பெண்கள் இன்று பல துறைகளில்,பல சாதனைகளை படைத்துக்கொண்டிருக்கின்றனர்.இது எவ்வளவு வரவேற்கப்படவேண்டிய விஷயம்! ஆனால் இன்றும் தவிர்க்கப்படவேண்டிய பல விஷயங்களுக்கு புகைமூட்டி தூபம் போட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம்.
ஆண்களிடமிருந்து பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று இன்று வாய்கிழிய பேசுகிறோம். ஆனால் பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்ற ரீதியில் நம் நாட்டில் கணவனை இழந்த பெண்களுக்கு நடத்தும் பல சடங்குகள் மிக மிக கொடுமை.
கணவனை இழந்த பெண் அழுது,பரிதவித்துப் போயிருப்பாள்.கணவனின் சடலத்தை எடுக்கும் நேரத்தில் சடலத்தின் எதிரில் அவளை உட்கார வைத்து தலைக்கு ஊற்றி மஞ்சள்,குங்குமம்,பூ வைத்து அவளை அலங்கரிக்கிறேன் என்று அலைகழிக்கிறார்கள்.
70 வயதான ஒரு பெண்ணுக்கு கணவன் இறந்த அன்று தலையில் தண்ணீர் ஊற்றியதால்,மயங்கிய அவர் 3 நாட்களுக்கு பின்தான் நினைவு திரும்பினார்.சொந்த பந்தங்கள் இதை வேடிக்கை பார்க்கின்றனரே அன்றி,யாரும் தடுக்க முன்வருவதில்லை.அப்படியே யாராவது வேண்டாம் என்று சொன்னாலும் சில வயதான பெண்கள் அதை காதில் வாங்குவதுமில்லை.
வழிவழியாக வந்த சடங்கை யாரும் மீறக்கூடாது. நாங்களெல்லாம் இதுபோன்ற சடங்குகளுக்கு கட்டுப்படவில்லையா? இதுபோன்ற கஷ்டங்களை நாங்கள் படவில்லையா என்பதே அவர்களின் கேள்வியாக உள்ளது. அவர்கள் வேதனைப்பட்டது உண்மைதான்.ஆனால் அதேபோன்ற மனவேதனையை இன்னோரு பெண் அனுபவிக்கக் கூடாது என்றல்லவா நினைக்க வேண்டும்?
அதன்பிறகு விதவைக்கோலம் பூணும் சடங்கு இன்னும் கொடுமையானது. பிறந்ததிலிருந்தே ஆசையாய் வைத்துக்கொண்டிருந்த பூவுக்கும் பொட்டுக்கும் கணவனை அடையாளமாக சொன்னது யார்? கணவன் கட்டிய தாலி என்பதால், அதை தூக்கி எறிய வேண்டுமா? நேற்றுவரை சூட்டி அழகுப் பார்த்த பூவையும்,பொட்டையும் இனி தன் வாழ்நாள் முழுவதும் சூட்ட அருகதையற்றவள் என்பதை ஒரு பெண்ணால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்? இதனால் தான் பல இளம் விதவைப் பெண்களுக்கு மனச்சிதைவு நோய் ஏற்படுகிறது.சமுதாயத்தில் எந்த ஆணும் இது போன்ற சடங்குகளை செய்யச்சொல்லி நிர்பந்திப்பதில்லை.இது போன்ற சடங்கு என்ற பெயரில் பெண்களின் சந்தோஷத்தை பறிப்பது சக பெண்கள்தான்.மற்ற பெண்களுக்கு இது போன்ற சடங்கு நடக்கும் போது பதைக்காத மனது தனக்கோ,தன்னுடைய உறவுகளுக்கு நடக்கும் போது மட்டும் ஏன் பதைக்கிறது?அதை தடுக்க துடிக்கிறது?இது போன்ற சமுதாய பிரச்னைகளுக்கு 4 பேர் பேசி தீர்வு காணமுடியாது.
ஆயிரக்கணக்கான இதயங்களில் இருக்கும் இந்த கேள்விக்கு ஒன்று கூடிதான் பதில் தேட வேண்டும். விடியலை உருவாக்க வேண்டும்.சில கேடுகளை களைய போரிட்த்தான் வேண்டுமென்றால், போரிடுவதில் தவறில்லை.பழமொழிகளை கடைப்பிடிக்ககூடாது என்று சொல்லவில்லை.காலத்துக்கும் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களைத்தான் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்குஎன்று எந்த சான்றோரும் சொல்லவில்லை.ஆனால் அது முறியடிக்கவேண்டிய பிரச்சனை என்று முறியடிக்கவில்லையா?என்னுடைய உறவினர் ஒருவர் சாகும் தருவாயில் தன் மனைவியிடம்,` நான் இறந்த பிறகு நீ கண்டிப்பாக பூ சூடிக்கொள்ள வேண்டும்,பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும்,தாலியை கழட்டக்கூடாது`என்று சொன்னார்.அவர் இறந்த பிறகு அந்த பெண்ணின் தாயாரும்,மாமியாரும் அவளை அவள் கணவர் சொன்னது போன்று வாழவிடவில்லை.இது போன்ற வீணான சடங்குகளினால் பெண்களின் மனது சோர்வடைவதோடு, தன்னம்பிக்கையையும் இழக்கின்றனர் என்பதை அனைவரும் அறியவேண்டும்.
பெண்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு பெண்களே சேர்ந்து தான் தீர்வு காண வேண்டும்.மனைவியை இழந்த எந்த ஆணும் எந்த சடங்குகளையும், நியதிகளையும் வைத்துக் கொள்வதில்லை.பெண்கள் மட்டும் என்ன இளக்காரமா? இது போன்ற கொடுமைகளுக்கு ஒட்டு மொத்த பெண்களும் மனம் மாறினால் தான் முடிவு பிறக்கும்.பெண்கள் ஒன்றுபட்டால் இந்த கொடிய பழக்கத்திற்கு தீ மூட்டிடலாம்!அழகு என்பது ஆடம்பரம் அல்ல,அதுவும் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு என்பதை அனைவரும் உணர வேண்டும்!
நன்றி:தினமலர்-பெண்கள்மலர்.
நீங்கள் கூறியதில் தவறு இல்லை. என் கருத்தை சொல்கிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும். பொட்டும்,பூவும் நமக்கு சிறு வயதிலேயே இருந்து வைக்கலாம்.ஆனால் நம்முடன் வாழ்ந்த நம் உயிராய் இருந்தவருக்கு நம்மால் அவர் போகும்போது கூட போக முடியாது.நம் கணவர் நாம் வைத்த பூவும்,பொட்டும்,அழகான டிரஸ் பண்ணுவதையும் பார்த்து சந்தோசபட்டவர்.அவர் இறந்த பிறகு நாம் அவருடன் சாகமுடியாது.அவர்கள் பார்த்து ரசித்த பூவும்,பொட்டும்,அழகான டிரஸ் பண்ணுவதைதான் சந்தோசத்துடன் தருகிறோம்.
ReplyDeleteவருகைக்கு நன்றி பாபி.உங்கள் கருத்தை பதிவு செய்துள்ளீர்கள்.மிக்க நன்றி.இந்த 21ம் நூற்றாடிலும் இது போன்ற சடங்குகளை தான் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.ஆயினும்,உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன் மற்றவர்களை நிர்பந்திக்காத வரை.
ReplyDeleteகட்டிலுக்கு சொந்தக்காரனே போயிட்டான் பெண்டிலுக்கு fair&lovely கேட்க்குதாம்! யாருக்காக உங்களை அழகுபடுத்தீனீர்களோ அவனே போயிட்டான்,அதன் பின்பு உங்களுக்கு make up வேண்டிக்கிடக்கு என்ன 2ம் கல்யாணம் செய்யிற திட்டம் ஏதாவது இருக்கா,?
ReplyDeleteஅறிவியல் வளர்ச்சி ஏற்படும் வேகத்திற்கு மனிதர்களுக்கு மூளை வளர்ச்சி ஏற்படுவதில்லை என்பதை இங்கு பதியப்பட்டுள்ள சில ''கமென்ட்'' கள் உணர்த்துகின்றன.
ReplyDeletehttps://www.scientificjudgment.com/ .