Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Friday, January 28, 2011

அந்த தொழில்



      தாமரை இலை நீர் போல மல்லியின் மனமும்
செயலும் ஒட்டாமல் வேலை செய்து கொண்டிருந்தது.
இன்னும் எத்தனை நாளைக்குத் தான் காதிலிருந்ததையும்
கையிலிருந்ததையும் விற்று அரிசி பொங்குவது?

      கணவன் ராமுவின் இறப்பிற்கு அரசு கொடுப்பதாக
சொன்ன தொகை ஆறு மாதமாகியும் கைக்கு
வந்தபாடில்லை.உதவவும் வேறு ஆள் இல்லை.
விரக்தியின் உச்சத்தில் இரண்டு குழந்தைகளுடன்
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம்
இளந்தூறலாய் அவ்வப்போது அவளை  நனைத்து
விட்டுச் சென்றது.அப்போது சரியாக வந்து
சேர்ந்தான் முனியன்.

        “என்ன மல்லி... நானும் எத்தனை தபா
சொல்றது...இன்னா முடிவு பண்ணின?தினம் இந்த
புள்ளைஙகள பட்டினி போட்டு சாவடிக்கப் போறியா?”

        “இல்ல...ஊரு என்ன சொல்லுமோன்னு
பயமா இருக்கு முனியா...”

        “ஊருக்கு பயந்தா...செத்துப்போன புருஷன் திரும்பி வரப்போறதில்ல.ஏற்கனவே பாத்த தொழிலு...
கல்யாணத்துக்கப்புறம் தானே வுட்டுட்ட...திருநா சமயம்.
உன்ன நம்பி பக்கத்து ஊரு நாட்டாமைகிட்ட அட்வான்ஸ்
வாங்கிட்டேன் புள்ள...இந்தா 300 ரூபா. நாளைக்கு சரியா 4
மணிக்கு ரெடியாயிரு,வந்து கூட்டினு போறேன்.”

       மறு நாள் மதியம் 2 மணியிலிருந்தே தன்னை
அலங்கரிக்க தொடங்கி விட்டாள் மல்லி. நீண்ட நாளாய்
பாலைவன மணல் போல் தோன்றியநெற்றியில்
சிவப்பு திலகம் இட்டாள்.

     கை நிறைய கண்ணாடி வளையல்களும் உதட்டுச்சாயமும்
இட்டுக்கொண்டாள்.பரண் மேலிருந்து பித்தளை சொம்பை
புளி சேர்த்து பளபளக்க தேய்த்து எடுத்தாள்.அதன்
உள்ளே 2 கிலோ பச்சரிசியைப் போட்டு குடத்தின் வாய்
பகுதியை ஒரு தேங்காய் வைத்து கட்டினாள்.குளத்து நீரில்
வளர்ந்த கிளச்சிக் கட்டை வேரை சுற்றி,அதன் மீது
செயற்கை பூ அலங் காரம் செய்து உச்சியில் இறக்கை
விரிக்கும் அன்னப்பறவையை நிறுத்தினாள்.

        ஜோடிப்பு முடிந்து 6 கிலோ எடை கொண்ட
முழுவடிவத்தை பெற்றது கரகம்.கரகத்தையும்
சலங்கையையும் ராமுவின் புகைப்படத்துக்கு
முன் வைத்து நமஸ்கரித்தாள்.முனியனும்
நேரத்துக்கு வந்துவிட குழந்தைகளைஅவன்
பொஞ்ஜாதியிடம் விட்டு திரும்பியவளுக்கு
இடியென வந்து விழுந்தது பொசுக்கும் மின்னல்
வார்த்தைகள்.

        ஆம்படையான் செத்து வருஷம் திரும்பல.
அதுக்குள்ள பொட்டச்சிக்கு பூவும் பொட்டும் ஆட்டமும்
தளுக்கும் மினுக்கும் கேக்குதோ”-சீறி வெடித்தாள்
மாமியார் செண்பகம்.

       களுக்கென நீர் எட்டிப் பார்த்தது மல்லியின் கண்களில்.
அவளுக்கு பதில் பேசாமல்,முறைத்து ஒரு பார்வை பார்த்து
புறப்பட்டே விட்டாள்மல்லி,அந்த கிராமத்தின் பொட்டு
வைத்த முதல் கைம்பெண்ணாய்.


 நன்றி : தினமலர்-பெண்கள்மலர்

6 comments:

  1. ரொம்ப அழகா எழுதுறீங்க பவி..... பாராட்டுக்கள்....

    ReplyDelete
  2. வாழ்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி ராஜா.

    ReplyDelete
  3. தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ப்ரியா

    ReplyDelete
  4. நன்றி கஸ்தூரி,உங்கள் முதல் வருகைக்கு...

    ReplyDelete
  5. முடங்கி கிடப்பதால் ஆவதொன்றும் இல்லை... புதுமைபெண் ....புறப்பட்டு விட்டாள்.
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete