Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Tuesday, December 14, 2010

வாழ்க்கை சதுரங்கம்




அடர்ந்த பனி பொழியும் பின்னிரவு நேரத்தில் விழிப்பு கண்டது வள்ளிக்கு.
வயிற்று நாளங்கள் ஏதேதோ செய்ய குமட்டிக்கொண்டு வந்தது. வஞ்சனையின்றி
மொத்தமும் வாந்தியாய் எடுத்தாள். அயற்சியில் சாய்ந்தவளை கைதாங்கிப்
பிடித்தான் ரங்கன்.

தலைமுழுக்கு தள்ளிப்போன நாளை கணக்கிட்ட பின் சூரியனைக் கண்ட
தாமரை போல் முகமலர்ச்சிக்கு ஆளானார்கள் இருவரும். அற்புதமான
கனவைப்போல் இருந்தது, அந்த நிகழ்வு. திருமணமாகி நான்காவது மாதமே
கரு தங்கிவிட்ட பூரிப்பு. ஏற்றி வைத்த தீபமாய் அவளின் தங்கமுகம் பளபளத்தது. குழந்தை கதைகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

'மாமா, உங்களை மாதிரியே ஒரு புள்ளைய பெத்து கொடுப்பேன் பாக்குறியளா..?”

'வேணாம் வள்ளி, உன்னய போலவே பொட்ட சிருக்கித்தான் மகளா வாய்க்கணும்.”

'பாப்போம் மாமா, யாரு நினைப்பு நெசமாவுதுன்னு.”

'பாரு... பாரு... விடிய இன்னும் நேரம் கெடக்கு, பொறவு
பேசிக்கலாம் புள்ள, தூங்கு.” ஆசுவாசப்படுத்தியவனின் கண்களில் மெல்ல உருண்டு
திரண்டு எட்டிப் பார்த்தது நீர்.

ரங்கன், இளவயது கருத்த ராமராஜனை போன்ற தோற்றம்.முன்நெற்றியில்
கீற்றாய் வந்து விழும் மயிரை அவ்வப்போது கோதி விட்டுக்கொள்வதில் அலாதி பிரியம்
கொண்டவன். முள்ளண்டிரம் கிராமத்து இளைஞர்களின் சொத்து.

ரங்கனின் அக்கா சரோஜா சேதி கேட்டு கைகொள்ளா பட்சணத்துடன் பார்க்க
வந்தாள் வள்ளியை. கலைந்த தலையும் புகையிலை நெடியுமாய் உடன் வந்தான்
சரோஜாவின் கணவன் வேலு.கோரைப் பற்கள் தெரிய அவன் சிரித்த சிரிப்பில்
சொத்தைப் பல்லை மூடிய மறைப்பான்கள் அப்பட்டமாய் தெரிந்தது. அவர்கள் கொட்டிய
பாசத்தில் சொக்கித்தான் போனாள் வள்ளி.

குழந்தைக்கு ஏங்கித் தவித்த அவளின் 12 ஆண்டு திருமண வாழ்க்கையை
வரும் போதெல்லாம் புழக்கடை தாழ்வார திண்ணை மீதமர்ந்து புலம்பித் தள்ளுவது
சரோஜாவின் வாடிக்கை. உச்சுக் கொட்டுவதோடு அவ்வப்போது தலையையும்
ஆட்டி வைப்பாள் வள்ளி.

முதல் தாரத்தின் பிள்ளையாகிப் போனதால் பிறந்த வீட்டின் சீர்களை
எதிர்பார்க்காதவளானாள் வள்ளி. தனது சித்தி இவளை ரங்கனுக்கு கட்டிக் கொடுத்ததே
அதிசயத்திலும் அதிசயம் என வியப்பவளாயிற்றே.

வள்ளியின் வயிறு பெரிதாக பெரிதாக ரங்கனின் முகம் வாடிக்கொண்டே போனது.
கடவுள் போட்டோ முன்னே நின்று வெறித்து நோக்குவதும், கும்பிடுவதுமாக இருந்தது.
நெஞ்சுக்குள் உறுத்தியது இவளுக்கு. பழைய உற்சாகம் ரங்கனிடம் இருந்த இடம்
தெரியவில்லை.

அன்றொரு முன்பனிக்கால இரவில் அவனை பக்கத்தில் இருத்தி கேட்டே விட்டாள்.
அரை மணி நேர மவுனத்திற்குப் பின் மடை திறந்த வெள்ளம்போல் சீறிப் பாய்ந்தாள்.

இரு கைகளையும் கன்னத்தில் வைத்தவள் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

அதான் புள்ள, நீ அழுவேன்னு தான் நான் இத்தனை நாளா உங்கிட்ட சொல்லல.

'மாமா, என்னய உசுரோட சமாதியாக்க முடிவு பண்ணிட்டியலா...
எப்படிய்யா சத்தியம் பண்ணிக்கொடுத்த...”

'அழாத புள்ள... எங்கக்காவுக்கு பத்து வருஷமாகியும் புள்ள இல்லன்னு
கலங்கி எங்காத்தா சாவற நாளுல, எனக்கு கல்யாணமானதும் பொறக்குற மொத
புள்ளய அக்காவுக்கு தாரவாக்கணுமுன்னு சத்தியம் வாங்கினு செத்துப்போச்சு.
ஊரார்ட்டல்லாம் மலடி பட்டம் வாங்கி அழற அக்காவ, பாக்க பாவமாக இருக்கும் புள்ள.
அதான் அப்ப சம்மதிச்சுட்டேன். அக்காவுக்கும் இது தெரியும். அதனால..
அதனால... பொறக்கப்போற புள்ளய கொடுத்துறலாம் புள்ள...”

'யோவ்... உனக்கு பைத்தியம் புடிச்சுடுச்சா... எப்படிய்யா என் சம்மதம்
இல்லாம இத்த நீ செய்ய முடியும். நான் கொடுக்க மாட்டேன். என் புள்ளய நான்
கொடுக்கவே மாட்டேன்” என கத்தியவளாய் புட்டுக்கூடை போன்ற வயிறை இறுக்கி
பற்றிக் கொண்டாள்.

'வள்ளி, அதான் நாள் ஏற ஏற எனக்கு சோறு தண்ணி எறங்கல. நம்ம
புள்ளய அக்காவுக்கு கொடுக்கணுமேன்னு இப்ப கிடந்து மனசு அடிச்சிக்குது.”

'மாமா, இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல. மோத புள்ளய நாம
வெச்சிக்குனு இரண்டாவது புள்ளய அவுகளுக்கு கொடுத்துரலாம்.”

'நானும் அக்காட்ட எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன் புள்ள. எங்களுக்கு
வயசாயிடுச்சி, மொத குழந்தை எங்களுக்கு தேன். அடுத்த பத்தாவது மாசம்
இன்னொன்ன பெத்துக்குயேன்டான்னு சொல்லிடுச்சி வள்ளி.”

'அய்யோ மாமா... இப்பல்லாம் எம்புட்டு வருஷமானாலும் புள்ள
பெத்துக்கிடலாம். மதினிக்கு 35 வயசுதானே ஆவுது.”

'வயசு கிடக்கட்டும் புள்ள. பாக்காத வைத்தியமில்ல. மேற்கொண்டு
போவ துட்டு ஏது... நாங்கெல்லாம் கஞ்சிக்கு வாக்கப்பட்டவுக. உழைச்சாத்தான்
சோறு. அதுவும் எம்மாமனை பத்தித்தான் உனக்கு தெரியுமே... ஊருக்கு அடங்காத
குடிகார கபோதி. மாத்திப் பேசினா மானத்த வாங்கிடுவான்.”

'பாருபுள்ள, மனச கல்லாக்கிக்க... சத்தியத்தை மீறினா, நம்ம புள்ளைக்கு
ஏதாச்சும் ஆயிடுமோன்னு நெஞ்சு பதறுது. உனக்கு நானிருக்கேன்டா... அடுத்த
வருஷமே இன்னொரு குழந்தைய நீ கொஞ்சத்தான் போற பாரு... இப்ப படு புள்ள.”

நனைந்த ஒரு பக்க தலையணை சொன்னது அவளின் மிக நீண்ட கண்ணீர்
இரவை. அடுத்தடுத்த நாட்களில் சரோஜாவை கண்டாலே முகம் கொடுத்துப் பேச
விருப்பமின்றி தட்டை வீட்டின் உரல் புதைக்கப்பட்ட அந்த குறுகிய வாசலில் கால்
நீட்டியபடி உட்கார்ந்துக் கொள்வாள். சரோஜாவே வலிய வந்து அவள் தலையை
சீவி விடுவதும் பூத்தொடுத்து வைத்து விடுவதுமாக இருந்தாள்.

சுமையை இறக்கும் நாள் செவிலி மூலம் தெரிய வர அந்த வயிற்று
வெறுமையை எதை இட்டு நிரப்புவது என மனது சத்தமாக அரற்றிக் கொண்டது.

இப்படிக்கூட சத்தியம் செய்வாகளா என நாளைக்கு 10 முறை வீதம்
ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தாள் ரங்கனிடம்.

'இதப்பாரு புள்ள கஷ்டம்தான். இரண்டு தெரு தள்ளினா அக்கா வீடு.
தெனம் ஒரு எட்டுப் போய் பாத்துட்டு வரலாம். நம்மள காட்டியும், அக்கா பாசமா
பாத்துக்கிடும்புள்ள... நீ கவலப்படாத.”

நெஞ்சு விடைக்கும் போதெல்லாம் மயிலிறகு வருடுவதாய் வந்து விழும்
வார்த்தைகளால் எப்படியோ பனிக்கட்டியாய் நாட்கள் கரைந்தன.

இடுப்பு வலி எடுத்து கோட்டாஸ்பத்திரியில் ஆண் பிள்ளை பிறந்த வேகத்தில்
கோடாலி முடிச்சு கொண்டையுடன் வந்துவிட்டாள் சரோஜா. தூக்கி மாரோடு கொஞ்சியவள்
கொண்டு வந்த பாலை சங்கில் புகட்டலானாள்.

மயக்கம் தெளிந்து பால் கொடுக்க கேட்ட வள்ளிக்கு,
'அக்கா தூக்கிட்டு போயிடுச்சு வள்ளி” என்ற பதில்தான் வந்தது.

'மாமா, புள்ள முகத்த பாத்ததோட சரி, ஒருவாட்டி மாரோட
அணைச்சுப் பால் கொடுத்துக்குறேன். மொதல்ல வர்ற சீம்பால்ல அம்புட்டு சத்து
இருக்கறதா நர்ஸ்ம்மா சொல்லுச்சு. ஒரு எட்டுப் போய் தூக்கிட்டு வா மாமா...”

'நீ பால் குடுத்தா பாசம் ஒட்டிக்கும்னு சொன்னாலும் கேக்காம தூக்கினு போயிடுச்சு.
எப்படியும் அவுகளுக்கு குடுத்துப்புட்டோம். விட்டுட வள்ளி.”

'யோவ்... அய்யோ... ஒரு தாயோட தவிப்பு உனக்கு புரியலேய்யா”,
தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டே அழுது தீர்த்தாள்.

'பச்ச ஒடம்புக்காரி, உனக்கு அழுதா ஆவாது புள்ள” சொன்னவாறு வாரி
அணைத்துக் கொண்டான் வள்ளியை.

எக்கச்சக்கமாய் அறிவுறுத்தினாள் செவிலி. மூன்றே மாதத்தில் மீண்டும்
கருவுறுவது உடல்நலத்திற்கு ஆவாது என எச்சரித்தாள். எதுவும் அவள் காதுகளில்
விழவில்லை. மாறாக தோட்டமெங்கும் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டது போல்
மனம் கருவுற்றதில் எம்பிக் குதித்தது. இந்த பிள்ளை யாருக்கும் சத்தியம் செய்யலையே
என ரங்கனிடம் ஊர்ஜிதம் செய்துக்கொண்டாள். பெரிய இழப்பிற்கு பின் பெற்ற சொர்க்கமாக
மீண்டாள்.

வாரம் ஒரு தரம் சென்று மகனை ஏறிடும் போதெல்லாம் 'மாமி கூப்புடுறாக.
பாரு... போ.. போ...” என மாறி மாறி உறவைச் சொல்லும் மதினியையும்
வேலுவையும் நினைக்க எட்டிக் காயாய் கசக்கும் உள்ளுக்குள். வர்ற வருஷத்துல என்
புள்ளயோட வளார்ச்சியும் இப்படித்தான் இருக்கும் என மனதுக்குள்ளாகவே கணக்குப்
போட்டுக் கொள்வாள் வள்ளி. அப்படி இருக்க வாய்ப்பில்லை என்பதை அந்த பேதைப்பெண்
அறியவில்லை பாவம்.

பத்து நாட்களில் பிள்ளை பிறந்துவிடும் என டாக்டரம்மா கொடுத்த தெம்பில்
வீடு திரும்பி நடக்கையில் எதிர் வீட்டு சுப்பையா சொன்ன சேதி, தலையில் இடியென
இறங்கி அப்படியே மயங்கி சரிந்தாள்.

கிணறு தோண்டும் வேலையில் மண் சரிந்து மரித்துப் போனான் ரங்கன்.
உடம்பெங்கும் ரத்தக் காயங்கள் இருக்க தூங்குவது போலவே கடைசி மூச்சை விட்டிருந்தான்.
தொலைக்காட்சி செய்திகளில் ஒரு சானல் விடாது போட்டுக் காட்டியாயிற்று. நமக்குனு
இருக்க இருந்த புள்ளய பாக்காமயே போயிட்டியேய்யா மார்பிலும் தலையிலும் அடித்துக்
கொண்டாள் வள்ளி. எதுவும் திரும்ப வரவழைக்கவில்லை ரங்கனை.

நாள் ஆகியும் வலி எடுக்காத நிலையில் கோட்டாஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள்.
பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பதற்கேற்ப தன் பூப்பாதம் பூமியில்
படுமுன்பே தன் மூச்சை இழந்துவிட்டிருந்தது அந்த மொட்டு. இந்த மகவேனும் தன்
மார்பை சப்பியிழுத்து பால் குடிக்கும் என கண்ட கனவெல்லாம் தூள் தூளாகியது.
மார்புக் காம்புகளில் அப்பிஞ்சு உதடுகளை நிறுத்தி பார்த்து ஒப்பாரி வைத்தாள். இனி
மற்றொரு முறை நிகழ சாத்தியமில்லை என்ற நிஜம் சுட்டது. சரோஜா எவ்வளவு சொல்லியும்
பிள்ளையை கீழே வைக்கவில்லை அவள். மார்போடு அணைத்திருந்த மகனை புதைக்க
பிடுங்கிக்கொண்டு சென்றது ஊர்.

அப்பனுக்கும் பிள்ளைக்கும் சோர்த்தே காரியங்கள் முடிந்தது. சரோஜா
வீட்டிலேயே சில காலம் தங்கியிருக்க ஊர் ஒத்து ஊத மெல்லவும் முடியாமல் விழுங்கவும்
இயலாமல் குமைந்தாள் சரோஜா. வள்ளியின் பார்வை முதல் மகன் துரைராசின் மீது
படும்போதெல்லாம் யாருமறியா சரோஜாவின் மற்றொரு முகம் வெளிப்பட்டு
சங்கடத்திற்குள்ளாக்கியது வள்ளியை. தான் ஒருதரம் துரைக்கு சோறு ஊட்ட கெஞ்சி
கூத்தாடியும் மறுக்கப்பட்டாள். வேலைக்கு அடிபணியும் கொடுமையும் நித்தம் அரங்கேறியது.

கண்ணில் விழுந்த மண்ணாய் உறுத்திக் கொண்டிருந்த மனதால் உளைச்சலுக்கு
ஆளானாள். சரோஜா இல்லாத நேரத்தில் துரையை தூக்கினாலும் அவன் இவளிடம்
ஒண்டுவதில்லை. தன் மகனே தன்னிடம் வர மறுக்க மாறாக அவனை சீண்டினால்
சரோஜாவும் வேலுவும் உக்கிரத்திற்கு போவதை காணக் காண வள்ளிக்கு ஒரு கட்டத்தில்
புத்தி திரும்பிப் போனது. பைத்தியம் பைத்தியம் என்ற ஏளனத்திற்கு ஆளானாள்.

அப்படியொருக்க துரைராசுவை இங்ஙன வா என விரட்ட ஆரம்பிக்க,
பழையதிற்கென கழிக்கப்பட்ட அந்த பத்துக்கு பத்து அறையில் இரவோடு இரவாக தூக்கி
எறியப்பட்டு பூட்டி வைக்கப்பட்டாள், வள்ளி. ஜன்னல் வழியே நீரும் ஆகாரமுமாய்
இரண்டு நாட்கள் கழிந்தது. எதிர்ப்பின்றி போனதால் அந்த தகரக் கதவு பின்வரும் வெக்கை
நாட்களில் திறந்தே வைக்கப்பட்டது. நீண்ட பகலிலும் குளிர்ந்த இரவிலும் அவளின் பேச்சு
சத்தம் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தது.

கழித்து கட்டப்பட்ட பொருட்களிலேயே தனக்கான ஒரு குழந்தை பொம்மையை
தயார் செய்து கொண்ட அவள் அதனோடே பேசி அதனோடே வாழ்ந்தாள்.

துரைராசு என்றே பெயரிட்டு அழைத்துக் கொண்டாள். சரோஜாவும் வேலுவும்
எதிரில் பார்த்துக்கொண்டால் பதுங்கிக்போகும் அவள், ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கும் எந்த
மூஞ்சிக்கும் கையில் கிடைக்கும் பொருளை தூக்கி வீச ஆரம்பித்திருந்தாள்.

ஆண்டுகள் கழிய துரைராசு பள்ளிக்கு செல்வதை அறிந்து இவளும் தன்
விளையாட்டு குழந்தையை காலை முதல் பள்ளிக்கு தயார் செய்வாள். மாலை வந்தது
முதல் பள்ளிக்கு சென்று வந்த கதையைப் பற்றி ஓயாமல் விசாரிப்பு தொடரும். அவளின்
கோதுமை நிறம் மெல்ல தேய்ந்து கருமைக்கு மாறியிருந்தாள். எப்போதும் அந்த தகரக்
கொட்டகையில் அடைந்து கிடந்ததில் அத்திப்பூத்தாற்போல் வெளியே எட்டிப்பார்த்தாலும்
வெயிலால் கண்கள் கூசியது வள்ளிக்கு. வள்ளி என்ற பெயரும் மறந்துத்தான் போனது.

துரைராசு விநோத சத்தத்தினால் புழக்கடை ஒதுக்கு அறை பக்கமே போக
மறுத்தான். நேரம் ஆகிவிட்டால் என் குழந்தைக்கு சோறு எங்கே… பசிக்குது… சீக்கிரம்
எடுத்து வா என தகரக் கதவைத் தட்டி தட்டி ஒலி எழுப்புவதும் அவ்வப்போது
வாடிக்கையாய்போனது.

பிள்ளைக்கு ஊட்டுவதாக சொல்லி பாதி சோற்றை பாழடிப்பதைக் கண்டு
அவ்வப்போது வள்ளியை போட்டு சாத்த தொடங்கினான் வேலு. சரோஜாதான் ஊரார்க்கு
பயந்து ஓடிவந்து மடக்குவாள் அந்த முரடனை.

அடியும் மறத்துப்போனது அவளுக்கு. மாறாக அந்த பொம்மை மேல் துரும்பும்
படாதவாறு இறுக்கிப் பிடித்திருப்பாள். இந்த நரகத்திலிருந்து தன் மகனை மீட்டு விடுவதாக
அதனிடமே புலம்பிக் கொண்டிருந்தாள்.

அதை நிறைவேற்ற ஒரு மழை இரவில் கதவை திறந்துக்கொண்டு மெல்ல
தன் பொம்மையை இடுப்பில் கிடத்தியபடி வெளியேறினாள் வள்ளி.

சத்தம் கேட்டு விழித்த சரோஜாவும் வேலுவும் ஒலி எழுப்பாமல் கட்டைபோல்
படுத்திருந்தார்கள். பின் எப்போதும் அவள் வீடு திரும்பவேயில்லை.

தெருக்களில் அனாதையாய் சுற்றித் திரியும் பித்துப் பிடித்தவர்களில் ஒருவராய்
எங்கேனும் இருக்கக்கூடும் அவள்.


நன்றி:தினமலர்-வாரமலர்.

3 comments:

  1. உங்கள் கதை ரொம்ப அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் பவித்ரா...

    ReplyDelete
  2. hi i'm tamil u r story vry nice all the best keep it up my...................friend

    ReplyDelete
  3. akka its mind blowing kp it up..........i'm expecting more 4rm my sweet sisterrrrrrrrrrrrrrr

    ReplyDelete