Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Thursday, December 30, 2010

அவன்.....அவள்.....

      சில்லென்று முகத்தில் அறைந்த அந்தக் குளிர்
காற்றை ரசித்தபடியே டூவீலரின் வேகம் குறைத்தான்
அசோக்.  ஒரு ‘யூ டர்ன்’ அடித்து யமஹாவை போர்டி
கோவில் நிறுத்தினான்.  சிமியின் மாருதி நின்றிருப்பதைப்
பார்த்ததும் இரட்டை சந்தோஷம்!

     உள்ளே நுழைந்தவனை “என்ன இன்னிக்கு இவ்வளவு
லேட்?” - சுகர்  ஃப்ரீயை காபியில் கலக்கியபடியே
வரவேற்றாள் சிமி.

    “தினம் நான் கேட்ட கேள்விய இன்னிக்கு நீ ரிப்பீட்
பண்றியா?”

    “அஃப்கோர்ஸ்!  அதென்ன கையில்.. பேபி டாலர்..”
வெடுக்கென பிடுங்கிப் பார்த்தாள் சிமி.

    “யெஸ்.  கடையில பார்த்தேன்.  ரொம்ப
அழகாயிருந்துச்சு.  பார்த்த உடனே நமக்கு பொறக்க
போற குழந்தைக்குனு வாங்கிட்டு வந்துட்டேன். 
அப்புறம் சிமி.. குழந்தை வேணாம்னு தள்ளி வெச்சதெல்லாம்
போதும்.  இந்த வாரம் கைனகாலஜிஸ்ட்கிட்ட
ஃபார்மாலிட்டிக்கு ஒரு செக்-அப் பண்ணிட்டு வந்துடலாம்.”

“எதுக்கு?”

“நீ சொன்ன அந்த ரெண்டு வருஷம் போன மாசத்தோட
 முடிஞ்சிடுச்சு.. ஞாபகம் இல்லையா?”

“ஆமா.. இப்ப ரொம்ப முக்கியம்!”

“என்ன உளர்ற..”

     “நான் ஸ்டிரெய்ட்டாவே வரேன் அசோக்.  எனக்கு
 இந்த குழந்தை பெத்துக்கறதுல எல்லாம் இஷ்டம் இல்லை.”

“வா..ட்?”

“யெஸ்..  என்னோட கரியரையும் நான் பாக்கணுமில்ல..”

   “என்ன சுமி இது?  மாடலிங் பண்றவங்க யாரும் குழந்தை
 பெத்துக்கறதில்லையா?  அப்ப நமக்குக் குழந்தையே
 வேண்டாமா?”

       “இந்த உடம்பை ஸ்லிம்மா வச்சுக்க நான் எவ்வளவு
கஷ்டப்படுறேன்னு எனக்குத்தான் தெரியும்.  குழந்தைக்கு
வேற ஐடியா வச்சிருக்கேன்”

“என்ன ஐடியா?”

     “ம்..  ஒரு வாடகைத் தாய் மூலமா நம்ம குழந்தைய
பெத்துக்க போறேன்.”

“சிமி..  ஆர் யூ  மேட்?” - ஏழு கட்டையில் கத்தினான் அசோக்.

    “இப்ப எதுக்குக் கத்தறே..?  ஜஸ்ட் பி கொய்ட்! 
அடுத்து வர்ற 5 வருஷமும் என்னோட வாழ்க்கையில்
கோல்டன் இயர்ஸ்.  நான் இப்பதான் வளர்ந்துட்டு வர்றேன்.
கொஞ்சம் கேப் விட்டாலும் என் கரியரே ஜீரோ ஆயிடும்.
இந்த நேரத்துல என்னால வயித்த முன்னாடி தள்ளிக்கிட்டு
நின்னுட்டிருக்க முடியாது.  இந்த வாடகைத் தாய் ஏற்பாடு
கூட, நீ குழந்தை குழந்தைனு அலையறதாலதான்.
இல்லைன்னா எனக்கு குழந்தை பெத்துக்கற ஐடியாவே
இல்லை!”

“ஓ.. ஹைட்ரஜன் + ஆக்ஸிஜன் = வாட்டர்னு சொல்ற மாதிரி,
ஆண் + பெண் = குழந்தைனு சயின்ஸ்ல எனக்கு கணக்கு
 காட்டுறியா?”

ஆவேசமாய்ப் பேசி சற்று ஆசுவாசித்தவன்..

        “ஓ.கே சிமி..  என்ன ஆச்சு உனக்கு?  உன் மனசைத்
தொட்டுச் சொல்லு.. ஒரு குழந்தையப் பெத்துக்கணும்னு
உனக்கு ஒரு பர்சன்ட் கூட ஆசையில்ல?”

       “இல்ல, இல்ல, இல்லவே இல்ல.  லைஃப்ல எனக்கு
ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ் இருக்கு.  இப்ப அதுதான் முக்கியம்.
உன்னையே எடுத்துக்கயேன்..  சில நிர்ப்பந்தத்துக்காக உன்
வேலையை விடுன்னா விடுவியா?  ஆம்பளைக்கு ஒரு நியாயம்..
பொம்பளைக்கு ஒரு நியாயமா?”

        “சிமி, இது நியாயம் அநியாயம் பாக்குற விஷயமில்ல.
இது தாய்மை.  உள்ளன்போட அனுபவிச்சு ரசிக்கிற விஷயம்.
இதே ஆண்களாலும் குழந்தை பெத்துக்க முடியும்னா,
குழந்தைக்காக வேலையை விட நான் ரெடி!”

       “போகாத ஊருக்கு நீ வழி சொல்லாத.. ஏற்கனவே
பல தடவ குழந்தை வேண்டாம்னு நான் மறைமுகமா
சொல்லியிருக்கேன்.  இதுதான் என்னோட முடிவு. 
இதுக்கு இஷ்டமிருந்தாநாம சேர்ந்து வாழலாம்.
இல்லேன்னா டிவோர்ஸ்தான் ஒரே வழி!”

    “சிமி, இது ரொம்ப ஓவர்.  நீ என்னை பல தடவ இன்சல்ட்
பண்ணியிருக்கே.  ஆனா, நான் எதையும் பெருசா எடுத்துக்
கிட்டதில்லை.  ஏன்னா நீயே எனக்குக் குழந்தை மாதிரிதான்.
உன் குறும்புத்தனத்தை எல்லாம் குழந்தை சேட்டையா
ரசிச்சிருக்கேன்.  உன்னை 100% லவ் பண்ணி கல்யாணம்
பண்ணிக்கிட்டேன்.  அதுக்காவது மரியாதை கொடு.  இன்னும்
ஒரு வருஷம் வேணா வெயிட் பண்றேன்.  எனக்கு நல்ல பதிலா
சொல்லு!”

    “டோண்ட் பீ சில்லி, பீ பிராக்டிகல்.  நீதான் லவ் லவ்னு என்
முன்னாடி வந்து விழுந்தே.  அப்பவே, நாம ‘லிவிங் டுகெதரா’
இருக்கலாம்னு தான் நான் சொன்னேன்.  உன் பேரண்ட்ஸ்க்காக
நீ ஓவரா கம்ப்பெல் பண்ணதால தான் நான் கல்யாணத்துக்கே
சம்மதிச்சேன்.  ஆனா இந்த விஷயத்துல நான் காம்ப்ரமைஸ்
பண்ணிக்கறதா இல்ல.  உன்னை மாதிரி குழந்தை குழந்தைனு
அலையிற ஆசாமி கூட இன்னும் 30 வருஷம் ஒண்ணா வாழ
முடியும்னு எனக்குத் தோணல.  ஸோ..  இங்கயே கட்
பண்ணிக்கலாம்.  அட்வகேட்டை கன்சல்ட் பண்ணி நோட்டீஸ்
அனுப்புறேன்.  ஸைன் பண்ணிடு.  அதுக்கப்புறம் நீ சந்தோஷமா
வேற லைஃப் ஸ்டார்ட் பண்ணிக்கோ.  நான் குறுக்க வர
மாட்டேன்.  ஜஸ்ட், லீவ் மீ அலோன்.”

      அலட்டிக் கொள்ளாமல் டைவர்ஸ் வரை பேசிவிட்டுச்
 செல்பவளை கண் இமைக்கவும் மறந்து வெறித்தான் அசோக்.

     யிற்று!  விவாகரத்தும் ஆகி இரண்டு வருடங்கள்
உருண்டோடிப்போனது.  திருமண நாளை காலண்டரில்
பார்த்ததும் பழையநினைவுகள் கண் முன் சில நேரம்
நிழலாடும் அசோக்குக்கு!

     இருவரும்  பிரிந்தது முதல் தொலைத் தொடர்புக்கு
வெளியிலேயே இருந்தனர்.  தொலைக்காட்சியில் அவள்
தலைகாட்டும் விளம்பரங்களைப் பார்க்கையில் ஏற்படும்
வெறுமை மனதினுள் சில அதிர்வுகளை உண்டு செய்வதோடு
நின்று போனது அவனுக்கும்.

     வழக்கம்போல் நாளிதழை மேய்ந்தவனின் கண்கள் நிலை
குத்தி நின்றது அந்தக் ‘கண்ணீர் அஞ்சலி’ புகைப்படத்தைப்
பார்த்து.  சிமியை ஒரே மகளாகக் கொண்ட அந்த ராணுவ
அதிகாரி காலமாகியிருந்தார்.  ஏற்கனவே சிறு வயதிலேயே
தாயை இழந்து விட்டிருந்தவள் சிமி.  போகலாமா வேண்டாமா
என ஒரே மனப்போராட்டம் அவனுள்.  போனால் அவளைப்
பார்க்க வேண்டி வரும் என்று தவிர்த்தே விட்டான்.  23 நாட்கள்
கழித்து, அவனுள் எழுந்த குற்ற உணர்வு அவள் வீடு இருந்த
திசை நோக்கி அவன் டூவீலரைத் திருப்பி விட்டிருந்தது.

     மெல்லிய பூப் போட்ட காட்டன் நைட்டியில் சோபாவின்
மேல் சரிந்திருந்தாள்.  அவனுள் ஒரு தயக்கம் உள்ளூர அப்பிக்
 கிடந்தது.  தொண்டையை செருமிச் சரி செய்தான்.

“சிமி.. சிமி..”

    மெல்ல தலையைத் திருப்பியவள் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தாள்.
 இருக்கையைக் கைகாட்ட..  அமர்ந்தான் அவன்.

     பார்வை சந்திப்புகள் தாங்க இயலவில்லை இருவருக்கும்.
இருவருமே தவிர்த்தனர்.

“ஐ’ம் ஸாரி.  அப்பா எப்படி இறந்தார்?”

   
     அவள் கண்களிலிருந்து வந்த நீர் ஒரு கோடாய்
கன்னங்களைப் பிரித்தது.

     “ஹார்ட் அட்டாக்.  எனக்கு தைரியம் சொன்னவரு இப்ப
திடீர்னு போயிட்டார்” வருத்தம் தெரிவித்து பரஸ்பர
ஆறுதல் சொல்லி கிளம்ப எழுந்தான்.

     “அஷோக், பை தி பை உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்.
உங்க லைஃபை கொஞ்ச நாள் நான் ஸ்பாயில் பண்ணதுக்கு
கடவுள் என்னை ரொம்ப தண்டிச்சிட்டார்.”

      அவளுக்குப் பேச இயலாமல் மார்பு பொருமியது.
கர்ப்பப் பையில் ஏற்பட்ட புற்றுநோயால், அவள் உயிர்
காக்க கர்ப்பப் பையையே எடுத்து விட்டதை நெஞ்சு
விடைக்கக் கூறி முடித்தாள்.  அதிர்ச்சி விலகாமல்
நின்றிருந்தான் அசோக்.

    “உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்னு தோணுச்சி,
கேட்டுட்டேன்.  இனி நான் நிம்மதியா தூங்குவேன் அசோக்.”

     “….”

    “யு நோ ஒன்திங்..  நீ சொன்னப்ப அந்த அருமை தெரியல.
என்னோட ‘யூட்ரஸை’ எடுத்துட்டதுக்கு அப்புறம்தான்
குழந்தை பெத்துக்கணும்னு ஆசை.. இல்ல பேராசையே
வந்துடுச்சு.

     குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம் ஏக்கமா
போயிடுது.எனக்கு இது வேணும்..  இல்ல அஷோக்?
முக்கியமா உனக்கு பொண்ணு பொறந்தா தப்பித் தவறி
என் பேரை எதுவும் வெச்சிடாதே.  என் ஞாபகம் உனக்கு
எப்பவுமே வேணாம்!

     பை தி பை, உனக்கு குழந்தை பொறந்துடுச்சா? 
இப்ப எத்தனை மாசம்?”

“ஒரு குழந்தை இருக்கு.  25 வயசு.  பேரு சிமி!”



 நன்றி:தேவதை

2 comments:

  1. நல்ல கதை பவித்ரா.... தேவதையில் இந்த கதை படித்தவுடன் நான் தினமலர் Sriக்கு ஒரு கடிதம் எழுதலாம் என நினைத்தேன். உங்கள் முகவரி தெரியாததால்.... இப்பொழுது உங்களிடம் நேரடியாகவே என் கருத்தைச் சொல்லலாம் என் தோன்றுகிறது....
    ஏன் பவித்ரா இந்த கதையில் சிமிக்கு கர்ப்பப்பை புற்று நோய் வர வேண்டும்..? அப்படி இல்லாமல் இந்த கதையை கொண்டு போயிருக்க முடியாதா? அவள் குழந்தை பெற்றுக் கொள்ள மறுக்கும் காரணங்கள் ஒரு மாடலாக நியாயம் தானே? அதற்கு இத்தனை பெரிய தண்டனை தேவையா? இந்த ஆணாதிக்க சமுதாயத்தின் எண்ணங்கள் உங்கள் அழகான கதையில் ஏன்? எத்தனையோ நல்ல கருத்துக்களை கொண்டதாக உள்ளது உங்கள் மற்ற கதைகள்.... இது நெருடல் தான் பவி.... ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.. இல்லாவிட்டாலும் கூட சொல்ல வேண்டியது என் கடமை, ஒரு பெண்ணாக என்று திடமாக நம்புகிறேன்...
    நிறைய எழுதுங்கள் பவி.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி கிருஷ்ணபிரியா.’அவன் அவளில்’ ஒரு மாடலாக அவளின் செயல் நியாயம் தான்.ஒத்துக்கொள்கிறேன்.
    ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போல ஆணாதிக்க சமுதாயத்தின் எண்ணங்களை நான் இந்த கதையில் அடுக்கவில்லை என்றே நினைக்கிறேன்.அசோக் போன்றவன் ஆயிரத்தில் ஒருவன்.அவன் அவளுக்காக எவ்வளவோ இறங்கி வருகிறான்.அது முடியாத பட்சத்தில் தான் விலகுகிறான். உரிமைக்கும் திமிருக்கும் உள்ள இடைவெளி,தியாகத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் உள்ள இடைவெளியில் கதை பயணிப்பதாக நான் உணர்கிறேன். இருப்பினும் உங்களின் நெருடலுக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். நன்றி ப்ரியா

    ReplyDelete