blogger tricksblogger templates

Monday, August 6, 2012

என் பெயர் வேண்டாமணி

                  

          முதன்முறையாக வேண்டாமணி என்று என் பெயரை
பரசுராமன் சார் கூப்பிட்டது தான் தாமதம் வகுப்பறையில் ‘கொல்
என்ற சிரிப்பு சத்தம். வேறு யார்?  கூடப்படிக்கும் ஆண்
வானரங்கள் இருக்கிறதே...அப்பப்பா. அதுகள் தான்.  பள்ளி,
கல்லூரி தாண்டி கல்வியியல் கல்லூரி வந்தும் கிண்டல் குறையவில்லை.
      ‘ஏம்மா, நீ எத்தனாவது பொண்ணும்மா உங்க வீட்லஆர்வமாக
கேட்டார் சார்.
       ‘ நாலாவது பொண்ணு சார்
       அடுத்து பையன் பொறந்தானா?’ பாடம் நட்த்துவதில் காட்டாத ஆர்வத்தை இதில் காட்டினார்.
        ‘ரொம்ப முக்கியம் இது வானரங்கள்.
        ;எனக்கு அடுத்து தம்பி பொறந்தான் சார். அவன் தான் கடைக்குட்டி
        ‘அடி சக்கை. அதான கேட்டேன்...வேண்டானு பேர் வெச்ச மேல நடக்குமான்னே. ம்... எனக்கெல்லாம் இந்த டெக்னிக் அப்ப தெரியாம போச்சு.என மோவாயை தடவிக் கொண்டார்.
         அது முதல் ‘வேண்டாமணிஎனும் என் பெயரால் நான் கல்லூரியில் காமெடி பீஸ் ஆகிவிட்டேன். ஆண் தோழர்கள் வேண்டுமென்றே என் பெயரை கூறிவிட்டு பின் தலையையும் உடம்பையும் சொறிந்துக் கொள்வது வாடிக்கையாய் போனது.
       பரசுராமன் சாரும் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் ‘என்ன வேண்டாமணி பிரஸண்டாம்மாஎன்பார்,. நான் எஸ் சார் என்றதும் சிரிப்பலை ஆரம்பிக்கும். அவர் இருந்து பாடம் நட்த்தும் ஒரு மணி
நேரமும் அலைகள் ஓயாது.
       கல்லூரியில் ஆரம்பம் முதல் இறுதி நாள் வரை அவர் நினைவில் ஞாபகம் வைத்திருந்த பெய்ர் எதுவென கேட்டால் என்னுடையதாகத் தான் இருக்கும்.
        ஏன் எனக்கு இப்படி வேண்டாமணி என பெயர் வைத்தீர்கள் என வீட்டில் கேட்காத நாளில்லை. அலுத்தால் போதும்...குலுக்கியதும் திறக்கும் பெப்ஸியை போல் பொங்கி விடுவார் பாட்டி.
        ‘பின்ன...பொட்டப்புள்ளயாவே பத்து பெத்துப் போடுவா உங்காத்தா, பாத்துட்டு சும்மா உட்காரச் சொல்றியா. வேண்டானு பேர் வெச்சதால யாராச்சும் உன்னை வேண்டாம்னு வெளிய புடிச்சு தள்ளினாகளா. வாய பொத்திட்டு வேலய பாருடி. கழுத தெனோம் உன்னோட இதே இராமாயணமா போச்சு.
       வேண்டானு பேர் வெச்சு எதுக்கு என்னை வெச்சிக்கிட்டீங்க.,பேசாம வெட்டி போட்டுற வேண்டியது தான. அக்காங்களுக்கு மட்டும் அட்டகாசமா பேரு வெச்சிருக்கிங்க.
       ஆமாண்டி,உன்னய அப்புடிதான் போட்டுருக்கணும்.பொசக்கெட்ட சிருக்கிக்கு பேச்ச வாரு.
     ம்...அது என்ன ராசியோ, தினம் ஒரு பத்து பேராவது என் திருப்பெயரை கேட்பார்கள்.  நான் பெயரை சொன்னால் போதும்,
என்னது...என்னது...என்ன பேருஎன கேட்டு ஒரு நமட்டு சிரிப்பு சிரிப்பார்கள். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் என் பெயரை சமயத்தில் வெண்டாமணி என் கூப்பிடுவோரும் உண்டு. நான் திருத்தி சொன்னதும் ‘வேண்டான்னே வெச்சிருக்கலாமே, அது என்ன மாதா கோயில் மணியாட்டும் பின்னாடி ஒரு மணி தொங்கிட்டிருக்கு பேருலஎன பி.எச்.டி. லெவலுக்கு ஓவராக ஆராய்ச்சி செய்து எரியும் தணலில் எண்ணெய் விட்டு செல்வர் சிலர்.
       அப்ப்ப்ப்ப்ப்ப்பா....இதோ அடித்து பிடித்து கல்லூரி விரிவுரையாளர் வரை வந்தாயிற்று. இன்று கல்லூரியில் நான் நடத்தப் போகும் முதல் கிளாஸ். என் பெயரை வேண்டாமணி என மெதுவாக கூறினேன். இம்முறை யாரும் சிரிக்கவில்லை. என் மீதிருந்த பயம் கலந்த மரியாதையாக இருக்கலாம்.
       பின் மாணவிகளின் பெயரை கேட்கும் படலம். வரிசையாக ஒர்வொருவரும் பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு வர அல்ட்ரா மாடர்னாக உடையணிந்திருந்த மாணவி அவர் முறை வந்த்தும்ஐ யம் இனிபோதும், கம்மிங் ப்ரம் வெல்லூர்என்றாள். நான் அவளை அமரச் சொல்லாமல் பிரமிப்புடன் அப்படியே சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளிடம் தாழ்வு மனப்பான்மையோ வெட்கமோ துளியும் இல்லை. நேருக்கு நேராக என் கண்களை பார்த்தாள்.
        ‘ நீ எத்தானாவது பொண்ணும்மா?  ஆர்வக்கோளாறில் இப்போது நான் அவளை கேட்கத் தொடங்கியிருந்தேன்.
  
 நன்றி:தினமலர்