Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Sunday, July 17, 2011

ஆயா வீடு

‘சேவூருக்கு இரண்டு டிக்கெட்’ என நடத்துனரிடம்
சொல்லி பயணச்சீட்டு வாங்கிக் கொண்டதுமே மனம்
சேவூரை நோக்கி ஓடத் துவங்கிவிட்டது.

“பூவோட பொட்டோட ஆயாவ கடைசியா ஒருதரம்
பாத்துட்டு போயிடு” என்ற அம்மாவின் டெலிபோன் பேச்சுக்கு
அலையடித்தாற்போல் வந்து சேர்ந்தாயிற்று டில்லியிலிருந்து.
மகன் விக்ராந்த் மடியில் படுத்துக் கொள்ள முன்னோக்கி
பாயும் பேருந்திற்கு சவால் விட்டபடி நினைவலைகள்
பின்னோக்கி பாய்ந்தது என்னுள்.

அந்தக் காலத்திலேயே இரண்டு மாடிகள் கொண்ட பெரிய
வீடு ஆயாவுடையது.  வருடத்திற்கொருமுறை வரும் முழு ஆண்டு
பரிட்சை லீவில் நான்கு பெண்களையும் பேரப்பிள்ளைகளையும்
வரவேற்க வருடம் முழுவதும் காத்திருப்பாள் ஆயா.  சொல்லி
வைத்தாற்போல் சித்திரை திருவிழாவுக்கு ஓரிரு நாட்கள்
முன்னதாகவே அனைவரும் ஆஜராகி விடுவோம்.

பத்து நாட்களாக பாடுபட்டு செய்த முறுக்கு, அதிரசம்,
எள்ளடை பலகாரங்களை வந்ததும் வராததுமாய் வாய்க்கு மெல்ல
கொடுப்பாள்.  கல்லெண்ணெய் வாசத்துடன் ஆயாவின் வியர்வை
வாடையும் சேர்ந்து வீசும்.

ஆளுக்கொரு ஆளுயர அலமாரியென ஒவ்வொரு பெண்ணுக்கும்
ஒதுக்கி வைத்திருப்பாள்.  வந்தவுடன் பெட்டிகளிலிருந்த துணிகளை
அடுக்கவே நேரம் ஓய்ந்துவிடும் அம்மாவுக்கும் சித்திகளுக்கும்.

நாங்கள் இருக்கும் அந்த பதினைந்து நாட்களும் நாடாளுமன்ற
குளிர்கால கூட்டத் தொடர் போல் வீடு அமளி துமளிப்படும்.
மாலையானால் மொட்டை மாடியில் ஓடி பிடித்து விளையாடும்
சத்தம் திமுதிமுவென கீழே கேட்கும்.  “சுண்ணாம்பு காரை,
பாத்து… பாத்து” என பயம் கொள்வாள் ஆயா.

கட்டிக் கொடுத்த பெண்களை சமையலறைக்குள் அனுமதியாமல்
உட்கார்த்தி வைத்து மொத்த சமையலையும் ஒத்தை ஆளாய் நின்று
செய்துவிடும் சாமர்த்தியம் ஆயாவிடம் இருந்தது.  அந்த நாட்களுக்கு
மட்டும் பத்து தேய்க்கவும் துணி அலசவும் சாமார்த்தியமாய் பேசி
ஆள் பிடித்து இருப்பாள்.

இடியாப்பம் என்ன, பனியாரம் என்ன, அப்பம் என்ன…
அத்தனையும் செய்ய அதிகாலை நான்கு மணி முதற்கொண்டு
அடுப்படியில் பாத்திர உருட்டல் சத்தம் கேட்கும்.

“சீக்கிரம் எழு, சீக்கிரம் எழு” என எங்களை துன்புறுத்தும்
அம்மாக்களும் சித்திகளும் 9 வரை தூங்கிக் கொண்டிருக்க நாங்கள்
ஆயாவுடனே எழுந்து ஆற்றுக்குப் போய் குளித்து வருவோம்.

வாரத்திற்கு ஒன்றென இரண்டு சினிமாக்கள் செல்வதுண்டு. 
பலகாரம் வாங்கி கட்டுபடி ஆகாது என வீட்டிலேயே இரண்டு
பித்தளை வாளியில் அள்ளி வந்திருப்பாள்.  சரியாக ‘இடைவேளை’
சமயத்திற்கு முன் அனைவர் கைகளுக்கும் வரிசையாக உப்பு
உருண்டையும் உதிராத சிமிலியும் வந்து சேர்ந்திருக்கும்.  விரைவில்
உண்டு பாப்கார்னுக்கு ஒரு அழுகை போடலாம் என்பதற்குள்
‘இடைவேளை’ முடிந்து படம் ஆரம்பித்திருக்கும்.  அப்படி ஒரு
பெரிய உருண்டை பிடித்திருப்பார் அந்தக்கால திருப்பதி லட்டு
போல.  படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை ஒன்றுக்கு ரெண்டுக்கு
என இடையிடையே எழும் வாண்டுகளுக்கு ஈடுகொடுத்தபடியே
பின்னே பறப்பார்.  முழு படத்தையும் அவர் உட்கார்ந்து
பார்த்ததாய் ஞாபகமில்லை.

மாடியெங்கும் எங்கள் சொப்பு சாம்ராஜ்யம் களை கட்டும்.
யாருக்கும் தெரியாமல் மறைந்து எடுத்துச் செல்லும் அரிசியை
கொண்டு மாடியில் தனியாக உலை பொங்கும்.  வழி முச்சிலும்
சிந்தியிருக்கும் அரிசியை ஒன்றுவிடாமல் பொருக்கி எடுத்தபடியே
‘என்ன பருப்பு, என்ன அளவு’ என்பதான சித்திகளின்
கேள்விகளுக்கான விளக்கங்களும் நடந்து கொண்டிருக்கும்.

இரவு 11 மணி வரை நாங்கள் ஆடும் ‘வுட்டை’ கல்லில்
ஆயாவும் சேர்ந்து ஆடுவாள்.  அவருடன் செட்டு சேரவே
அனைவருக்குள்ளும் சண்டை மாயும்.  கல்லை மேலே போட்டு
பத்து காயானாலும் வழித்து எடுக்கும் லாவகத்தை ‘ஆ’ வென
வாய் திறந்து பார்த்துக் கொண்டிருப்போம்.  பேத்திகளின் கைகளை
குத்தாத, கீறாத வழவழப்பான ஜல்லிக் கற்களாக தேடிப்பிடித்து
வைத்திருப்பாள்.  வருடா வருடம் கூடுமேயன்றி கழியாது.

ஒருதரம் என் மிக நீள தலைமுடியை கல்லூரி சேரும்
தருவாயில் பாதியாக வெட்டிக் கொண்டதில் பெரும் வருத்தம்
அவளுக்கு.  அவ்வப்போது சொல்லி சொல்லி அலுத்துக் கொண்டாள்.
பெரிய சித்தி மகளின் நீள ஹைஹீல்ஸை பார்த்து விக்கித்துதான்
போனாள்.  இடுப்பு வலி வரும் என சொல்லியும் அவள் கேளாது
போகவே அவள் தூங்கும்போது தேங்காய் வெட்டும் வெட்டுக்கத்திக்
கொண்டு செருப்பு குச்சிகளை வெட்டிப் போட்டதில்
எங்களுக்கெல்லாம் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிப் போனது
தனிக் கதை.

சரியாக ஊருக்கு கிளம்பும் முன் நான் இரவில் ஆயா அரைத்து
வைத்துவிடும் மருதாணி பாயிலும் தலையணை உறையிலும் படிந்து
போய் சிவந்திருக்கும்.  ‘அதை தோய்த்து விடும்மா’ என்று சொன்ன
அம்மாவிற்கு பதிலாய் ‘பாய் வாசமும் சிவப்பு கறையும் ஒரு மாதத்திற்கு
உங்களை ஞாபகப்படுத்தும்.  இருக்கட்டும்’ என்பாள்.  பாதி நகம் முழு
நகம் என மருதாணி சிவப்பு நகத்தை விட்டு மறையும் வரை நாங்களும்
அவரை நினைத்திருப்போம்.

ஒரு கடும் வெக்கை நாளில் கடைசி சித்தியின் பெண் அபிநயா
சித்திரை மாதத்தில் ஆயா வீட்டிலிருக்கையில் வயதுக்கு வந்துவிட
அந்த ஒன்பது நாட்களும் வீடு பலகாரத்திலும் அலங்காரத்திலும் தூள்
கிளப்பியது.  நானும் மற்ற இரண்டு சித்தி பெண்களும் அங்கலாய்த்துக்
கொண்டோம்.  “அய்யோ, நாம் ஏன் நம்மூரில் வயதுக்கு வந்து
தொலைத்தோம்.  லீவுக்கு வரும்போது வந்திருக்கக் கூடாதா என்று”. 
ஆயா வாய்விட்டு சிரித்த தருணங்கள் அவை.

ஆனால், அவள் உள்ளுக்குள்ளேயே மருகி கண்களை கசக்கும்
சம்பவம் எப்போதும் தாத்தாவால் நிகழும்.  ஆண்பிள்ளை பெற்றுக்
கொடுக்கவில்லை என்பதில் ஆரம்பித்து முகரக்கட்டை லட்சணம்
சரியில்லை என்பதுவரை வாய் ஓயாமல் நாளெல்லாம் திட்டிக்
கொண்டிருப்பதுதான் தாத்தாவின் வாழ்க்கை.  போதாக்குறைக்கு
மொடாக் குடியுடன்தான் எப்போதும் மிதப்பார்.  போளூர்,
முள்ளண்டிரம் என இருவேறு இடங்களில் சின்ன வீடுகள் என
ஊர்மக்கள் பேசிக் கொள்வதுண்டு.  அத்தனையும் ஆயா அறிந்ததுதான்.

ஆயிற்று.  ஆயா வீட்டிற்கு சென்றே வருடங்கள் பல
உருண்டோடிவிட்டது.  முழுதாய் ஐந்து காலண்டர் காகிதங்கள்
கரைந்ததாய் ஞாபகம்.  தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில்
இருந்தாலும் ஸ்பரிச உணர்வுக்கு ஈடு இணை ஏது?  இதோ தாத்தா
இறப்பின் பொருட்டு அவரின் 15ம் நாள் கடைசி காரியத்திற்காக
செல்லக்கூடிய சூழ்நிலை.

‘சேவூரெல்லாம் இறங்குங்க’ என்று ஏழு கட்டையில் கத்தினார்
நடத்துனர்.  தூங்கிக் கொண்டிருந்த விக்ராந்த்தை தோளில் போட்டபடி
இறங்கினேன்.  தெரு நெடுகிலும் என்னைக் குறித்தான நலம்
விசாரிப்புகளுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

ஆயாவுக்கு நெற்றியில் ஒரு ரூபாய் அளவு பெரிய பொட்டு
வைத்து அந்த சிறிய கொண்டைக்கு தலை கொள்ளாத பூ
சொருகியிருந்தனர்.  சிவப்பு காடா புடவை வெள்ளை ரவிக்கை
என சடங்கு போர்வை அவர் மேல் போர்த்தப்பட்டிருந்தது.

தோல் சுருங்கிப் போன அவரின் கை தொட்டபோது
ஏற்பட்ட உஷ்ணம் என் உடம்பெங்கும் பரவியது.  ஷேமலாப
விசாரிப்புக்கு அங்கே அவசியமில்லாமல் போனது.

இரண்டு வருடங்களாக தாத்தா படுத்த படுக்கையாய் இருந்து
ஆயாவிற்கு பெரும் பாரம் கொடுத்து விட்டிருந்தார் என்று பேசிக்
கொண்டனர்.  நேரம் நெருங்க படையல் முடிக்கப்பட்டது.  கோடி
போடுதலுக்கு ஆளாள் கொண்டு வந்த புடவையை வாங்கி
பார்த்துக் கொண்டிருந்தது ஒரு கூட்டம்.

விடியற்காலை வரை மணிக்கொருதரம் தாத்தா படம் முன்
கற்பூரம் ஏற்ற வைத்து அழ வைத்து தூங்கி விடாதபடி அலைக்கழித்தது
சடங்கு சம்பிரதாயம் என வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்த ஊர்
பெருசுகள்.  படித்த படிப்பும் எடுத்த டிகிரியும் பயனற்று போனது அங்கே.

‘முக்காடு கோடி’ போடுதலில் கடைசி நிகழ்வாக
‘சுமங்கலிங்க கடைசியா அவர் கையால குங்குமம் வாங்கி
நெத்தில வெச்சுங்க, ஆனா தாலில வெக்கக் கூடாது’ என
கூவியபடி இருந்தார் கோடிக்காரர்.  பின் உள்ளே அழைத்துச்
செல்லப்பட்டார்.  ஓர்; அமானுஷ்ய மௌனம்.  தாலியும் மெட்டியும்
அகற்றப்பட்டு கண்ணாடி வளையல்கள் உடைக்கப்பட்டு பூவும்
பொட்டுமற்ற ஆயாவாக திரும்பி வந்தார்.  அம்மாவும் சித்திகளும்
கதறி கதறி அழுதனர்.  ஆனால், ஆயாவின் முகம் முன்னைக்
காட்டிலும் பிரகாசமாய், நிம்மதியாய் மாறியதாக பட்டது எனக்கு.


 நன்றி : கல்கி

                             

Friday, July 8, 2011

செவிடன் மனைவி




      திருமணமான இந்த மூன்று மாதத்தில் ரொம்பவே
சோர்ந்து போனாள் சாதனா.  செவிடனான கந்தனை
கட்டிக் கொண்டதிலிருந்து இப்படித்தான் மாறிப்
போயிருந்தாள் அவள்.  பட்டாசு சத்தம் போல் வெளிப்படும்
அவளின் தொடர் சிரிப்பு எங்கோ காணாமல்
போய்விட்டிருந்தது.  இருவோரமும் கண்ணீரால் நனைந்த
தலையணைகள் அவளுக்கு மிக நீண்ட இரவை
தந்துக் கொண்டிருந்தது.

       கடைக்குட்டியாக ஆறாவது பெண் சாதனா.
வறுமையும் அப்பாவின் பக்கவாத பாதிப்பும் குடும்பத்தை
ஆட்டிப் படைத்தன.  ஐந்து பெண்களையும் தட்டுத்தடுமாறி
கட்டிக் கொடுத்த அப்பா இவள் முறையின்போது ஏதும்
செய்ய இயலா கல்லாகி போனார்.

       இதன் பொருட்டு அவர் குமைந்த போதெல்லாம்
அவரை ஆதரித்து தம் மயிலிறகு பேச்சால் வருடிக் கொடுப்பது
அவளின் வாடிக்கை.

      அவளின் 28வது வயதில் அவள் முன் 2 வரன்களின்
விவரங்களை அப்பா தலையை தொங்க போட்டபடியே
தெரிவித்தார்.  செவிடனான இளவயது கந்தன் ஒன்றும்,
48 வயது மூர்த்திக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்படுவதுமாக
இரு சந்தர்ப்பங்கள்.

      அப்பாவிற்கு பின் தனக்கு யாரென்ற நிஜம் சுட, தராசு
கோல் போல தன் கைகளால் நிறுத்திப் பார்த்து கந்தனை
கட்ட சம்மதித்தாள்.  இந்தியா பாகிஸ்தான் உறவு போல்
அவ்வப்போது பேச்சுவார்த்தையுடன் முறிந்து போன பழைய
வரன்களை போல் இல்லாது முகூர்த்தத்தில் முடிந்தது. 
வாழ்ந்து கெட்ட குடும்பமாதலால் அவளின் உறவுக்கு முன்
தலை நிமிர்ந்து வாழ வேண்டிய கட்டாயம்.  கந்தனோ
சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை போல் அவ்வளவு
அப்பிராணியாக இருந்தான்.  கிட்டதட்ட 16 வயதினிலே
கமல் ரகம்.  என்ன கொஞ்சம் செவிட்டு கமல்.  சமயத்தில்
வாயும் திக்கும்.

       மணமான 20-ம் நாளே தனிக்குடித்தனம்.  வீட்டில்
நிலவிய ஒருவித வெறுமை பேயை போல் பிய்த்துத் தின்றது.
துயிலெழுந்ததிலிருந்து படுக்கை வரை ஓயாமல் பேசும்
அவளின் இளரோஜா வண்ண இதழ்கள் பேச இயலாமல்
வெடித்துப் போயிற்று.  அவன் சொற்களுக்கு பதிலாக இவள்
சமிக்ஞைகள் செய்த வண்ணம் இருந்ததால் இவளின் உதடுகள்
ஒட்டிக்கொண்டு பிரிய மறுத்தன.  பேசுவதே மறந்து
எப்போதும் அபிநயம் பிடிக்க ஆரம்பித்துவிட்டாள், இவள்
என்னவோ ஊமை போல.

       தெரு நெடுகிலும் அவளை செவிடன் பொண்டாட்டி
என்றே அழைத்தனர்.  அவளின் பெயர் தேர்தல் சமயம் தரும்
வாக்குறுதி போல் மறந்து மண்ணோடு போயிற்று.  அந்த
அடைமொழியை களைவது எப்படி என்ற யோசனையில்
அசூயை உண்டானது.

       விடுமுறை தினங்களில் தாய்வீட்டு தெரு மழலைகள்
இவளின் கதை சொல்லும் திறனில் சொக்கிப் போய்
திண்ணையில் அமர்ந்து கதை கேட்க ஆளாய் பறந்த
சேதிகள் கடல் கொண்ட பூம்புகாராய் அழிந்து போயின.

       கணவன் மனைவி சேர்ந்து பேசிப் பகிர வேண்டிய
சந்தர்ப்பங்கள் தனக்கு வாய்க்காமல் போனது எவ்வளவு
பெரிய துரதிஷ்டம் என்பதில் மருகினாள்.  எதை இட்டு அந்த
வெறுமையை நிரப்புவது என்பதில் குழம்பிப் போனாள். 
ஆனால், அப்பா ஏற்படுத்திக் கொடுத்த இல்வாழ்க்கையை
நிராகரிக்கக் கூடாது என்பதில் மட்டும் அவளின் உறுதி
தென்பட்டது.

      இருசக்கர வாகனத்தில் பேசிக்கொண்டே நெடுந்தொலைவு
செல்லும் காதலர்கள், கடற்கரையில் மனைவியை சமாதானம்
செய்ய வார்த்தைகளாலான அஸ்திரத்தை பிரயோகிக்கும்
கணவன், பள்ளி விட்டு அழைத்து வரும் தம் மகளிடம் சுவாரசிய
உரையாடல் புரிந்தபடி வரும் நடுத்தர வயது இளைஞன் இப்படி
எதிர்ப்படும் அனைவரையும் கண்டு மனம் பிசகியது தொடர்
கதையாயிற்று.

       இத்தருணத்தில்தான் பக்கத்து வீட்டுக்கு புதியதாய்
குடித்தனம் வந்தனர் வினோத் தம்பதியினர்.  வெளிப் பார்வைக்கு
சினிமா கதாநாயகன் போல்தான் இருந்தான் வினோத்.  ஆனால்
இரவானால் தண்ணி கிண்ணி போடாமலேயே அவன் பேசும்
பேச்சு அத்தனையும் பேசக்கூடாத ரகம்.  சென்சார் கொண்டு
கத்தரிக்க தகுந்தவை.

      சந்தேகத் தீ அவனை ஆட்டிப் படைக்க அவன் மனைவிக்கு
கொச்சை வார்த்தைகளில் நித்தம் அர்ச்சனைதான்.  அன்று அந்த
நீண்ட மழை இரவிலும் அப்பட்டமாய் கேட்டது அவனின்
இடியோசை.  இப்படியும் ஒரு மனிதனா என காதை
பொத்திக் கொள்வாள் சாதனா.

       மறுநாள் மழை விட்டுச் சென்ற மிச்ச சொச்ச  இடங்களில்
மெல்ல நடந்து வந்தாள் வினோத்தின் மனைவி.
‘கொஞ்சம் டீத்தூள் இருக்குமா?  மளிகை சாமான் இன்னைக்கு
வந்துரும்.  நாளைக்கு காலம்பற கொடுத்துடுறேன்’.

      இதோ தரேன்.  வாங்க உள்ள…

       இரவு நடந்த பேச்சுக்கும் அவளுக்கும் சம்பந்தமே
இல்லாததை போன்ற முகமலர்ச்சி, கொண்டு வந்த கரண்டியில்
தூளை நிரப்பியபடியே கவனித்தாள் சாதனா.

      “கேள்விப்பட்டேன்…  உங்க வீட்டுக்காரரு செவிடாமே?”
தப்பா நெனச்சிக்காதீங்க.  இந்த தெருவே செவிடனை கல்யாணம்
பண்ணிக்கின பெரிய மனசு பொண்ணுன்னு ரொம்ப பெருமையா
பேசிக்குறாங்க.

       பேசிய அர்த்தம் முகத்தில் அறைந்ததும் இவளுள் இருந்த
ஏதோ ஒன்று உடைந்து நொறுங்கியது போலிருந்தது.

       உங்களுக்கு ஒன்னு தெரியுங்களா?  என் காது
செவிடாயிட கூடாதான்னு நான் நித்தம் ஏங்குறேன்.  அதுகூட
ஒரு குடுப்பினை தாங்க எனக்கு.

        சாதனா ஸ்தம்பித்து நின்றாள்.  அவளுடைய
உள்ளத்திலிருந்து எந்தக் குப்பையையோ வெளியில் வாரிப் போட
வேண்டியிருந்தது போல் அவளுக்கு தோன்றியது.  அந்தக்
குப்பைதான் நித்தமும் மக்கி நினைவுகளிலெல்லாம் நாற்றமடித்தது.
அவள் சென்ற நீண்ட நேரம் கழித்தும் இவளின் கண்கள் நீர்
சுரந்த வண்ணம் இருந்தது.

     மொட்டை மாடி அழுக்கை துடைத்தெறிந்த அடைமழை
போல அவளின் புழுங்கிப் போன மனம் கண்ணீரில் கரைந்து
காணாமல் போனது.


    இப்போதெல்லாம் யாரேனும் அவனை கூப்பிட்டால்
அவனுக்கும் சேர்த்து இவள் காதில் வாங்கிக் கொள்கிறாள்.
அவனுக்கு செய்யும் சமிக்ஞைகளில் கூட அன்னியோன்யம்
அதிகரித்தது.  செவிடன் பொண்டாட்டி என யாரேனும்
கூப்பிட்டால்முதலில் புன்முறுவல் பூக்க அவளின் இதழ்
தயாராயிருந்தது.  பின் எப்போதும் அவள் தலையணை
ஓரங்கள் கண்ணீரில் நனையவில்லை.


 நன்றி :தேவதை
                               
                           
                                   

Thursday, June 2, 2011

வாடகைத்தாய்

நடுநிசி இரவில் வந்த அந்த அதீத வலியின் பொருட்டு
உறக்கம் கெட்டு விழித்தாள் மலர். எப்படியான வலி இது.
முன் எப்போதும் இதுபோல் வந்ததில்லையே. இதன்
பொருட்டு ஏதேனும் தீங்கு நேருமோ என மனமெல்லாம்
படபடப்பு.

பாதிக்கும் மேல் குச்சிகள் வெளிவந்துவிட்ட அந்த
கோரைப் பாயில் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தவள்
கைகளை தரையில் ஊன்றியபடி மெல்ல எழுந்தாள்.
இரட்டைக் குழந்தைகளை சுமந்துக் கொண்டிருந்த வயிறு
அவளுக்கு முன்பாக நகர பெருமூச்சு வாங்கியபடி அறையின்
மூலையில் தொங்கிக் கொண்டிருந்த முருகப்பெருமானின்
புகைப்படத்தின் முன்பு வந்தாள்.

படத்தை பார்த்ததும் தானாகவே கைகள் தொழத் துவங்கியது.
இனம் புரியாத கலக்கத்திற்கு விடை கூறும் விதமாய் கண்களை
மூடி தியானித்து ஆழந்தாள். கடவுளே, இந்த இரட்டை
குழந்தைகளை நல்லபடி பெற்றுக் கொடுக்கும் வலிமையை
எனக்குக் கொடு. ராதா தம்பதியிடம் நல்லபடி குழந்தைகளை
ஒப்படைத்துவிட்டால் போதும். என் கடனெல்லாம் பறந்துவிடும்.
எந்த பாதிப்பும் இன்றி குழந்தைகளை காப்பாற்றப்பா முருகா
என்பதாக இருந்தது அவளின் பிராத்தனை.

மறுநாள் விடிந்ததும் விடியாததுமாக சிவப்பு மாருதி காரில்
வந்திறங்கினாள் ராதா. மொத்தமே பத்தடி கொண்ட அந்த
ஓட்டு வீட்டின் நுழைவு வாயில் சிறுத்து இருக்கவே தலை
குனிந்து உள்ளே நுழைந்தாள். கையோடு கொண்டு வந்த
பழக்குவியல் அடங்கிய கவர்களை மலரின் கைகளில் திணித்தாள்.

“எதுக்கும்மா இவ்வளவு பழம்…”

என்ன மலர், மறந்துட்டியா உன் வயித்துல வளர்றது ஒன்னுல்ல
இரண்டு குழந்தைங்க. அதை ஆரோக்கியமா நீ எனக்கு பெத்துக்
கொடுக்கணுமில்ல. அதுக்குத்தான். ஆமாம், உன் பொண்ணு
பார்கவி எங்க?

இங்கதாம்மா வெளியில விளையாடிட்டு இருந்தா.
இதோ கூப்பிடுறேன்.

இன்னிக்கு டாக்டர் செக்கப் ஆச்சே. அதான் அழைச்சிட்டு
போகலாம்னு கார் எடுத்துட்டு வந்தேன். அப்புறம்
மாத்திரையெல்லாம் சரியா சாப்பிட்டியா… வாந்தி எப்படி இருக்கு?

5 மாசம் முழுசாயிடுச்சில்ல, வாந்தி நின்னுருச்சிம்மா.

சரி, ஏன் எதையோ பறிகொடுத்த மாதிரியே எப்பவும் மூஞ்சிய
வெச்சிட்டிருக்க. ஓ… செத்துப் போன உன் புருஷனை
நினைச்சிட்டிருக்கியா. அதையெல்லாம் மறந்துடு. நீ சந்தோஷமா
இருந்தாதான் உன் வயித்துல இருக்குற என் குழந்தைங்க நல்லா
இருப்பாங்க. புரிஞ்சுதா. சரி சரி கிளம்பு ஹாஸ்பிடலுக்கு நேரமாச்சு.


இதோ ஒரு நிமிஷம் உட்காருங்கம்மா. நான் ரெடியாயிடுறேன்.
மெல்லிய பூக்கள் போட்ட சந்தன நிற சேலை, அதை ஒத்த
ரவிக்கை என பாந்தமாய் மாறினாள். வகிடெடுத்த நீண்ட
கூந்தலை பின்னி அடியில் முடிச்சு போட்டாள். கணவன்
இறந்ததிலிருந்து பாலைவனமாய் மாறிவிட்ட நெற்றியில்
ஒற்றை ஈச்சமரம் தென்பட்டது போல் சின்ன கருப்பு திலகம்
வைத்துக் கொண்டாள் மலர் அதுவும் ராதா கொடுத்த தைரியத்தில்.

ஐந்து வயது பார்கவியையும் அள்ளி காரினுள் போட்டுக்
கொண்டு மருத்துவமனை நோக்கி கிளம்பினார்கள்.
வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியம் குறித்து
பயணிக்கையில் விலாவாரியாக சொல்லிக் கொண்டு
வந்தாள் ராதா. கேட்டுக் கேட்டு சலித்துப் போன மலருக்கு
மனம் பின்னோக்கி பயணப்பட்டதில் ஆச்சர்யமில்லை.

விபத்தொன்றில் இறந்துவிட்ட கணவனை நினைத்து
நித்தம் அழுது கொண்டிருக்கையில் சதா பசியெடுத்து
வயிறு தன் உரிமையை கோர வேறு வழியின்றி
கைக்குழந்தையுடன் வீட்டு வேலைக்கென சென்ற வீடுதான்
ராதாவினுடையது. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும்
குழந்தை இல்லை ராதாவிற்கு. நீர்க்கட்டிகளின்
தொந்தரவினால் கர்ப்பப் பையையே அகற்றிவிட,
வாடகைத்தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள
எத்தனிக்கையில் கட்டுமஸ்தான தேகம் கொண்ட மலரின்
நினைவுகள் ராதாவை ஆக்கிரமித்தது.

ஆரம்பத்தில் மறுத்த மலர், குழந்தை பிறந்தவுடன் பணம்
சுளையாக 1 லட்சம் கைக்கு கிடைக்கும் என்ற
பிரம்மாஸ்திரத்திற்கு கட்டப்பட்டாள். பணம் வந்தவுடன்
வீட்டிற்கு வெளியேயே கவுரவமாக ஒரு பெட்டிக்கடை
வைத்துக் கொள்ளலாம் என்பதாக இருந்தது அவள் எண்ணம்.

இதோ கருவை அவள் கருப்பைக்குள் செலுத்தி 5 மாதங்கள்
பூர்த்தியாகிவிட்டது. அதிலும் இரட்டை கரு. வேலைக்காரியாக
இருந்தபோது சதா சிடுசிடுத்த ராதா அவளின் குழந்தையை
சுமக்கையில் காரியத்தில் கண்ணாக பாசமழை பொழிந்தாள்.
ராதாவின் குணம் தெரிந்து அவள் மேல் கொண்ட
பரிதாபத்தின் பேரில் அத்தனையும் ஏற்றுக் கொண்டாள் மலர்.
செக்கப் முடிந்து மலரையும் மகளையும் வீட்டில் விட்டு
கிளம்பிவிட்டாள் ராதா.

போனவள் போனவள்தான். சதா இரு தினங்களுக்கு
ஒருதரம் மலரை வந்து பார்ப்பவள் ஏனோ இருபது நாட்களாக
வரவேயில்லை. என்னவாக இருக்கும் என மனது ஓரத்தில்
ஒரு நெருடல். மேலும் பத்து நாட்கள் கடந்து போகவே
செக்கப் குறித்து ஞாபகப்படுத்த வீடு நோக்கி புறப்பட்டாள் மலர்.

சிவப்பு கார்ப்பெட் விரித்திருந்த அந்த ஹாலினுள்
நுழைந்ததுமே ஏசியின் குளிர் மெல்ல உடம்பில் ஊடுருவியது.
இவளைப் பார்த்ததுமே ராதா வீசிய அலட்சியப் பார்வையில்
திக்கென்றது இவளுக்கு.

அம்மா, நாளைக்கு செக்கப். டாக்டரைப் பார்க்கணும்.
அதான் உங்களுக்கு ஞாபகப்படுத்தலாம்னு வந்தேன்.

ம்…ம்… தெரியும். நானே வந்து உன்னை பார்க்கலாம்னு
தான் இருந்தேன். உங்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல.
இந்த குழந்தைங்க எனக்கு வேணாம்னு முடிவு
பண்ணிட்டேன். அதனால…

என்னம்மா சொல்றீங்க, குழந்தை வேணும்னு எவ்வளவு
பிரியமா இருந்தீங்க. இப்பப் போயி…


உங்கிட்ட சொல்லித்தானே ஆகணும். என் புருஷனுக்கு
இன்னொரு பொண்ணு கூட தொடர்பு இருக்கு. ஒரு மாசம்
முன்னதான் இது எனக்கு தெரிய வந்துச்சு. என்னை
ஏமாத்தின அவரோட வாழ எனக்கு விருப்பமில்ல.
டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணியிருக்கேன். என் வாழ்க்கையே
அர்த்தமில்லாம போனதுக்கப்புறம் இந்த குழந்தைங்க
எதுக்கு. அதனால…

அதனால

டாக்டர்கிட்ட பேசிட்டேன். கருவ கிளீன் பண்ணிட
போராடி சம்மதம் வாங்கிட்டேன்.

கேட்டதும் அடிவயிற்றில் அப்படியொரு கலக்கம்.

என்னம்மா விளையாடுறீங்களா, ஆக்ரோஷமாய்
சீறி வந்து விழுந்தது வார்த்தைகள்.

நீங்க வேணும்னும்போது வளர விடவும் வேண்டாம்னா
வெட்டி விடவும் இதென்ன தோட்டத்துல விளையற
செடின்னு நினைச்சீங்களா. குழந்தைம்மா… அதுவும்
இரண்டு உயிர். நீங்க ஐயாவ கூப்புடுங்க. நான்
அவர்கிட்ட பேசிக்குறன்.

உண்மை தெரிஞ்சு நான் சண்டை போட்டதும் அந்த
மனுஷன் வீட்டுக்கே வர்றதில்ல. இங்க பார், ரொம்ப
பேசாத. உனக்கு கஷ்டம்தான், நான் இல்லேன்னு
சொல்லல. என் நிலைமையையும் கொஞ்சம் யோசிச்சு பார்.

முதல்ல, என்னைப் பத்தி நீங்க நினைச்சுப் பாருங்க. புருஷன்
போனதுக்கப்புறம் வயித்த தள்ளிட்டு நான் நின்னப்ப என்
நடத்தைய சந்தேகிச்சு பலர் பலவிதமா பேசுனாங்க.
ஒரு உதவி செய்யற திருப்தியில அதையெல்லாம்
பொருத்துக்கிட்டேன். இப்ப, என் உயிருக்கே உலை
வைக்கப் பாக்குறீங்களே.

அடி அசடே… இங்கப் பாரு. நான் டாக்டர் கிட்ட பல
தடவை கன்சல்ட் பண்ணிட்டேன். கரு வளர்ச்சி
சரியில்லைன்னா அதை பிரசவம் மாதிரி வலி உண்டாக்கி
வெளியே எடுக்கிற முறையிலதான் உனக்கு செய்யப்
போறாங்க. இது அபார்ஷன் மாதிரி இல்லை. அதனால
உனக்கு எந்த பாதிப்பும் இல்லை. மூணு மாசம் ரெஸ்ட்
எடுத்துக்கிட்டா போதுமாம்.

குறை பிரசவத்த உண்டாக்கி சே… முன்ன பின்ன
குழந்தைய சுமந்திருந்தா தானே அதோட அருமை தெரியும்.

யேய், என்ன வாய் ரொம்ப நீளுது. உனக்கு அவ்வளவு
அக்கறை இருந்தா நீயே பெத்து வளர்த்துக்கோயேன், பார்ப்போம்.

இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க. இனிமே இது ஈவு
இரக்கம் இல்லாத உங்க குழந்தைங்க இல்ல, என் குழந்தைங்க.

இடியென பேசிவிட்டு மின்னலாய் வெளியேறினாள்.
ஆவேசத்தில் சொல்லிவிட்டு வந்தாலும் உள்ளுக்குள்
உதறல்தான். இந்த வறுமையில் பார்கவியோட சேர்த்து
3 குழந்தைகளை எப்படி வளர்ப்பது. நாளுக்கு நாள்
வயிற்றில் ஏறும் சுமை ஒருபுறம், பிரசவத்திற்கு பின் எதிர்
கொள்ளப் போகும் சவால் மறுபுறம் என அவளை
அலைகழித்தது. அக்கம் பக்கத்தினர் அவளின் கதையைக்
கேட்டு உச் கொட்டினர்.


பிரசவ தேதியும் வந்தது. ஒரு பெண், ஒரு ஆணென இரு
குழந்தைகளை பெற்றெடுத்தாள் அரசு மருத்துவமனையில்.
ஆண்டவன் ஒரு கதவை மூடினால் மற்றொரு கதவை
திறப்பான் என்பதற்கேற்ப அக்கம் பக்கத்தினர் உதவியில்
நெக்குறுகி போனாள் மலர். குழந்தைகளைப் பார்த்ததும்
புது வைராக்யம் மனதில் ஊற்றெடுத்தது.

ராதா தம்பதியரின் பேரில் வழக்கு தொடரலாம் என சிலர்
அறிவுறுத்தியும் எங்கே குழந்தைகளை பிரிய வேண்டி
வருமோ என்ற கலக்கத்தில் மறுத்துவிட்டாள்.

மொட்டுக்கள் இரண்டும் தவழ்ந்து முட்டிப்போட
தொடங்கியிருந்தன. பார்கவியும் தம்பி தங்கை என
எப்போதும் அவர்களுடனேயான உலகமாகிப் போனாள்.

மழை வலுத்திருந்த ஒரு முன்னிரவு நேரத்தில் பரிதாபமாய்
முகத்தை வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர் ராதாவும்
அவளது கணவன் மோகனும்.

தவழ்ந்துக் கொண்டிருந்த குழந்தைகளை ஆசையாய்
பார்த்துக் கொண்டிருந்தார்கள். சேலை தீப்பற்றிக் கொண்டது
போல் எரிச்சல் பரவியது மலருக்கு, அவர்களைப் பார்த்ததும்.

மலர், என்னை தப்பா நினைச்சிக்காத. உனக்கு நான்
பண்ணதெல்லாம் பெரிய தப்புதான். இப்ப என் வீட்டுக்காரரு
திருந்தி வந்துட்டாரு. நான் பேசினத மனசுல வெச்சுக்காம
என் குழந்தைங்கள என்கிட்ட கொடுத்துடு. முன்ன பேசின
ஒரு லட்சத்துக்கு இப்ப 2 லட்சமா வேணா கொடுத்துடுறேன்.

பணத்தை வீசி பாசத்தை விலை பேச வந்திருந்தவர்களின்
கண்களை கூர்மையாக நோக்கினாள். அவளின் பார்வை
தகிப்பை தாங்க இயலவில்லை இருவராலும்.

ரெட்டைக் குழந்தைகளை பெற்று நாதியின்றி இருந்தபோது
இல்லாத மனிதாபிமானம் தற்போது சுயநலத்தின் பேரில்
வந்ததா என்பதாய் இருந்தது அவள் கண்கள் கேட்ட கேள்வி.

வண்டி வந்த சத்தம் கேட்டு என்னவோ ஏதோ என உதவிக்கு
வந்தனர் அக்கம் பக்கத்தினர். கூட்டத்தைப் பார்த்ததும்
மருண்டனர் தம்பதி.

“ஆம்பளைப் பிள்ளைய வேணும்னா நீயே வெச்சுக்க
பொம்பள பிள்ளைய மட்டுமாவது எங்களுக்கு கொடுத்துடு”
மெல்ல கசிந்து வெளிவந்தது ராதாவிடம் வார்த்தைகள்.

எச்சில் கூட்டி ‘தூ’ என காறி உமிழ்ந்தாள் அவர்களைப் பார்த்து.

தலையை தொங்கப் போட்டபடி வெளியேறிய
அவர்களைக் கண்டு பொக்கைவாய் காட்டி
சிரித்தது மழலைகள் இரண்டும்.



நன்றி - ithamil.com

Friday, February 25, 2011

நினைவலைகள்





காலை ஏழு மணி. குளிர் நியூஜெர்சியில் வாட்டிக்
கொண்டிருந்தது. ஜெர்கின் அணிந்த வெள்ளை மனிதர்கள்
கண்ணுக்கு தென்பட்டார்கள். கண்ணாடி ஜன்னல் வழி வெளியே
பார்த்துக் கொண்டிருந்தாலும் கைகள் பரபரவென சமையலை
கவனித்துக் கொண்டிருந்தது சாரதாவிற்கு. நம்மூர் மார்கழி
மாதமே தேவலாம் போலும், மனதில் அசைபோட்டபடியே
வேலையை தொடர்ந்தாள்.

நியூயார்க் உலக வர்த்தக மைய கட்டிடத்தை நீலநிற
லேசர் ஒளி பாய்ச்சி மாய கட்டிடம் உருவாக்கியதைப் பற்றி
ப்ரியாவும் கௌசிக்கும் பேசிக்கொண்டிருந்தது கிச்சனினுள்
அப்பட்டமாய் கேட்டது.

இடையில் குழந்தை அழும் சத்தம் கேட்கவே அவளின்
உடல் இன்னும் பரபரப்பானது. குழந்தையை பார்க்க வேண்டி
அடுப்பை குறைக்க நினைக்கையில் திடீரென ஒரு தோன்றல்.
’ம்… ப்ரியா அங்கேதானே இருக்கிறாள். தூக்கட்டுமே.
பெற்றவள் அவள்தானே’ என்று.

மழை அடர்வது போல் குழந்தையின் அழுகை ஓசையும்
வலுத்தது. மனம் தாளாமல் குழந்தையிடம் விரைந்தாள் சாரதா.

அங்கே ப்ரியா குழந்தையை தூக்காமல் வாயாலேயே
சால்ஜாப்பு காட்டிக் கொண்டிருந்தாள்.

கோபம் பொத்துக் கொண்டு வந்தது சாரதாவிற்கு.

‘ஏன்டீ, எவ்வளவு நேரம் குழந்தை அழறது. நீ பாட்டுக்கு
உன் வேலைய பாத்துட்டிருக்க. கொஞ்ச நேரம் தூக்கக் கூடாதா?’

மா, எனக்கே டைம் ஆயிடுச்சி. பசிக்குதான் வினோ
அழுவுறான். கஞ்சி கலக்கி குடுத்துடு.

மாப்பிள்ளை சோபாவில் அமர்ந்தபடி லேப்டாப்பில்
தலையை கொடுத்து விட்டிருந்ததால் அதற்குமேல் ப்ரியாவை
திட்ட இயலாமல் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு
குழந்தையை தூக்கியபடி கிச்சனுக்கே வந்துவிட்டாள் சாரதா.

என்ன பெண் இவள். பெற்ற குழந்தை கதறி அழுகையிலும்
கல்மனம் படைத்தவள் போல் அவள் வேலையிலேயே குறியாக
இருக்கிறாளே. இவளை எப்படி என் வயிற்றில் சுமந்தேன்.
என்னதான் அமெரிக்கா வந்தாலும் தாய்ப்பாசம் வற்றிவிடுமா.
மாறாக இங்குள்ள பெண்கள் வேலைக்குச் சென்றாலும் என்ன
லாவகமாக குழந்தைகளையும் வீட்டையும் பார்த்துக்
கொள்கிறார்கள். ப்ரியா சோம்பேறிதான். ஆனாலும்
இந்தளவிற்கா. சே..

மடமடவென சத்துக் கஞ்சி காசி வினோவுக்கு மடியில்
போட்டபடி பருக கொடுத்தாள். பசியாறிய குழந்தை
பொக்கைவாய் காட்டி சிரித்தது சாரதாவை பார்த்து.
காலையிலிருந்து உழைத்த களைப்பெல்லாம் களைவது
போல் இருந்தது அந்தச் சிரிப்பு. சமயத்தில் குழந்தையை
முழுதாக கொஞ்சக்கூட முடியாதபடி வேலைகள்
நாலாபக்கமும் பிடித்து இழுக்கும்.

வயது 65 ஆகிவிட்டபடியால் முன்போல் ஓடியாடி வேலை
செய்ய முடியாத நிலைமை. பிள்ளையை பார்த்துக் கொள்ள
இயலவில்லை என்ற மகளின் நச்சரிப்பால் பிளைட் ஏறியவள்தான்.
தற்போது ஒரு வருடம் உருண்டோடியும் இவளை அனுப்புவதாய்
இல்லை. சாரதாவின் விசாவை கால நீட்டிப்பு செய்ய அவர்கள்
பேசிக்கொள்ளும் போதெல்லாம் இவளுக்கு வயிற்றில் புளியை
கரைக்கும்.

ப்ரியாவும் மாப்பிள்ளையும் வேலைக்கு போய்விட
துறுதுறுவென பறக்கும் வினோத்தை துரத்த இறக்கை
தேவைப்பட்டது சாரதாவிற்கு. அவ்வப்போது வந்து
பாடாய்படுத்தும் மூட்டு வலியினால் வினோத்தை பார்த்துக்
கொள்வது பெரும் கஷ்டம். இடையில் சமையல், துணியை
மெஷினில் போடுவது எடுப்பது, வீட்டை பராமரிப்பது என
அத்தனையும் சாரதாவின் தலையில்தான். தன் பெண்ணே
ஆனாலும் ப்ரியாவை எப்பொழுதேனும் வார்த்தைகளால்
லேசாக கடிந்தாலும் சுருக்கென்று கோபம் பொத்துக்கொண்டு
வந்துவிடும் மாப்பிள்ளைக்கு. அவருக்கு பயந்தே
பேசுவதைக்கூட குறைத்துக் கொண்டாள்.

மாப்பிள்ளைக்கோ சாப்பாட்டில் இந்தியாவை போல
அஞ்சு மூணும் அடுக்காக வேண்டும். மாப்பிள்ளை வீட்டில்
இருப்பது அகதி வாழ்க்கை வாழ்வது போல் இருந்தது.
ஊரிலிருந்தாலாவது மருமகள் பாதி வேலைகளை பகிர்ந்துக்
கொள்வாள். அக்கம் பக்கம் ஒரு பேச்சில்லை. எல்லாம்
ஆங்கில யுவதிகள். அவர்களிடம் என்னத்தை பேச. இதே
வேலூரெனில் தெருத் திண்ணையில் அமர்ந்தபடி பக்கத்து
வீட்டு மாமியிடமும் எதிர்வீட்டு பானுவிடமும் ஊர் நடப்பும்
விவாதமும் எப்படி தூள் பறக்கும். மார்கழியில் போட்ட
கோலத்தின் அழகு, தீபாவளிக்கு எடுக்கும் கெளரி நோன்பு,
உறவு வீட்டின் திருமணங்கள், காது குத்து களேபர வெட்டு
குத்துக்கள், சதுர்த்திக்கு வாங்கும் களிமண் பிள்ளையார்,
துவர மலர் கொண்டு எரியூட்டப்பட்ட பொங்கல்… இப்படி
இழந்தது எத்தனை எத்தனை.

இதெல்லாம் கூட பரவாயில்லை. ஆனால் இந்த
முதுமையில் கணவர் அருகாமையில் வாழ்க்கை நடத்த
இயலவில்லையே என்ற ஆதங்கம்தான் அவளை அசூயை
அடையச் செய்தது.

எண்ண அலைகள் அவள் காலை தழுவ தழுவ நினைவுகள்
மணலாய் அரித்து அவளை தன்னுள் உள்வாங்கிக் கொண்டது.
மனம் ஒன்றிப்போய் அசைபோட்டது.

திருமணமாகி இருபது வருடங்கள் வரை மூத்தார் ஓரப்படி
என கூட்டுக்குடும்ப வாழ்க்கைதான். பெரும்பாலான வருடங்கள்
இவர்களின் வாழ்க்கையை கத்திரி போட்டு வெட்டி வைத்தது
பணி நிமித்தமான டிரான்ஸ்பர்கள். கணவருடன் தனியாக
பேசிக்கொள்ள நேரமெல்லாம் பெரிதாக இருந்ததில்லை.
ஆனால், அந்த பாச உணர்வை எப்படிச் சொல்ல… தனக்காக
சில கறித்துண்டுகளை இலையிலேயே விட்டுவைத்து
வருவதிலாகட்டும் கடும் வெக்கையில் ஜில்லென்று
பன்னீர்சோடா வாங்கி வருவதிலாகட்டும் இடுப்பொடிய
தீபாவளி பலகாரம் செய்த நாட்களில் இலகுவாக கால்
அழுத்தி தைலம் தடவி விடுவதிலாகட்டும் அவரின்
ஒவ்வொரு செய்கையிலும் அன்பு இழைந்தோடும்.

இதோ இந்த வயதான காலத்தில் தான் பெண் வீட்டிலும்
அவர் பிள்ளை வீட்டிலும் உழல வேண்டிய கதி. ஒற்றை
ஆண்பிள்ளை, மருமகளுக்கு முன் வாய்செத்த பிள்ளையாக
மாறிப் போனதில் அவரைவிட எனக்குத்தான் வருத்தம் தெறிக்கும்.
ரிட்டயர் ஆகி வீட்டில் இருப்பதனால், ‘மாமா பால் வாங்கி வந்து
விடுங்கள், மாடியில் உலரும் துணிகளை எடுத்து வாருங்கள் என
வாழைப்பழத்தில் ஊசி சொருகுவது போல் வேலைகளை அவர்
தலையில் கட்டிவிட்டு போய்விடுவாள். அவர் அங்கு என்ன
அவதிக்கு உள்ளாகி இருக்கிறாரோ தெரியவில்லை.

அவருக்கும் என்னை பிரிய மனமில்லை. பெண்ணுக்கு
வேண்டி இங்கு அனுப்பி வைத்துள்ளார். இரண்டு
வாரத்திற்கொருதரம் போன் பேச்சு உண்டுதான். பேசுவதெல்லாம்
அவர்கள் பேசிவிட்டு கடைசியில் என்முறை வரும் பொருட்டு
சீக்கிரம் சீக்கிரம் என்பதாய் ஜாடை காட்டும் பெண்ணை
சமயத்தில் கெட்ட வார்த்தை சொல்லி வையலாம் போல் தோணும்.

சரி, நாமே போன் போடலாம் என்றாலோ அதெல்லாம்
கைவராமல் அவர்களையே நம்பி இருக்க வேண்டிய கட்டாயம்.
கம்ப்யூட்டர் ஸ்பீக்கரில் அப்படியே பேசலாம் என்கிறார்கள்.
ஆனால், மகன் அங்கே கம்ப்யூட்டர் வாங்கினால் தானே…
மளிகை வியாபாரம் பார்க்கும் எனக்கு கம்ப்யூட்டர் எதற்கு
என்பதாய் உள்ளது அவன் கணக்கு.

அவரவர் கணக்கை கூட்டி லாபக் கணக்காக்கிக் கொள்ளவே
முயல்கின்றனர். தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும்
வேறு வேறு என்று தானே சொல்லிவிட்டு போனார்கள்.

அவரவர் சுமையை அவரவர்தானே சுமக்கணும். உதவிக்கு
வரலாம் தப்பில்லை. ஆனால், மொத்தத்தையும் நானே சுமக்க
வேண்டும் என்ற மகளின் எண்ணம் எரிச்சலாய் உள்ளது. பாரம்
ஏற்றி ஏற்றி முதுகு அழுத்துவது மட்டுமில்லை, அக்கடாவென்று
மனம் இருக்க துடிக்கும் சமயத்தில் சுதந்திர மூச்சு விடக்கூட
திராணியில்லாமல் போவதை என்னவென்று சொல்வது.
சமயத்தில் தான் ஒரு பணிப்பெண்ணாய் பாவிக்கப்படுகிறோமோ
என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

சென்ற முறை போன் பேசுகையில் நொடிக்கொருதரம்
அவரிடமிருந்து வெளிப்பட்ட இருமல் ஓசைதான் கனவிலும்
நினைவிலும் ஓயாமல் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
உடம்பிற்கு என்ன என்றாலும் ஒன்றுமில்லை என்ற அதே ஒற்றை
பதில்தான் ஆதிகாலம் தொட்டு. இதோ அடுத்த அழைப்பு எப்போது
வரும் என ஏங்கி தவிப்பது வீட்டு காலண்டருக்கும் எனக்கும்
மட்டுமே தெரிந்த ரகசியம்.

தூங்கிக் கொண்டிருந்த வினோத் எழுந்து அழும் அழுகைதான்
நித்தமும் நினைவலைகளிலிருந்து மீட்டுக் கொண்டு வரும் துடுப்பு.
சற்று இளைப்பாறலுக்கு பின்னான தொடர் வேலைகள்.

எதிர்பார்க்கப்பட்டது போலவே சென்னையிலிருந்து தான்
அழைப்பு. மாப்பிள்ளைதான் முதலில் பேசிக் கொண்டிருந்தார்.
அடுத்து ப்ரியாவிடம் கைமாறியதும் அவளின் முகம் இருகத்
தொடங்கியிருந்தது. வினோத்தை இறக்கி விட்டு வந்து
வாங்குவதற்குள் அணைத்து விட்டிருந்தாள். ஏமாற்றத்தை
ஜீரணித்துக் கொண்டு வினவியதற்கு அவளின் குரல் தடுமாற்றம்
என்னுள் தவிப்பை பன்மடங்கு கூட்டிவிட்டது.

ஒன்றுமில்லையாம். அப்பாவுக்கு திடீரென லோ பி.பி.யாகிவிட
மயக்கம் வந்து மருத்துவமனையில் அண்ணா அட்மிட்
செய்துள்ளார்கள் என்றாள்.

ஐயையோ, இது என்ன விபரீதம். இதுவா ஒன்றுமில்லாத
விஷயம். அவரை அங்கே யார் பக்கத்திலிருந்து ஆதரவாக கவனித்துக்
கொள்வார்கள். பதைபதைப்பு தொற்றிக் கொண்டது.

நான் சதா புலம்பித் தீர்ப்பதை பார்த்து மாப்பிள்ளை
வினோவிடம் பொரிந்துக் கொண்டிருந்தார். மனதிற்குள்ளேயே
மருகுவதைத் தவிர வேறு வழியில்லை. துணிந்தே
சொல்லிவிட்டாயிற்று. என்னை இந்தியாவிற்கு அனுப்பிவிடுங்கள்.
நீங்கள் வரவில்லையென்றாலும் பரவாயில்லை. நானே
தட்டுத்தடுமாறி சென்றுவிடுகிறேன் என்று. ஆனால்,
அவளிடம்தான் பதிலில்லை.

‘கௌசிக், அப்பாக்கு ஹார்ட் அட்டாக்ங்குறத அம்மாகிட்ட
மறைச்சுட்டோம். ஆனா எத்தன நாளைக்கு. அப்பாக்கு ஏதாவது
ஆயிடுமோன்னு பயமா இருக்கு. அம்மா வேற போறேன்
போறேன்னு நச்சரிக்க ஆரம்பிச்சுட்டாங்க’.

ப்ரியா… இது பஸ்ட் அட்டாக்தான். ஒன்னும் ப்ராபளம் இல்லை.
மூணு அட்டாக் மேலயும் உயிரோட இருக்குற எத்தன பேர நான்
பாத்திருக்கேன் தெரியுமா. அடுத்த வாரம் நீயும் நானும் டூர்
போறோம். அதுவரை வினோவ யார் பாத்துப்பா. அதுவரைக்கும்
உங்கம்மாஇங்க இருந்துதானே ஆகணும்.

வெறும் மயக்கம்ணு சொன்னதுக்கே அம்மா
வெலவெலத்துட்டாங்க.அட்டாக்னு சொன்னா
அவ்வளவுதான். வேணா, டூர் கேன்சல் பண்ணிடலாமே.

கூல் பேபி, நான்தான் ஒண்ணும் ஆகாதுன்னு சொல்றேன்ல.

மாப்பிள்ளையும் ப்ரியாவும் அவ்வப்போது குசுகுசுவென
பேசிக் கொள்வது தெரிகிறது. அவர்கள் என்ன பேசுகிறார்கள்
என்பதுதான் புரியவில்லை.

இதோ டூர் முடிந்து இருவரும் வந்தாயிற்று. இந்தியா
செல்வதற்கான விமான டிக்கெட்டுகளும் புக் செய்தாயிற்று என்றார்கள்.
மாப்பிள்ளையின் கலிபோர்னியா நண்பரும் இந்தியா வர இணைந்துக்
கொண்டார். நெடுநாட்களுக்குப் பின் சொந்த வீட்டையும் கணவரையும்
காணப் போகும் உற்சாகம். இனி மற்றொரு முறை இங்கே வரவேண்டிய
சூழலை ஏற்படுத்தி தரவேண்டாம் என அருணாச்சலேஸ்வரரை
பிரார்த்தனை செய்தபின் வீடு பூட்டப்பட்டது.

விமான நிலையம் வந்து சேர்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்
வந்த அழைப்பு ப்ரியாவை குற்ற உணர்ச்சிக்கு தள்ளி விட்டிருந்தது.
அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்காம் என்றபடி மென்று முழுங்கினாள்.
ஆனால் சுந்தரத்திற்கு எல்லாம் முடிந்து விட்டதாகதான் தகவல் வந்தது.
தன்னைப் பார்க்க ப்ரியா தவிக்கும் தருணத்தை வைத்தே சாரதாவால்
அனுமானமாக யூகிக்க முடிந்தது, அங்கே ஏதோ அசம்பாவிதம் என்று.


ஜன்னலை மூட வேண்டாம் இப்போது என ஆங்கிலத்தில்
பைலட் கூறிக்கொண்டிருந்தது மிக மெல்லிதாகத்தான் கேட்டது
சாரதாவிற்கு. மாப்பிள்ளை அவ்வப்போது இருக்கைக்கு மேலிருந்த
பட்டனை அழுத்தி விமான பணிப்பெண்களை வரவழைத்தபடி
இருந்தார். சாரதா நெஞ்சில் நிரம்பியிருந்த உணர்வு குவியலுடன்
மெல்ல கண்மூடி சாய்ந்துக் கொண்டாள். கைகளில் அள்ளிய
நீர் சன்னமாக ஒழுகி தீர்ந்தது போல் அவளிடமிருந்த
நினைவலைகள்மெல்ல நழுவிக் கொண்டிருந்தது.

சென்னை வந்தவுடன், ப்ரியா தூங்கிக் கொண்டிருந்த
தாயின்தோளை தொட்டு உலுக்க சாரதா அப்படியே
இருக்கையின் பக்கவாட்டில் சாய்ந்தாள். பின் எப்போதும்
நினைவலைகள் சாரதாவை தொந்தரவு செய்யவில்லை.



நன்றி : கல்கி

Wednesday, February 16, 2011

பயணத்தின் போது...........





பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன்.என்னைப்போல்
ஒரு தம்பதியும் பேருந்திற்காகக் காத்திருந்தனர்.
அவர்கள் ஏற வேண்டிய பேருந்து வரவும் இருவரும்
ஆளுக்கொருபுறமாய் முண்டியடித்துக் கொண்டு ஏறினர் .
பேருந்திலோ பயங்கர கூட்டம். இந்த கூட்டத்தை சமாளிக்க
முடியாது, உட்காரவும் இடமில்லை என அந்த பெண்
இறங்கிவிட்டார் கணவரும் இறங்கிவிட்டிருப்பார் என்பது
அவர் யூகம்.

ஆனால் அவரோ பேருந்தினுள்ளேயே மாட்டிக்கொண்டு
வெளியே வர இயலாமல் போனது.வண்டியும் புறப்பட்டு
விட்டது. கணவர் தனது செல் போன் மூலம் மனைவியின்
செல் போனைத் தொடர்பு கொண்டு அடுத்த பேருந்தில்
கிளம்பி வரும்படி சொல்லிவிட்டார்.அந்தப் பெண்,கையில்
பணம் எதுவும் எடுத்து வரவில்லையே என்று புலம்ப
ஆரம்பித்தார்.அவர் சூழ்நிலையை உணர்ந்து அவருக்கு
பயணச்செலவுக்கான பணத்தை கொடுத்தேன். நெகிழ்ந்து
நன்றி கூறினார்.

ஆண்களோடு வீட்டை விட்டு வெளியே
கிளம்பும் பெண்கள் அவர்களையே சார்ந்திராமல் தம்
கையிலும் தேவைக்கேற்ப பணம் எடுத்து செல்வது
தர்மசங்கடமான வேளைகளில் கை கொடுக்கும்.

Friday, February 4, 2011

கிராமிய சுற்றுலா




இந்தக் கோடையில் என் தங்கையின் ஊரான
ஊசூர் கிராமத்துக்கு நானும்,பெங்களூருவில்
வசிக்கும் என் அக்காவும் பிள்ளைகளோடு
சென்றிருந்தோம்.அந்தக் கிராமமும்,அதன்
பழக்க வழக்கங்களும் எங்கள் குட்டீஸ்களுக்கு
மறக்க முடியாத அனுபவங்களைப் பரிசளித்து
அனுப்பி வைத்துள்ளது!

ஆம்... நாற்று வளர்ந்து நெல்லாகி,
நெல்லிலிருந்து அரிசி கிடைப்பதை கதையாகப்
படித்திருந்த என் பத்து வயது மகள்,பச்சை
போர்த்திய வயல்வெளிகளில் அதை பிராக்டிகலாக
கண்கள் விரியப் பார்த்தாள்.மார்க்கெட்டில்
மட்டுமே காய்கறிகளைப் பார்த்த அவர்கள்,
தோப்பில் சுற்றிய போது,’ஐ...தக்காளி செடி’,
கறிவேப்பிலை செடி’,’பச்சை மிளகாய் செடி’,’
’மாமரம்’ என அங்கிருந்த செடிகளையும்,
மரங்களையும் பார்த்தும்,பறித்தும்,சுவைத்தும் அக
மகிழ்ந்தனர்.பாக்கெட் பாலை மட்டுமே அறிந்திருந்த
அவர்கள், என் தங்கை வீட்டிலிருந்த இரு
பசுமாடுகளின் காம்புகளிலிருந்து பால்காரர் பால்
கறந்ததை உலக அதிசயம் போல் மெய்மறந்து பார்த்தார்கள்.
எதிர்ன் வீட்டில் செய்த மண்பானைகளை இமைக்காமல்
பார்த்து ரசித்தார்கள்.

இயற்கையாக்க கிடைக்கும் பொருட்களையே
விளையாட்டுப் பொருட்களாக மாற்றி விளையாடும்
கெட்டிக்கார கிராமத்துக் குழந்தைகளுடன் சேர்ந்து
பனங்காயை நடைவண்டியாக்கியும்,தென்னை ஓலைக்
கீற்றில் பொம்மைகள் செய்தும்.களி மண்ணில் சட்டி
பானை செய்தும் அசத்தினர்.சாணத்தில் இருந்து
வரட்டி தட்டியதையும், தென்னை ஓலையில் இருந்து
விளக்கமாறு சீவியதையும் அவர்கள் படித்துக்
கொண்டிருக்கும் சயின்ஸ் பாடங்களை மீறிய
ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்!எல்லாவற்றையும்விட
அங்கிருந்த நட்களில் அவர்கள் டி.வி.யையே
மறந்து போனது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இனி,சமயம் கிடைக்கும் போதெல்லாம்
அவர்களை கிராமத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்
என முடிவெடுத்துக் கொண்டோம் நானும் என்
அக்காவும்!

Friday, January 28, 2011

அந்த தொழில்



      தாமரை இலை நீர் போல மல்லியின் மனமும்
செயலும் ஒட்டாமல் வேலை செய்து கொண்டிருந்தது.
இன்னும் எத்தனை நாளைக்குத் தான் காதிலிருந்ததையும்
கையிலிருந்ததையும் விற்று அரிசி பொங்குவது?

      கணவன் ராமுவின் இறப்பிற்கு அரசு கொடுப்பதாக
சொன்ன தொகை ஆறு மாதமாகியும் கைக்கு
வந்தபாடில்லை.உதவவும் வேறு ஆள் இல்லை.
விரக்தியின் உச்சத்தில் இரண்டு குழந்தைகளுடன்
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம்
இளந்தூறலாய் அவ்வப்போது அவளை  நனைத்து
விட்டுச் சென்றது.அப்போது சரியாக வந்து
சேர்ந்தான் முனியன்.

        “என்ன மல்லி... நானும் எத்தனை தபா
சொல்றது...இன்னா முடிவு பண்ணின?தினம் இந்த
புள்ளைஙகள பட்டினி போட்டு சாவடிக்கப் போறியா?”

        “இல்ல...ஊரு என்ன சொல்லுமோன்னு
பயமா இருக்கு முனியா...”

        “ஊருக்கு பயந்தா...செத்துப்போன புருஷன் திரும்பி வரப்போறதில்ல.ஏற்கனவே பாத்த தொழிலு...
கல்யாணத்துக்கப்புறம் தானே வுட்டுட்ட...திருநா சமயம்.
உன்ன நம்பி பக்கத்து ஊரு நாட்டாமைகிட்ட அட்வான்ஸ்
வாங்கிட்டேன் புள்ள...இந்தா 300 ரூபா. நாளைக்கு சரியா 4
மணிக்கு ரெடியாயிரு,வந்து கூட்டினு போறேன்.”

       மறு நாள் மதியம் 2 மணியிலிருந்தே தன்னை
அலங்கரிக்க தொடங்கி விட்டாள் மல்லி. நீண்ட நாளாய்
பாலைவன மணல் போல் தோன்றியநெற்றியில்
சிவப்பு திலகம் இட்டாள்.

     கை நிறைய கண்ணாடி வளையல்களும் உதட்டுச்சாயமும்
இட்டுக்கொண்டாள்.பரண் மேலிருந்து பித்தளை சொம்பை
புளி சேர்த்து பளபளக்க தேய்த்து எடுத்தாள்.அதன்
உள்ளே 2 கிலோ பச்சரிசியைப் போட்டு குடத்தின் வாய்
பகுதியை ஒரு தேங்காய் வைத்து கட்டினாள்.குளத்து நீரில்
வளர்ந்த கிளச்சிக் கட்டை வேரை சுற்றி,அதன் மீது
செயற்கை பூ அலங் காரம் செய்து உச்சியில் இறக்கை
விரிக்கும் அன்னப்பறவையை நிறுத்தினாள்.

        ஜோடிப்பு முடிந்து 6 கிலோ எடை கொண்ட
முழுவடிவத்தை பெற்றது கரகம்.கரகத்தையும்
சலங்கையையும் ராமுவின் புகைப்படத்துக்கு
முன் வைத்து நமஸ்கரித்தாள்.முனியனும்
நேரத்துக்கு வந்துவிட குழந்தைகளைஅவன்
பொஞ்ஜாதியிடம் விட்டு திரும்பியவளுக்கு
இடியென வந்து விழுந்தது பொசுக்கும் மின்னல்
வார்த்தைகள்.

        ஆம்படையான் செத்து வருஷம் திரும்பல.
அதுக்குள்ள பொட்டச்சிக்கு பூவும் பொட்டும் ஆட்டமும்
தளுக்கும் மினுக்கும் கேக்குதோ”-சீறி வெடித்தாள்
மாமியார் செண்பகம்.

       களுக்கென நீர் எட்டிப் பார்த்தது மல்லியின் கண்களில்.
அவளுக்கு பதில் பேசாமல்,முறைத்து ஒரு பார்வை பார்த்து
புறப்பட்டே விட்டாள்மல்லி,அந்த கிராமத்தின் பொட்டு
வைத்த முதல் கைம்பெண்ணாய்.


 நன்றி : தினமலர்-பெண்கள்மலர்

Tuesday, January 25, 2011

வேலை



    வேலைக்கு ஆள் எடுக்கும் தேர்வு.சுறுசுறுப்பாக
இயங்கிக்கொண்டிருந்தாள் நிர்வாக அதிகாரி வித்யாவதி.
மூன்று இளைஞர்கள் எல்லாக் கேள்விகளுக்கும்
பதிலளித்துத் தேர்வாகினர்.தகுதிகளும் சரிசமம்!

       மூவரில் ஒருவரை எப்படித் தேர்ந்தெடுப்பது
என விழிபிதுங்கினாள்.

      இறுதியாக மூன்று பேருக்கும் ஐந்து கூடைகள்
நிறைய ரோஜாவை எண்ணும் பணி கொடுக்கப்பட்டது.
ஏன் இந்தப் பணி எனத் தெரியாமலேயே மூவரும்
செவ்வனே எண்ணி முடித்தனர்.அவரவர் நண்பர்களை
அவர்களிடம் பேசவிட்டு உன்னிப்பாய் ம்றைந்து
கவனிக்கலானாள் வித்யாவதி.

       “டேய்,இந்த வேலைக்கு இந்தப்பூவையெல்லாம்
எண்ணித் தொலைக்கணும்னு என்தலையெழுத்தைப்
பாருடா”-இது முதலாமவன்.

       “வேற வேலை கிடைக்கற வரைக்கும்இந்தக்
கோமாளித்தனத்தை செஞ்சுதானே ஆகணும்
வயித்துப்பாட்டுக்கு”-இது இரண்டாமவன்.

       “பூக்களைத் தொட்டு எண்ணும்போது
ஏற்பட்ட உணர்வும் வாசமும் ஒருவித புதுத் தெம்பைக்
கொடுத்துச்சு.ரொம்ப ரசிச்சுச் செஞ்சேண்டா”-இது
மூன்றாமவன்.

       மூன்றாமவனுக்கே கிடைத்தது வேலை!


 நன்றி  :  கல்கி

தனிக்குடித்தனம்



         டெலிபோனில் உணர்ச்சிப்பிழம்பாய்
குமுறிக் கொண்டிருந்தாள் ஜானகி...

     ”என்னங்க...ரெண்டு வீட்லயும் நம்மைப்பிரிச்சு
வெச்சது போதும்.இனிமே ஒரு நிமிஷம் கூட என்னால
உங்களை விட்டு பிரிஞ்சிருக்க முடியாது!”
“எனக்கு மட்டும் உன்னை விட்டு பிரிஞ்சிருக்க ஆசையா?
என்ன பண்றது,வீட்டு சூழ்நிலை...”

       “என்ன பெரிய சூழ் நிலை? நமக்கு இந்த சொந்த பந்தம்
எதுவும் தேவையில்ல. நம்ம உணர்ச்சிகளைபுரிஞ்சுக்காத
இவங்களுக்காக நாம ஏன் பிரிஞ்சிருக்கணும்? நாம
தனிக்குடித்தனம் போயிடுவோம்!”

        “என்னது...தனிக்குடித்தனமா?”

        ”ஏன் பயப்படுறீங்க?”

       “ஊர் அசிங்கமா பேசாதா?”

       “பேசினா பேசிட்டு போகட்டும்.ஊருக்காகவா நாம
வாழறோம்?உங்களப் பார்க்காம்,உங்களோட பேசாம
வாழறது ஒரு வாழ்க்கையா?வீட்ல நீங்க பேசறீங்களா,
நான் பேசட்டுமா?”

      “சரி... நானே பசங்ககிட்ட பேசறேன்.

   இதுவரைக்கும் நீ பெரியவன்கிட்டயும் நான் சின்னவன்கிட்டயும்
இருந்ததெல்லாம் போதும்.எனக்கு வர்ற பென்ஷன்ல
நிம்மதியா வாழலாம்.வேலைக்கு போற ரெண்டு மருமகளுக்கும்
தான் கஷ்டமா இருக்கும்.இருக்கட்டும்...
   இனியும் உன்னை நான் கஷ்டப்படுத்தினா, நாம
 நாற்பத்தங்சு வருசமா சேர்ந்து வாழ்ந்தவாழ்க்கைக்கு
அர்த்தம் இல்லாம போயிடும்.சீக்கிரமே தனி வீடு
பார்த்து கூட்டிட்டு போறேன்.தயாரா இரு!”

         மனதிலிருந்த பாரம் நொடியில் இறங்கியவராய்
பட்டென ரிசீவரை வைத்தார்,முதியவர் ராமரத்தினம்.


 நன்றி: தினமலர்-பெண்கள்மலர்

Monday, January 24, 2011

சர்வர்



      காமாட்சி,எத்தனை முறை தான் ராமுகிட்ட சொல்றது.
 நானே முதலாளி கையையும் காலையும் புடிச்சி என்க்குன்னு
போடுற சாப்பாட்ட அவன் சாப்பிட ஏற்பாடு பண்ணியிருக்கேன்
தெரியுமா?

       நெற்றிக் கோடுகள் சுருங்க கூறினார் சதாசிவம்.
  ‘ நான் என்னங்க செய்யட்டும்.கேக்க மாட்டேங்குறான்’
அலுத்துக் கொண்டாள் காமாட்சி.

    கெவுரு கூழும் நொய்க் கஞ்சியும் என் உடம்புக்கு
பழகிப் போனது.ஒட்டிப் போன இந்த உடம்புக்கு இதே
போதும்.மாடாட்டும் கூலி வேலை செய்யுறான்,பாவம்.
மூணு பதார்த்தத்தோட ஹோட்டல்ல போடுற ருசியான
சோத்த திங்க அவனுக்கு கசக்குதா? சரி, நான்
ஹோட்டலுக்கு கிளம்புறன்.அவன வந்து மரியாதையா
சாப்பிடச் சொல்லு.

       வியர்வை வழிந்தோடிய உடலை துண்டால்
ஒற்றியபடி வந்தமர்ந்தான் ராமு.

      அம்மா...சோத்தைப் போடு மணியாச்சு.
டேய் ராமு,அப்பா தான் அவ்வளவு தூரம் சொல்றாரே,
ஹோட்டல்ல வந்து சாப்புடுன்னு...

     அம்மா,பெத்த புள்ள தான் அப்பனை உக்காத்தி
வெச்சி சோறு போடணும்.ஏதோ நம்ம குடும்ப கஷ்டம்,
அப்பா சர்வர் வேலை பாக்குறாரு.அங்க அப்பா எனக்கு
சோறு போட்டு தண்ணி ஊத்தி எச்சலை எடுக்குறத
என்னால பாத்து கிரகிச்சுக்க முடியலம்மா.அவரையே
அங்க சாப்பிட்டுக்கச் சொல்லு.

      யார் பக்கம் பேசுவது?குழம்பிப் போனாள் காமாட்சி.

 நன்றி: தினமலர்-பெண்கள்மலர்

அலை பேசி அழைப்பு

  நடுநிசி இரவில் வரும்
 அலைபேசி அழைப்புகள்
 அதன்பிறகான அவரின்
 நீண்ட உரையாடல்கள்
 இரவு உணவை
 தவிர்த்த பல இரவுகள்
 சுவாசம் அறிந்த மயக்கும்
 புதிதொரு வாசனைகள்
 வகிடெடுக்கா இளம்
 பெண்ணுடன் ஜோடியாய்
 பயணித்ததை பார்த்த
 அந்த கணங்கள்
 ஜடமாய் இப்படி
 பழகத்தான் வேண்டியுள்ளது...
 கல்வி கொடுக்காமல்
 கண் மூடிய
 தந்தையை நினைத்தும்
 படிப்பில் மும்முரமாய்
 இருக்கும் என்
 பிள்ளைகளை நினைத்தும்.

இலவசம் என்றால் அலட்சியமா




       சில மாதங்களுக்கு முன் எங்கள் தெருவிற்கு
வீடு வீடாக வந்து யானைக்கால் நோய்க்கு இரத்தப்
பரிசோதனை செய்தனர்.

    “ஐந்து நிமிடம் முன்பு தான் தெரு முனையில்
பார்த்தேன்.அதற்குள்ளாகவா இத்தனை வீடுகள்
முடித்து விட்டீர்கள்” என கேட்டேன்.

      “எங்கேம்மா,யாரும் பரிசோதனைக்கு
ஒத்துழைப்பு கொடுப்பதே இல்லை” என்று வருத்தத்துடன்
சொன்னார்.

       குழந்தைகள் எல்லாம் பயப்படுகிறார்கள்.முதலில்
கிளம்புங்கள் சார் என்கின்றனர்.இவர்கள் எல்லாம்
குழந்தைகளுக்கு சரியாக தடுப்பூசி கொடுக்கிறார்களா
என தெருயவில்லையே என சந்தேகித்தார்.இத்தனைக்கும்
இப்பகுதியில் யானைக்கால் நோயின் பாதிப்புக்குள்ளானோர்
பலர் இருக்கின்றனர்.6 மாதத்திற்கொருதரம் அரசு
கொடுக்கும் தடுப்பு மருந்துகளை உட்கொண்டால் கால்
வீக்கம் அறவே வராது.ஆனால்,பலர் இதை
அலட்சியப்படுத்தி எங்கள் கண் எதிரிலேயே தெரு
காவாயில் வீசுகின்றனர்.இலவசமாய் கொடுக்கும் எதற்கும்
மக்களின் அலட்சியப் போக்கை பாருங்கள் என
வருந்தியபடியே சொன்னார்.

      அவர் சொன்னது போல்,எங்கள் தெருவில்
வசிக்கும் பலரும் இரத்தம் பரிசோதிக்க ஆர்வம்
காட்டவேயில்லை.இலவசம் என்றாலே மக்களுக்கு
அலட்சியம் தானா?

Saturday, January 22, 2011

வாழ்க்கை என்பது.....



      கருமேகங்கள் சோலைப்பட்டியை வளைத்தாற்போல்
சூழ்ந்துக் கொண்டது.  அங்கொன்றும் இங்கொன்றுமாக
வானம் தூறிக் கொண்டிருக்க, மல்லிகா வாசலுக்கும்
வீட்டிற்குமாய் அலைந்துக் கொண்டிருந்தாள்.  தூரத்தில்
தெரிந்த சின்னாவைப் பார்த்து

    “டேய் சின்னா, கவிதா அப்பாவ எங்கிட்டாச்சும்
வழியில பாத்தியாடா?”

     ‘இன்னமும் வந்து சேரலையா?  அவன் எந்த மூலையில
விழுந்து கெடக்கானோ’ ஆடிக்கொண்டே அருகில் வந்த
சின்னாவின் கண்கள் தக்காளிப் பழம் போல சிவந்திருந்தது. 
தலைமுடி தாறுமாறாய் கலைந்திருக்க அழுக்கு மூட்டையாய்
காட்சியளித்த கைத்தறி லுங்கியிலும் ஆங்காங்கே கிழிசல்கள்.

   “கவிதா குட்டி தூங்கிருச்சா?”  வீட்டினுள் எட்டிப் பார்க்க
முற்பட்டவனை

      ‘எலேய் அங்கிட்டு நவுருடா.  உன்னய பாத்தா என் புள்ள
பயப்புடும்.  போடா வுன் வூட்டுக்கு…  என்ன ஜென்மங்களோ
தினமும் இப்புடி குச்சிட்டு பொஞ்சாதி புள்ளைங்க உசுர
எடுக்கணும்னு வூட்டுக்கு வந்து சேருதுங்க.  ம்…  இந்த மனுஷன்
எங்க போய் சேந்துச்சோ, எல்லான் என் தலையெழுத்து’.

      வேகமாக கதவை மூடிக் கொண்டு கவிதாவின் பக்கத்தில்
போய் படுத்தாள்.  கடிகாரத்தில் சிறிய முள்ளும் பெரிய முள்ளும்
பத்தில் சந்தித்துக் கொண்டன.

       அந்த பெருநகரத்தின் கடைசியில் ஒட்டினாற்போல்
அமைந்திருந்தது சோலைப்பட்டி.  அகண்டு நீண்டிருந்த பட்டியின்
முதல் தெரு நெடுகிலும் எறும்புக் கூட்டம் போல ஒன்றன்பின்
ஒன்றாக லாரிகள் நிறுத்தப்பட்டிருக்கும்.  லாரி புக்கிங்
ஆபீஸ்களும் கனரக வாகன பழுது பார்க்கும் கடைகளுமாக
நீளும் மறுபுறம்.

       நகரத்தின் பெரும்பாலான லோடுகளை இங்கிருக்கும்
லாரிகளே சுமந்துக் கொண்டு திரியும்.  சோலைப்பட்டி
இளைஞர்கள் பெரும்பாலும் டிரைவர்களே.  ஒருசில விவசாயக்
குடும்பங்களும் வானம் பொய்த்து போனதால் நிலங்களை விற்று
லாரிகளை வாங்கிக் கொண்டிருந்தன.

      லாரியை விட்டு இறங்கியதும் கணக்கை காட்டிவிட்டு
பொடிநடையாய் நடந்து கங்காபாயின் சாராயக் கடைக்குள்
நுழைந்தான் சேட்டு.  மெலிந்த உடல், இரண்டு வாரமாய் சவரம்
செய்யாத முகம், வெளுத்த தேகம், கருத்த உதடு, இரண்டு
சென்டிமீட்டர் அளவிற்கு குழி விழுந்த கண்கள் என
பரிதாபமாய் இருந்தான்.

      ‘எலேய் எங்கிட்டுயா வந்தே.  உடம்பு சரியில்லாதவனுக்கு
ஊத்திக் கொடுக்குறேனுட்டு உன் பொண்டாட்டி என்னய
வந்து சண்ட பிடிக்கா’.

       ‘என்னாயக்கா நீ வேற.  அவ கிடக்கா சிருக்கி மவ’.

      சொல்லுவடா சொல்லுவ.  ரெண்டு வருஷமா அவள வுட்டு
ஓடிப் போயி போன தையில எலும்பும் தோலுமா வந்து சேந்த.
போனாப் போகுதுன்னு உன்னய சேத்துக்குனா பாரு.  அவ
சிருக்கியேதான்.  சரி, சரி, துட்ட எடு.

      வந்து….  என்னான்ட மருந்து வாங்கத்தான் துட்டு இருக்கு.
நாளைக்கு சேத்து தந்துடுறன் யக்கா’.

       ‘யோவ், உனக்கு மருந்தும் வோணும்.  மப்பும் வோணுமா?
எடுய்யா துட்ட.  நாளைக்கு நீ இருப்பியோ போய்ச் சேருவியோ’.

       பணத்தை கொடுத்து ஒரே மூச்சில் மொத்தத்தையும் உள்ளே
தள்ளினான்.

       பன்னிரெண்டு முறை அடித்து சோர்ந்தது கடிகாரம்.  வெளியே
வானம் பொளந்து கொட்டிக் கொண்டிருந்தது.  சரியான அடைமழை.
மல்லிகாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை.  இந்த மனுஷன் எங்க
போச்சோ தெரியலியே என மனம் பேயாய் அடித்துக் கொண்டது.
ரத்த வாந்தி எடுத்து நாலு நாள் குடிக்காம வந்துச்சி.  இன்னிக்கு
குடிச்சு எங்கிட்டாச்சும் விழுந்து கிடக்கா.  மழை வேற ஓயலியே.
மாரியாத்தா ஏன் என்னய பாடாப் படுத்துற.  ஆடியில உனக்கு
ஒரு குடம் கூழை ஊத்தறேன்.  அவன் குடிய நிறுத்து.

        அரம்பியபடியே தலையை அள்ளி முடிந்து பாதியாய் நைந்துப்
போன ஒத்தைப் பாயை தலைக்குக் கொடுத்து மழையில் இறங்கி
கங்காபாயின் கடையை நோக்கி ஓட்டமும் நடையுமாய்
முன்னேறினாள்.

       கூட்டு ரோடின் மூலையில் சோடியம் விளக்கு வெளிச்சத்தை
உமிழ்ந்துக் கொண்டிருந்தது.  தூரத்திலேயே தெரிந்துவிட்டது
அவளுக்கு, சேட்டுதான் மூலையில் மடங்கிக் கிடக்கிறானென்று.

       அவனை கிடத்தி நிறுத்தி வீட்டிற்கு வந்து சேர்வதற்குள்
அவளுக்கு போதும் போதும் என ஆகிவிட்டது.  ஒருவழியாக
விடிந்தது.

      லொக்…  லொக்…  லொக் தொடர்ந்து இரும்பினான் சேட்டு.

      யோவ், நீ என்னிக்குத்தான் திருந்தப் போறியோ.
மழைக்காச்சும் ஒதுங்கிக்கக் கூடாது.  எத்தன தடவ சொல்றது
இந்தா இந்த காப்பித் தண்ணியாவது குடி.  உன்னய அந்த
ஆத்தாதான் காப்பாத்தணும்.

       லொக்…  லொக்…  லொக்… இருமல் தன் உக்கிரத்தை
சேட்டுவிடம் காட்ட ரத்த ரத்தமாய் வாந்தி வெளியேறியது. 
தூக்கத்திலிருந்த கவிதாவும் சத்தத்தைக் கேட்டு எழுந்து
ஓடிவந்தாள்.

       வெட்டப்பட்ட பட்ட மரம் போல கயிற்று கட்டிலில்
சாய்ந்தவனின் கண்கள் இரண்டும் மேல்நோக்கி செருகியவாறே
சென்று கூரையின் விட்டத்தில் நிலை கொத்தி நின்றன.

      “ஐயோ, பாவி மனுஷா என்ன வுட்டுட்டு போயிட்டியா?” 
மழையின் இரைச்சலிலும் மல்லிகாவின் கதறல் நாலு வீடு தள்ளியும்
கேட்டது.  இறந்த சேட்டுக்கு ஊரே உச் கொட்டியது.  சடலத்தை
பார்த்துவிட்டு நேரே கங்காபாயின் கடைக்குச் சென்று சரக்கு ஏற்றி
வந்தார்கள் பங்காளிகள்.  பத்து வயது கவிதாதான் கொள்ளி
போட்டாள்.

        எல்லாம் முடிந்து போயிற்று.  மல்லிகாவின் மனதில் மட்டும்
அந்த கேள்வி முற்றுப் பெறாமல் சுழன்றுக் கொண்டிருந்தது.
அவ்வப்போது தொலைக்காட்சியில் வரும் விளம்பரத்தை காணும்
போதெல்லாம் சேட்டுக்கு எய்ட்ஸ் இருந்திருக்குமோ?  நல்லா
இருந்த மனுஷன் என்னய வுட்டுட்டு போனதுக்கப்புறம் கண்ட
நாதாரிங்ககிட்ட போச்சுனு தெரியும்.  குடியினாலதான் உடம்பு
கெட்டுச்சினு நினைச்சோமே.  நோயால இருக்குமா.  எனக்கும்
அவனால அந்த கர்மம் புடிச்ச நோய் இருக்குமோ?

      பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு கவிதாவுடன் நகர இரத்தப்
பரிசோதனை நிலையத்திற்குப் போய் பரிசோதித்தாள்.  முடிவில்
எச்.ஐ.வி. பாஸிடிவ் உறுதிப்பட்டிருந்தது.  இதயம் துடிக்க மறுத்தது.
தலை கிறுகிறுத்தது.  கண்கள் சுழல சுவரில் சாய்ந்தாள்.  தான்
இன்னும் சில வருடங்களில் சாகப் போகிறோம் என்ற கொடுமை
அவளை குடைந்தெடுத்தது.  நல்ல வேளை கவிதாவிற்கு இல்லை.

     “போன பாவி எனக்கும் தேதி குறிச்சிட்டு போயிட்டியா”? 
ஓவென அழ வேண்டும் போல் இருந்தது அவளுக்கு.  இது
எல்லோருக்கும் தெரிந்து தன்னை ஒட்டுமொத்தமாக
ஒதுக்கிவிட்டால், எல்லாவற்றிற்கும் மேலாக கவிதா தன்னை
ஒதுக்கிவிட்டால் என்ன செய்வேன்?  அதுவும் இல்லாம என் புள்ள
அனாதையாயிடுமே… ஊருல இருக்குற புருஷன் பொண்டாட்டிங்க
சேந்தாப்புல அடுத்தடுத்த வருஷத்துல செத்தாங்களே, எல்லாம்
இந்த நோயோட புண்ணியத்துலதான் போலிருக்கு.

        மரண பயம் அவளின் ஒவ்வொரு அணுவிலும் குடிகொண்டது.
கவிதா பெரியவளாகி கல்யாணம் காட்சி பண்ணி வெக்குற
வரையாவது என் உசுர இந்த உடம்புல தக்க வை மாரியாத்தா,
கெஞ்சலுடன் வேண்டினாள்.  வேண்டுதல் வேண்டி வேண்டி அவள்
நா வறண்டதுதான் மிச்சம்.  நிம்மதியின்றி தவித்தவள் சதா
செத்தவனை திட்டித் தீர்த்தாள்.

        “அம்மா”

        ‘என்னடா செல்லம்’

      “ஏம்மா ஒரு மாதிரி இருக்கே.  எங்கூட முன்ன மாதிரி
பேசவே மாட்டேங்குற.  முட்டிக்கொண்டு வந்த அழுகைக்கு
முட்டுக்கட்டைப் போட்டு விசும்பி விசும்பி, “அது வந்து… உங்கப்பன்
செத்துப் போச்சுல்ல, அத நினைச்சி தான்’.

       போம்மா, செத்து போனதே நிம்மதி.  தினம் குடிச்சிட்டு வந்து
உங்கூட சண்டை போட்டுக்கினு வாந்தி எடுத்துக்குனு…  அது
இல்லாததே நிம்மதியா இருக்கு.  நீ அழாதம்மா…  இனிமே
சந்தோஷமா இருக்கலாம்’.  ஆறுதலாய் கண்ணீரை
துடைத்தாள் மகள்.

        மல்லிகாவின் வீடு வந்ததும் மிதிப்பதை நிறுத்தி
சைக்கிளை ஓரங்கட்டினான் செவலை.

      ‘யக்கா… யக்கா..  நம்ம மாமு தவறிடுச்சாமே’

       ரெண்டு மாசமாச்சு.  இப்ப வந்து கேக்குறியா

       ஊருலருந்து இப்பதான் வந்தேன்.  கேட்டதும் நேரா
ஓடியார்றேன்.

       ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோடா, நீயும் தெனம்
குடிச்சீன்னா அந்தாளு போனா மாதிரிதான் உனக்கும் கதி. 
திருந்திடுடா’.

      ‘நீ வேற.  அந்த கருமத்தவுட்டு மாசக் கணக்காச்சு.
ம்… அப்புறம், சேதி தெரியுமா உனக்கு.  நம்ம மிலிட்டரி
காத்தவராயன் பொண்ணு தேன்மொழிக்கும் எனக்கும்
கல்யாணம் நடக்கப் போவுது.  உனுக்குதான் தெரியுமே
ரொம்ப நாளா ரூட் வுட்டுனு இருந்தேன்.  அப்பா மனச மாத்திட்டு
தகவல் சொல்றேன்னு சொல்லிச்சு.  அவங்கெல்லாம் ஒத்துக்குனு
வர்ற ஆவணியில கல்யாணம்க்கா’.

      நீ மாறிட்டேன்னு என்னால நம்பவே முடியல. 
எப்புடியோ, நல்லா இருந்தா சரிதான்.

      சரிக்கா.  வரட்டுமா மனச தைரியமா வச்சுக்க.

      மல்லிகாவின் மனதிற்குள் பழைய குடைச்சல்.  முன்பு
ஒருதரம் சேட்டுவிடம் வாய்ச்சண்டை போடுகையில் “ஆமா…
உந்தம்பி மட்டும் என்ன ஒசத்தியா.  நாகர்கோவில்ல லோடு
இறக்குனப்ப அந்த வூட்டுக்குப் போனேன்.  உன் மச்சான் கூட
ரெண்டு நாள் முன்னாடி வந்துச்சுனு பார்ட்டி சொல்லுச்சு.
நீ என்னய கேக்க வந்துட்டியா போடீ” என உரைத்தது லேசாக
ஞாபகத்துக்குள் வந்தது.

      அப்ப அவனுக்கும் எய்ட்ஸ் இருக்குமோ?...

      டேய் செவல.  கவிதா பள்ளிக்கூடத்துக்குப் போய் இந்த
பணத்தை கட்டிட்டு வா.  அதுக்குத்தான் வரச்சொன்னேன்.

      இதுக்குத்தான் கூப்பிட்டியா.  முக்கியமான வேலையா
வெளியூர் போயினு இருக்கேன்.  ஆள வுடு.

      செத்த நில்லுடா.  கவர் மெண்ட் ஆளுங்க வீடு வீடா
வந்து மலேரியா ஜீரம் இருக்கான்னு இரத்தம் டெஸ்ட் பண்றாங்க.
வெளியூர் போறேன்னு சொல்ற.  இங்கயே பண்ணிக்க.

     உங்கூட பெரிய தொந்தரவு.  சரி எடு சாரு…  ஸ்… ஆ…
வரட்டுமா

     ‘ரொம்ப நன்றிய்யா.  நான் கூப்பிட்டேன்னு இவ்வளவு
தூரம் வந்ததுக்கு.  நானே வந்து முடிவ தெரிஞ்சிக்குறேன்.  இது
யாருக்கும் தெரிய வேணாம்.

     ‘சரிம்மா’ விடைபெற்றார் அவர்.

       எதிர் பார்த்த மாதிரியே செவலையின் உடம்பிலும்
அந்த கொடிய வைரஸ் கிருமி ஆக்கிரமித்திருந்தது.

       எங்கும் கும் இருட்டு.  தாய்வீட்டு பாதை பரபரவென
இழுத்துச் சென்றது மல்லிகாவின் கால்களை.  காதருத்தான்
வண்டுகளின் ரீங்காரம் தொடர்ந்து ஒலிக்க கதவைத் திறந்து
உள்ளே நுழைந்தாள்.  அவளை பார்த்துவிட்டு குடித்துக்
கொண்டிருந்த பாட்டிலை துண்டு போட்டு மறைத்தான்.

      ‘என்ன, இந்த அர்த்த ராத்திரியில வந்துக்குற’

      டேய், ஒரு முக்கியமான விஷயம்.  அன்னிக்கு இரத்தம்
டெஸ்ட் செஞ்சியே, அதுல உனக்கு எய்ட்ஸ் நோவு இருக்குனு
உறுதியாயிடுச்சு.

       என்னது, எய்ட்ஸா…  என்னா… கதை வுடுறியா.
ஆனால் கேட்டு ஆடித்தான் போனான்.

      எதுடா கதை.  இந்தா பார் ரிசல்ட்டை.  நீ தப்பான
பழக்கம் வெச்சிருந்தது உண்மையா இல்லையா?  எவ்வளவு
விளம்பரம் பண்ணாலும் எங்கடா போவுது புத்தி.  த பாரு, உன்
கல்யாணத்த உடனே நிறுத்து.  அந்த பொண்ணு வாழ்க்கைய
பாழாக்கிடாத.

      என்னாது, அதெல்லாம் நிறுத்த முடியாது.  இங்க பார்,
உனக்கும் எனக்கும் தவிர யாருக்கும் தெரியாதுல்ல.  நீ உன்
வாய பொத்திக்கினு இரு போதும்.

      டேய், ஒரு உசுறு உனக்கு சாதாரணமாய் போச்சா. 
வேணாம்பா.  உன் மாமனால எனக்கு வந்ததே போதும்.  கண்
முன்னாடியே நல்ல பொண்ணுக்கு கொடுமை நடக்கறத
பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்.  அந்த பொண்ணு வீட்டுல
போய் சொல்லத்தான் போறேன்.  வேணாம்னா நீயே ஒதுங்கிடு.
உண்மையிலேயே அவளை நீ காதலிச்சியிருந்தீன்னா
அவள விட்டுடு.

      ‘காதலாவது கத்திரிக்காயாவது.  நான் அவ சொத்துக்கு
குறி வெச்சுத்தான் அவ பின்னாடி சுத்தினேன்.  மாட்டிக்கிட்டா.
இனி நான் எதையும் இழக்க மாட்டேன்.  ஆமா… உனக்கு
எய்ட்ஸ் இருக்கா?  நீ யாருகிட்டயோ போய்த் தொத்தினு
வந்துட்டு என் மாமன் மேல பழி போடுறியா?’

       ‘ஏ நாயே, என்னடா சொன்னே சட்டையை பிடித்து இழுத்தாள்’.

         ஏய், சொந்த அக்கான்னு கூட பாக்கமாட்டேன்.  என்னய
பத்தி உனக்கு நல்லாவே தெரியும்.  போ …டீ சனியனே’ கழுத்தை
பிடித்து தள்ளினான்.

        கீழே விழுந்தவள் ஆக்ரோஷ மாய் எழுந்தாள்.  கூரையில்
சொருகியிருந்த வெட்டரிவாளை எடுத்து ‘நாயே, இந்தா வாங்கிக்க’
தடுக்க முற்பட்டு திசைமாறி விழுந்தவனை தறிகெட்டு வெட்டி
சாய்த்தாள்.

       கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டாள் மல்லிகா. வாதம் நடந்தது
‘உன் தம்பி செவலைய கொன்னேன்னு ஒத்துக்கிறியாம்மா’  - நீதிபதி.

       சின்ன விசும்பலுடன் ஆரம்பித்தாள்.

      ‘நீதிபதி ஐயா, என் தம்பிய நான்தான் கொன்னேன். 
அவனுக்கு எய்ட்ஸ் நோவு இருந்துச்சி.  வர்ற மாசம் அவனுக்கு
கல்யாணம்.  வேணாம்னு தடுத்தேன்.  கேட்கல.  தெரிஞ்சே ஒரு
பொண்ணு வாழ்க்கைய வீணடிக்க நான் விரும்பல.  நானும் ஒரு
எய்ட்ஸ் நோயாளிதான்.  என் புருஷனாலதான் எனக்கிந்த கதி.
எனக்குத் தெரிஞ்சு எங்க ஊருல பாதி பேர் இப்படி தறிகெட்டு
அலைஞ்சவங்கதான்.

      ஐயா… கல்வியறிவில்லாத எங்க ஊரு ஜனங்களுக்கு இது
ஒரு பாடமா இருக்கட்டும்னு உணர்ச்சிவசப்பட்டுட்டேன். 
பொடிசுங்க கூட தட்டிக் கேட்க ஆளில்லாம அந்த மாதிரி
வீடுகளுக்குபோவுதுங்க.  இப்படியே போனா எங்க ஊரே
குட்டி சுவராயிடும். கல்யாணத்துக்கு ஜாதகத்தை பார்க்கிற
வங்க மாப்பிள்ளையோட இரத்தத்தையும் சோதனை
செஞ்சு பார்த்துதான் சம்மதிக்கணும்.  அப்பதான் என்னய
மாதிரி அப்பாவிங்க பலியாகாம இருக்க முடியும்.
ஐயா… கடைசியா ஒன்ணு.  என்னய தூக்குல வேணாலும்
போடுங்க.ஐஞ்சாங் கிளாஸ் படிக்குற எம் பொண்ணு
கவிதாவோட படிப்புக்கும் அவ தங்குறதுக்கும் ஒரு நல்ல
முடிவை நீங்களே சொல்லிடுங்கய்யா என கைகூப்பி
அழத் தொடங்கினாள்.

தீர்ப்பு எழுதப்பட்டது.

    அறை முழுவதும் நிசப்தம்.  மல்லிகாவின் உடல் சிறு
நடுக்கத்திற்கு உள்ளாகியது.  “மல்லிகா என்ற இந்தப் பெண்
செவலையின் திருமணத்தை பெண் வீட்டாரிடம் சொல்லி
 நிறுத்தியிருக்கலாம்.  அதை விடுத்து வெட்டிச் சாய்த்ததால்
 தண்டனைக்குள்ளாகிறாள்.  இவள் ஒரு எய்ட்ஸ் நோயாளி
என்ற காரணத்தினாலும் ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாகி
விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் பேரிலும் தண்டனைக்
காலத்தை குறைத்து இரண்டு ஆண்டு கால கடுங்காவல்
தண்டனை விதிக்கிறேன்.  மேலும் அவர்தம் மகளின் படிப்பிற்கும்
 உறைவிடத்திற்கும் ஆதரவற்றோர் பள்ளியில் சேர்க்க அரசாங்கம்
பொறுப்பேற்றுக் கொள்ள உத்தரவிடுகிறேன்.

      மேலும், சோலைப்பட்டியின் நிலை குறித்து எய்ட்ஸ்
கட்டுப்பாட்டு வாரியம் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்க
வேண்டும்.  ஏற்கனவே தமிழகத்தில் இந்த மாவட்டத்தில்தான்
எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் என புள்ளி விவரம் கூறுகிறது. 
அதன்படி கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து எய்ட்ஸ்
நோயாளிகளுக்கான உணவுமுறை, வரும்முன் காத்தல், ஒழுக்க
நெறிகள் என விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் துரிதப்படுத்த
அரசாங்கம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகிறேன்.

      அந்தப் பெண் மல்லிகா கூறியது போல் எய்ட்ஸை ஒழிக்க
திருமணத்திற்கு கட்டாயம் ஆண் மற்றும் பெண்ணின் இரத்தப்
பரி சோதனை அறிக்கை நகலை சமர்ப்பிக்க வேண்டும் என்ற
யோசனையை நான் வரவேற்கிறேன்.  இதை சட்டமாக்க
அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்.



-   
      
     

   

Thursday, January 6, 2011

பிள்ளைகள் உணர்வை மதியுங்கள்




      எனக்கு தெரிந்தவர் மகனுக்கு பெற்றோர்
பார்த்து பேசி பெண் கிடைக்கப் பெற்றது.நிச்சய
தாம்பூலமும் நன் முறையில் முடிந்தது.அது
முதல் பெண்ணும் மாப்பிள்ளையும் நித்தம்
அலை பேசியில் பேசிக் கொண்டனர்.பேசிக்
கொண்ட தோடு மட்டு மின்றி ஓட்டல்,சினிமா
என்றும் சென்றுள்ளனர்.

     திடீர் நிகழ்வாக பெண்ணின் பெற்றோருக்கு
மாப்பிள்ளை வீட்டாரை பிடிக்காமல் போக
திருமணத்தை வேண்டாமென்று தட்டிக்கழித்தனர்.
மாப்பிள்ளை வீட்டார் எவ்வளவோ எடுத்துச்
சொல்லியும் இறங்கி வந்தும் பயனில்லை.
திருமணம் நிச்சயத்தோடே நின்று போனது.
ஆனால்,தினம் அலை பேசியில் பேசிக் கொண்ட
இளசுகள் ஸ்தம்பித்து போயினர்.பெற்றோரின்
வார்த்தைக்கு இணங்குவதா உணர்வுக்கு மதிப்பு
கொடுப்பதா என விழி பிதுங்கினர்.

     பெற்றோர்கள் ‘திருமணத்திற்கு முன்  பேசிக்
கொள்ளட்டும்,இந்த காலத்தில் சகஜம் தானே’
என முதலில் சொல்லி விட்டு தங்கள் ஈகோ
பிரச்சனையால் வெட்டி விடுவது நன்றாகவா
இருக்கிறது?

    திருமணத்துக்கு முன் அனைத்தையும் அளவோடு
வைத்துக் கொள்வது இளசுகளுக்கும் தகும்.வீணான
சங்கடத்தை நாமே ஏன் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.?