blogger tricksblogger templates

Sunday, July 17, 2011

ஆயா வீடு

‘சேவூருக்கு இரண்டு டிக்கெட்’ என நடத்துனரிடம்
சொல்லி பயணச்சீட்டு வாங்கிக் கொண்டதுமே மனம்
சேவூரை நோக்கி ஓடத் துவங்கிவிட்டது.

“பூவோட பொட்டோட ஆயாவ கடைசியா ஒருதரம்
பாத்துட்டு போயிடு” என்ற அம்மாவின் டெலிபோன் பேச்சுக்கு
அலையடித்தாற்போல் வந்து சேர்ந்தாயிற்று டில்லியிலிருந்து.
மகன் விக்ராந்த் மடியில் படுத்துக் கொள்ள முன்னோக்கி
பாயும் பேருந்திற்கு சவால் விட்டபடி நினைவலைகள்
பின்னோக்கி பாய்ந்தது என்னுள்.

அந்தக் காலத்திலேயே இரண்டு மாடிகள் கொண்ட பெரிய
வீடு ஆயாவுடையது.  வருடத்திற்கொருமுறை வரும் முழு ஆண்டு
பரிட்சை லீவில் நான்கு பெண்களையும் பேரப்பிள்ளைகளையும்
வரவேற்க வருடம் முழுவதும் காத்திருப்பாள் ஆயா.  சொல்லி
வைத்தாற்போல் சித்திரை திருவிழாவுக்கு ஓரிரு நாட்கள்
முன்னதாகவே அனைவரும் ஆஜராகி விடுவோம்.

பத்து நாட்களாக பாடுபட்டு செய்த முறுக்கு, அதிரசம்,
எள்ளடை பலகாரங்களை வந்ததும் வராததுமாய் வாய்க்கு மெல்ல
கொடுப்பாள்.  கல்லெண்ணெய் வாசத்துடன் ஆயாவின் வியர்வை
வாடையும் சேர்ந்து வீசும்.

ஆளுக்கொரு ஆளுயர அலமாரியென ஒவ்வொரு பெண்ணுக்கும்
ஒதுக்கி வைத்திருப்பாள்.  வந்தவுடன் பெட்டிகளிலிருந்த துணிகளை
அடுக்கவே நேரம் ஓய்ந்துவிடும் அம்மாவுக்கும் சித்திகளுக்கும்.

நாங்கள் இருக்கும் அந்த பதினைந்து நாட்களும் நாடாளுமன்ற
குளிர்கால கூட்டத் தொடர் போல் வீடு அமளி துமளிப்படும்.
மாலையானால் மொட்டை மாடியில் ஓடி பிடித்து விளையாடும்
சத்தம் திமுதிமுவென கீழே கேட்கும்.  “சுண்ணாம்பு காரை,
பாத்து… பாத்து” என பயம் கொள்வாள் ஆயா.

கட்டிக் கொடுத்த பெண்களை சமையலறைக்குள் அனுமதியாமல்
உட்கார்த்தி வைத்து மொத்த சமையலையும் ஒத்தை ஆளாய் நின்று
செய்துவிடும் சாமர்த்தியம் ஆயாவிடம் இருந்தது.  அந்த நாட்களுக்கு
மட்டும் பத்து தேய்க்கவும் துணி அலசவும் சாமார்த்தியமாய் பேசி
ஆள் பிடித்து இருப்பாள்.

இடியாப்பம் என்ன, பனியாரம் என்ன, அப்பம் என்ன…
அத்தனையும் செய்ய அதிகாலை நான்கு மணி முதற்கொண்டு
அடுப்படியில் பாத்திர உருட்டல் சத்தம் கேட்கும்.

“சீக்கிரம் எழு, சீக்கிரம் எழு” என எங்களை துன்புறுத்தும்
அம்மாக்களும் சித்திகளும் 9 வரை தூங்கிக் கொண்டிருக்க நாங்கள்
ஆயாவுடனே எழுந்து ஆற்றுக்குப் போய் குளித்து வருவோம்.

வாரத்திற்கு ஒன்றென இரண்டு சினிமாக்கள் செல்வதுண்டு. 
பலகாரம் வாங்கி கட்டுபடி ஆகாது என வீட்டிலேயே இரண்டு
பித்தளை வாளியில் அள்ளி வந்திருப்பாள்.  சரியாக ‘இடைவேளை’
சமயத்திற்கு முன் அனைவர் கைகளுக்கும் வரிசையாக உப்பு
உருண்டையும் உதிராத சிமிலியும் வந்து சேர்ந்திருக்கும்.  விரைவில்
உண்டு பாப்கார்னுக்கு ஒரு அழுகை போடலாம் என்பதற்குள்
‘இடைவேளை’ முடிந்து படம் ஆரம்பித்திருக்கும்.  அப்படி ஒரு
பெரிய உருண்டை பிடித்திருப்பார் அந்தக்கால திருப்பதி லட்டு
போல.  படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை ஒன்றுக்கு ரெண்டுக்கு
என இடையிடையே எழும் வாண்டுகளுக்கு ஈடுகொடுத்தபடியே
பின்னே பறப்பார்.  முழு படத்தையும் அவர் உட்கார்ந்து
பார்த்ததாய் ஞாபகமில்லை.

மாடியெங்கும் எங்கள் சொப்பு சாம்ராஜ்யம் களை கட்டும்.
யாருக்கும் தெரியாமல் மறைந்து எடுத்துச் செல்லும் அரிசியை
கொண்டு மாடியில் தனியாக உலை பொங்கும்.  வழி முச்சிலும்
சிந்தியிருக்கும் அரிசியை ஒன்றுவிடாமல் பொருக்கி எடுத்தபடியே
‘என்ன பருப்பு, என்ன அளவு’ என்பதான சித்திகளின்
கேள்விகளுக்கான விளக்கங்களும் நடந்து கொண்டிருக்கும்.

இரவு 11 மணி வரை நாங்கள் ஆடும் ‘வுட்டை’ கல்லில்
ஆயாவும் சேர்ந்து ஆடுவாள்.  அவருடன் செட்டு சேரவே
அனைவருக்குள்ளும் சண்டை மாயும்.  கல்லை மேலே போட்டு
பத்து காயானாலும் வழித்து எடுக்கும் லாவகத்தை ‘ஆ’ வென
வாய் திறந்து பார்த்துக் கொண்டிருப்போம்.  பேத்திகளின் கைகளை
குத்தாத, கீறாத வழவழப்பான ஜல்லிக் கற்களாக தேடிப்பிடித்து
வைத்திருப்பாள்.  வருடா வருடம் கூடுமேயன்றி கழியாது.

ஒருதரம் என் மிக நீள தலைமுடியை கல்லூரி சேரும்
தருவாயில் பாதியாக வெட்டிக் கொண்டதில் பெரும் வருத்தம்
அவளுக்கு.  அவ்வப்போது சொல்லி சொல்லி அலுத்துக் கொண்டாள்.
பெரிய சித்தி மகளின் நீள ஹைஹீல்ஸை பார்த்து விக்கித்துதான்
போனாள்.  இடுப்பு வலி வரும் என சொல்லியும் அவள் கேளாது
போகவே அவள் தூங்கும்போது தேங்காய் வெட்டும் வெட்டுக்கத்திக்
கொண்டு செருப்பு குச்சிகளை வெட்டிப் போட்டதில்
எங்களுக்கெல்லாம் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிப் போனது
தனிக் கதை.

சரியாக ஊருக்கு கிளம்பும் முன் நான் இரவில் ஆயா அரைத்து
வைத்துவிடும் மருதாணி பாயிலும் தலையணை உறையிலும் படிந்து
போய் சிவந்திருக்கும்.  ‘அதை தோய்த்து விடும்மா’ என்று சொன்ன
அம்மாவிற்கு பதிலாய் ‘பாய் வாசமும் சிவப்பு கறையும் ஒரு மாதத்திற்கு
உங்களை ஞாபகப்படுத்தும்.  இருக்கட்டும்’ என்பாள்.  பாதி நகம் முழு
நகம் என மருதாணி சிவப்பு நகத்தை விட்டு மறையும் வரை நாங்களும்
அவரை நினைத்திருப்போம்.

ஒரு கடும் வெக்கை நாளில் கடைசி சித்தியின் பெண் அபிநயா
சித்திரை மாதத்தில் ஆயா வீட்டிலிருக்கையில் வயதுக்கு வந்துவிட
அந்த ஒன்பது நாட்களும் வீடு பலகாரத்திலும் அலங்காரத்திலும் தூள்
கிளப்பியது.  நானும் மற்ற இரண்டு சித்தி பெண்களும் அங்கலாய்த்துக்
கொண்டோம்.  “அய்யோ, நாம் ஏன் நம்மூரில் வயதுக்கு வந்து
தொலைத்தோம்.  லீவுக்கு வரும்போது வந்திருக்கக் கூடாதா என்று”. 
ஆயா வாய்விட்டு சிரித்த தருணங்கள் அவை.

ஆனால், அவள் உள்ளுக்குள்ளேயே மருகி கண்களை கசக்கும்
சம்பவம் எப்போதும் தாத்தாவால் நிகழும்.  ஆண்பிள்ளை பெற்றுக்
கொடுக்கவில்லை என்பதில் ஆரம்பித்து முகரக்கட்டை லட்சணம்
சரியில்லை என்பதுவரை வாய் ஓயாமல் நாளெல்லாம் திட்டிக்
கொண்டிருப்பதுதான் தாத்தாவின் வாழ்க்கை.  போதாக்குறைக்கு
மொடாக் குடியுடன்தான் எப்போதும் மிதப்பார்.  போளூர்,
முள்ளண்டிரம் என இருவேறு இடங்களில் சின்ன வீடுகள் என
ஊர்மக்கள் பேசிக் கொள்வதுண்டு.  அத்தனையும் ஆயா அறிந்ததுதான்.

ஆயிற்று.  ஆயா வீட்டிற்கு சென்றே வருடங்கள் பல
உருண்டோடிவிட்டது.  முழுதாய் ஐந்து காலண்டர் காகிதங்கள்
கரைந்ததாய் ஞாபகம்.  தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில்
இருந்தாலும் ஸ்பரிச உணர்வுக்கு ஈடு இணை ஏது?  இதோ தாத்தா
இறப்பின் பொருட்டு அவரின் 15ம் நாள் கடைசி காரியத்திற்காக
செல்லக்கூடிய சூழ்நிலை.

‘சேவூரெல்லாம் இறங்குங்க’ என்று ஏழு கட்டையில் கத்தினார்
நடத்துனர்.  தூங்கிக் கொண்டிருந்த விக்ராந்த்தை தோளில் போட்டபடி
இறங்கினேன்.  தெரு நெடுகிலும் என்னைக் குறித்தான நலம்
விசாரிப்புகளுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

ஆயாவுக்கு நெற்றியில் ஒரு ரூபாய் அளவு பெரிய பொட்டு
வைத்து அந்த சிறிய கொண்டைக்கு தலை கொள்ளாத பூ
சொருகியிருந்தனர்.  சிவப்பு காடா புடவை வெள்ளை ரவிக்கை
என சடங்கு போர்வை அவர் மேல் போர்த்தப்பட்டிருந்தது.

தோல் சுருங்கிப் போன அவரின் கை தொட்டபோது
ஏற்பட்ட உஷ்ணம் என் உடம்பெங்கும் பரவியது.  ஷேமலாப
விசாரிப்புக்கு அங்கே அவசியமில்லாமல் போனது.

இரண்டு வருடங்களாக தாத்தா படுத்த படுக்கையாய் இருந்து
ஆயாவிற்கு பெரும் பாரம் கொடுத்து விட்டிருந்தார் என்று பேசிக்
கொண்டனர்.  நேரம் நெருங்க படையல் முடிக்கப்பட்டது.  கோடி
போடுதலுக்கு ஆளாள் கொண்டு வந்த புடவையை வாங்கி
பார்த்துக் கொண்டிருந்தது ஒரு கூட்டம்.

விடியற்காலை வரை மணிக்கொருதரம் தாத்தா படம் முன்
கற்பூரம் ஏற்ற வைத்து அழ வைத்து தூங்கி விடாதபடி அலைக்கழித்தது
சடங்கு சம்பிரதாயம் என வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்த ஊர்
பெருசுகள்.  படித்த படிப்பும் எடுத்த டிகிரியும் பயனற்று போனது அங்கே.

‘முக்காடு கோடி’ போடுதலில் கடைசி நிகழ்வாக
‘சுமங்கலிங்க கடைசியா அவர் கையால குங்குமம் வாங்கி
நெத்தில வெச்சுங்க, ஆனா தாலில வெக்கக் கூடாது’ என
கூவியபடி இருந்தார் கோடிக்காரர்.  பின் உள்ளே அழைத்துச்
செல்லப்பட்டார்.  ஓர்; அமானுஷ்ய மௌனம்.  தாலியும் மெட்டியும்
அகற்றப்பட்டு கண்ணாடி வளையல்கள் உடைக்கப்பட்டு பூவும்
பொட்டுமற்ற ஆயாவாக திரும்பி வந்தார்.  அம்மாவும் சித்திகளும்
கதறி கதறி அழுதனர்.  ஆனால், ஆயாவின் முகம் முன்னைக்
காட்டிலும் பிரகாசமாய், நிம்மதியாய் மாறியதாக பட்டது எனக்கு.


 நன்றி : கல்கி

                             

Friday, July 8, 2011

செவிடன் மனைவி
      திருமணமான இந்த மூன்று மாதத்தில் ரொம்பவே
சோர்ந்து போனாள் சாதனா.  செவிடனான கந்தனை
கட்டிக் கொண்டதிலிருந்து இப்படித்தான் மாறிப்
போயிருந்தாள் அவள்.  பட்டாசு சத்தம் போல் வெளிப்படும்
அவளின் தொடர் சிரிப்பு எங்கோ காணாமல்
போய்விட்டிருந்தது.  இருவோரமும் கண்ணீரால் நனைந்த
தலையணைகள் அவளுக்கு மிக நீண்ட இரவை
தந்துக் கொண்டிருந்தது.

       கடைக்குட்டியாக ஆறாவது பெண் சாதனா.
வறுமையும் அப்பாவின் பக்கவாத பாதிப்பும் குடும்பத்தை
ஆட்டிப் படைத்தன.  ஐந்து பெண்களையும் தட்டுத்தடுமாறி
கட்டிக் கொடுத்த அப்பா இவள் முறையின்போது ஏதும்
செய்ய இயலா கல்லாகி போனார்.

       இதன் பொருட்டு அவர் குமைந்த போதெல்லாம்
அவரை ஆதரித்து தம் மயிலிறகு பேச்சால் வருடிக் கொடுப்பது
அவளின் வாடிக்கை.

      அவளின் 28வது வயதில் அவள் முன் 2 வரன்களின்
விவரங்களை அப்பா தலையை தொங்க போட்டபடியே
தெரிவித்தார்.  செவிடனான இளவயது கந்தன் ஒன்றும்,
48 வயது மூர்த்திக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்படுவதுமாக
இரு சந்தர்ப்பங்கள்.

      அப்பாவிற்கு பின் தனக்கு யாரென்ற நிஜம் சுட, தராசு
கோல் போல தன் கைகளால் நிறுத்திப் பார்த்து கந்தனை
கட்ட சம்மதித்தாள்.  இந்தியா பாகிஸ்தான் உறவு போல்
அவ்வப்போது பேச்சுவார்த்தையுடன் முறிந்து போன பழைய
வரன்களை போல் இல்லாது முகூர்த்தத்தில் முடிந்தது. 
வாழ்ந்து கெட்ட குடும்பமாதலால் அவளின் உறவுக்கு முன்
தலை நிமிர்ந்து வாழ வேண்டிய கட்டாயம்.  கந்தனோ
சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை போல் அவ்வளவு
அப்பிராணியாக இருந்தான்.  கிட்டதட்ட 16 வயதினிலே
கமல் ரகம்.  என்ன கொஞ்சம் செவிட்டு கமல்.  சமயத்தில்
வாயும் திக்கும்.

       மணமான 20-ம் நாளே தனிக்குடித்தனம்.  வீட்டில்
நிலவிய ஒருவித வெறுமை பேயை போல் பிய்த்துத் தின்றது.
துயிலெழுந்ததிலிருந்து படுக்கை வரை ஓயாமல் பேசும்
அவளின் இளரோஜா வண்ண இதழ்கள் பேச இயலாமல்
வெடித்துப் போயிற்று.  அவன் சொற்களுக்கு பதிலாக இவள்
சமிக்ஞைகள் செய்த வண்ணம் இருந்ததால் இவளின் உதடுகள்
ஒட்டிக்கொண்டு பிரிய மறுத்தன.  பேசுவதே மறந்து
எப்போதும் அபிநயம் பிடிக்க ஆரம்பித்துவிட்டாள், இவள்
என்னவோ ஊமை போல.

       தெரு நெடுகிலும் அவளை செவிடன் பொண்டாட்டி
என்றே அழைத்தனர்.  அவளின் பெயர் தேர்தல் சமயம் தரும்
வாக்குறுதி போல் மறந்து மண்ணோடு போயிற்று.  அந்த
அடைமொழியை களைவது எப்படி என்ற யோசனையில்
அசூயை உண்டானது.

       விடுமுறை தினங்களில் தாய்வீட்டு தெரு மழலைகள்
இவளின் கதை சொல்லும் திறனில் சொக்கிப் போய்
திண்ணையில் அமர்ந்து கதை கேட்க ஆளாய் பறந்த
சேதிகள் கடல் கொண்ட பூம்புகாராய் அழிந்து போயின.

       கணவன் மனைவி சேர்ந்து பேசிப் பகிர வேண்டிய
சந்தர்ப்பங்கள் தனக்கு வாய்க்காமல் போனது எவ்வளவு
பெரிய துரதிஷ்டம் என்பதில் மருகினாள்.  எதை இட்டு அந்த
வெறுமையை நிரப்புவது என்பதில் குழம்பிப் போனாள். 
ஆனால், அப்பா ஏற்படுத்திக் கொடுத்த இல்வாழ்க்கையை
நிராகரிக்கக் கூடாது என்பதில் மட்டும் அவளின் உறுதி
தென்பட்டது.

      இருசக்கர வாகனத்தில் பேசிக்கொண்டே நெடுந்தொலைவு
செல்லும் காதலர்கள், கடற்கரையில் மனைவியை சமாதானம்
செய்ய வார்த்தைகளாலான அஸ்திரத்தை பிரயோகிக்கும்
கணவன், பள்ளி விட்டு அழைத்து வரும் தம் மகளிடம் சுவாரசிய
உரையாடல் புரிந்தபடி வரும் நடுத்தர வயது இளைஞன் இப்படி
எதிர்ப்படும் அனைவரையும் கண்டு மனம் பிசகியது தொடர்
கதையாயிற்று.

       இத்தருணத்தில்தான் பக்கத்து வீட்டுக்கு புதியதாய்
குடித்தனம் வந்தனர் வினோத் தம்பதியினர்.  வெளிப் பார்வைக்கு
சினிமா கதாநாயகன் போல்தான் இருந்தான் வினோத்.  ஆனால்
இரவானால் தண்ணி கிண்ணி போடாமலேயே அவன் பேசும்
பேச்சு அத்தனையும் பேசக்கூடாத ரகம்.  சென்சார் கொண்டு
கத்தரிக்க தகுந்தவை.

      சந்தேகத் தீ அவனை ஆட்டிப் படைக்க அவன் மனைவிக்கு
கொச்சை வார்த்தைகளில் நித்தம் அர்ச்சனைதான்.  அன்று அந்த
நீண்ட மழை இரவிலும் அப்பட்டமாய் கேட்டது அவனின்
இடியோசை.  இப்படியும் ஒரு மனிதனா என காதை
பொத்திக் கொள்வாள் சாதனா.

       மறுநாள் மழை விட்டுச் சென்ற மிச்ச சொச்ச  இடங்களில்
மெல்ல நடந்து வந்தாள் வினோத்தின் மனைவி.
‘கொஞ்சம் டீத்தூள் இருக்குமா?  மளிகை சாமான் இன்னைக்கு
வந்துரும்.  நாளைக்கு காலம்பற கொடுத்துடுறேன்’.

      இதோ தரேன்.  வாங்க உள்ள…

       இரவு நடந்த பேச்சுக்கும் அவளுக்கும் சம்பந்தமே
இல்லாததை போன்ற முகமலர்ச்சி, கொண்டு வந்த கரண்டியில்
தூளை நிரப்பியபடியே கவனித்தாள் சாதனா.

      “கேள்விப்பட்டேன்…  உங்க வீட்டுக்காரரு செவிடாமே?”
தப்பா நெனச்சிக்காதீங்க.  இந்த தெருவே செவிடனை கல்யாணம்
பண்ணிக்கின பெரிய மனசு பொண்ணுன்னு ரொம்ப பெருமையா
பேசிக்குறாங்க.

       பேசிய அர்த்தம் முகத்தில் அறைந்ததும் இவளுள் இருந்த
ஏதோ ஒன்று உடைந்து நொறுங்கியது போலிருந்தது.

       உங்களுக்கு ஒன்னு தெரியுங்களா?  என் காது
செவிடாயிட கூடாதான்னு நான் நித்தம் ஏங்குறேன்.  அதுகூட
ஒரு குடுப்பினை தாங்க எனக்கு.

        சாதனா ஸ்தம்பித்து நின்றாள்.  அவளுடைய
உள்ளத்திலிருந்து எந்தக் குப்பையையோ வெளியில் வாரிப் போட
வேண்டியிருந்தது போல் அவளுக்கு தோன்றியது.  அந்தக்
குப்பைதான் நித்தமும் மக்கி நினைவுகளிலெல்லாம் நாற்றமடித்தது.
அவள் சென்ற நீண்ட நேரம் கழித்தும் இவளின் கண்கள் நீர்
சுரந்த வண்ணம் இருந்தது.

     மொட்டை மாடி அழுக்கை துடைத்தெறிந்த அடைமழை
போல அவளின் புழுங்கிப் போன மனம் கண்ணீரில் கரைந்து
காணாமல் போனது.


    இப்போதெல்லாம் யாரேனும் அவனை கூப்பிட்டால்
அவனுக்கும் சேர்த்து இவள் காதில் வாங்கிக் கொள்கிறாள்.
அவனுக்கு செய்யும் சமிக்ஞைகளில் கூட அன்னியோன்யம்
அதிகரித்தது.  செவிடன் பொண்டாட்டி என யாரேனும்
கூப்பிட்டால்முதலில் புன்முறுவல் பூக்க அவளின் இதழ்
தயாராயிருந்தது.  பின் எப்போதும் அவள் தலையணை
ஓரங்கள் கண்ணீரில் நனையவில்லை.


 நன்றி :தேவதை