரும்பாலும் மக்கள் பிரயோகிக்கின்றனர் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

    தற்போதெல்லாம் தம் பெண்ணுக்கு வரன் தேடும்போதே ‘மாப்பிள்ளையின் பெற்றோர் உடன் வசிக்கக்கூடாது, தனி வீடு பார்த்து பால் காய்ச்சிய பிறகுதான் தட்டையே மாற்றுவோம்’ என அடம் பிடிக்கும் பெண்ணை பெற்றவர்கள் இன்று பெருகி போயுள்ளனர்.  இந்த மனோபாவம் நம் நாட்டின் பாரம்பரிய நடைமுறைக்கு மாற்றாக உள்ளது.  நம்மை எதைநோக்கி அழைத்துச் செல்கிறது?  அப்படியானால் பிள்ளையை பெற்றவர்கள் தன் பிள்ளையை கட்டிக் கொடுத்துவிட்டு ஒரேடியாக தலைமூழ்கிட வேண்டுமா?

    ‘என் பெண் இங்கு சுதந்திரமாக வளர்ந்தவள்.  அவள் அங்கு போய் இன்னொருவருக்கெல்லாம் அடங்கி ஒடுங்கி ஏன் இருக்க வேண்டும்?” என்று நம்முன் வாதத்தை எடுத்து வைக்கிறார்கள், பெண்ணை பெற்றவர்கள்.

    இப்படிப்பட்ட எண்ணங்களை இளைய சமுதாயத்திடம் விதைத்தது யார்?  ஒன்றை இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.  விதைப்பதை ஒருநாள் அறுத்துத்தான் ஆக வேண்டும்.  பெரியவர்களிடத்தில் அன்பு செலுத்தி அவர்களிடம் பணிவாக இருப்பது ஒன்றும் அடிமைத்தனம் இல்லை.  ஆத்மார்த்தமாக உணர்ந்தால் அது ஒரு பேரின்பம்.  அதுமட்டுமில்லை அவர்களின் மீதுள்ள மதிப்பும் சமூக அந்தஸ்தும் உயரும்.

    பெரியவர்களை மதிக்கும் தன்மை பரவலாக குறைந்து வருவது வருத்தப்பட வேண்டிய விஷயம்.  ஒரு கல்லூரிப் பேருந்தில் பயணிக்க  நேர்ந்தபோது கேட்ட வாசகம் இது.  ‘ஏய் இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்... கனவெல்லாம் வருதா?’ ’அடச்சீ, அந்த வீட்டுல நுழைஞ்ச மறுநிமிஷமே அவங்க வீட்டு ஆளுங்களோட நெட்வொர்க்க கட் பண்ணனும்.  அப்பதான் அவரோட தொடர்பு எல்லைக்கு உள்ளே நான் இருக்க முடியும்.  அதைத்தான் யோசிச்சிட்ருக்கேன் என்றாள்.  கேட்பதற்கு கஷ்டமாக இருந்தது.  முன்பெல்லாம் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் பெண்களை உதாரணம் காட்டுவர்.  இப்படியே போனால் இனி இப்படிப்பட்ட சொல்லுக்கு அகராதியில் தேடித்தான் பொருள் காண இயலுமோ என்னவோ?

    பெண் சுதந்திரத்தை பற்றி நாம் வாய் கிழிய பேசுகிறோம்.  கிடைத்த சுதந்திரத்தை சரிவர பயன்படுத்த தெரிய வேண்டும்.  மேலும் தவறான வழிகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும் வேண்டும்.  சில பெண்கள் தம் கணவர்களை தான் வளர்க்கும் நாய்க்குட்டியைப் போல் கருதுகிறார்களோ என்ற எண்ணம் பல சமயங்களில் ஏற்படுகிறது.

    கணவனின் பேச்சை நான் கேட்பதில்லை என்பதை பொது இடங்களில் எப்படியாவது வெளிப்படுத்த எண்ணுகிறார்கள்.  பலர் இருக்கும்போது கணவன் எதிர்த்துப் பேச மாட்டான் என்ற நம்பிக்கையில் இதுதான் தருணம் என்று சத்தமிடுகிறார்கள்.  வாழ்வில் உள்ள பிடிப்பை நாம் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டுமானால், பிறரிடம் வேஷமற்ற பாசத்தைக் காட்ட வேண்டியது அவசியம்.  பிறரிடம் பிரியமாக இருப்பது என்பது பிறருக்கு நாம் செய்யும் நன்மை மட்டுமல்ல, நமக்கு நாமே செய்து கொள்ளும் நன்மையும்தானே.

    பாசமாக  இருப்பவர்கள் மற்றவர்களின் இதயத்தில் நீங்காத இடத்தைப் பிடிக்கிறார்கள்.  இப்படிப்பட்ட பெண்கள் வசதியற்றவர்களாக இருந்தாலும், பெரிய பொறுப்பில் இல்லாதிருந்தாலும் எல்லோராலும் நேசிக்கப்படுகிறார்கள்.  பாசமிகுந்தவர்களாக நாம் நடந்து கொள்ளும்போது நாம் புறக்கணிக்கப்படுவது இல்லை.  நாம் செய்யும் தவறுகள் கண்டுகொள்ளப்படுவது இல்லை.  நம் குறைகள் மறைக்கப்படுகின்றன.  நமக்கான முன்னுரிமை எவ்விடத்திலும் அதிகரிக்கிறது.

    நிறைந்த சபையிலும் பெண்களுக்கு நல்ல முக்கியத்துவம் கிடைக்கிறது.  அடுத்து, பெண்களுக்கு என்று இயற்கையாகவே இருக்கும் பொறுப்புகளை தண்டனையாகப் பார்க்க வேண்டாமே… ப்ளீஸ்! ஆதை அனுபவித்துத் தான் பார்க்க வேண்டும்.  குழந்தை வளர்ப்பு பற்றிதான் குறிப்பிடுகிறேன்.  விதிக்கப்பட்ட ஒன்றை, மாற்று இல்லாத ஒன்றை, வேறு வழியற்ற ஒன்றை பார்க்க வேண்டிய பக்குவத்தில் பார்த்தால் அது சுகானுபவம்!  பார்க்கக் கூடாத பாணியில் பார்த்தால் அதுவே தண்டனை!  நவீன யுவதிகள், வேலைக்கு போகும் பெரும்பாலான பெண்கள் இந்த நினைப்பிற்கு விதிவிலக்கல்ல.

    குழந்தைகளை வளர்க்க இயலவில்லை, பார்த்துக் கொள்ள இயலவில்லை என்று ஹாஸ்டலில் கொண்டு போய் தள்ளுவது அதிகமாக உள்ளது.  ‘நான் அவன் வருங்காலம் சிறப்பாக இருக்கத்தானே இப்படி ஓய்வில்லாமல் ஓடி ஓடி உழைக்கிறேன்.  அதனால் தான் அவனை ஹாஸ்டலில் சேர்த்தேன் என்றார் ஒரு இளம் தாய்.

    “உங்களுக்கு இருப்பது போல் எனக்கும் ஓய்வில்லாத வேலை உள்ளது.  என்னுடைய படிப்பு கருதி விடுதியில் சேர்த்தது போல் உங்களின் பாதுகாப்பு கருதி முதியோர் இல்லத்தில் சேத்திருக்கிறேன்.  அவ்வளவுதான்” என பிற்காலத்தில் கூலாக பை சொல்லிவிட்டு உங்கள் பிள்ளை செல்லலாம். 
                                         
    ஜப்பான், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் குழந்தை பிறப்பே வேண்டாம் என பெண்கள் தயங்குகிறார்கள்.  காரணம் பெண்களுக்கு இருக்கும் இயற்கையான தாய்மை குணம் மெல்ல மெல்ல மறைந்து வருவதுதான்.  பொருளாதாரத்தில் உலக நாடுகளில் முன்னிலையில் இருக்கும் ஜப்பானின் குடும்ப நிகழ்ச்சிகளில் இன்றைய நிலை என்ன தெரியுமா?  திருமணம், இறப்பு என்று எதிலும் கலந்துக் கொள்ள அவர்களுக்கு நேரமின்றி ஏஜென்சியை நாடுகின்றனர்.

    திருமண வைபவங்களுக்கும், துக்க விசாரிப்பிற்கும் ஆட்களை வாடகைக்கு அனுப்பும் ஏஜென்சிகள் அங்கு பெருகி விட்டனவாம்.  திருமணங்களில் வெறுமனே விசாரிப்பதற்கு ஒரு ரேட், சாப்பிட்டு வருவதற்கு ஒரு ரேட், மணமேடையில் ஏறி மணமக்களை வாழ்த்தி இரண்டொரு வார்த்தை பேசுவதற்கென எக்ஸ்ட்ரா ரேட்.  அதேபோல் தான் துக்கம் விசாரிக்கவும்.  இறந்தவரின் புகழ் பாடி அழுதுவிட்டு வரவும் எக்ஸ்ட்ரா சார்ஜ்.

    ஒரு மிகப்பெரிய நிறுவனம் சுமார் 10 ஆண்டுகளாக இந்த சேவையை (?) செய்து வருவதாக சொல்லி நம்மை அதிர்ச்சியடைய செய்கிறார்கள்.  பெண்களாகிய நம்மிடையே இருக்கும் பண்புநலன்கள் குறைய குறைய இப்படிப்பட்ட கூத்துக்கள் நம் நாட்டில் நடக்கவும் சாத்தியங்கள் இருக்கிறது.  இப்படியே போனால் ஒவ்வொரு வீடும் ஒரு அபார்ட்மெண்ட் ஆகிவிடும்.

2 comments:

  1. மிக அருமை, சகோதரி. தெளிவான நடையில் எளிய முறையில் கூறினீர்கள் பலரும் புரிய வேண்டிய ஒரு நிதர்சனத்தை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. விகடனில் அறிமுகப்படுத்தப் பட்டமைக்கு வாழ்த்துக்கள் .

    உங்கள் பதிவு அருமையாக , சிந்தனையை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
    சிந்திப்பார்களா நம் நாட்டின் கண் மணிகள் ?

    இவண்
    இணையத் தமிழன் "விஜய்"
    inaya-tamilan.blogspot.com

    ReplyDelete