blogger tricksblogger templates

Sunday, December 28, 2014

வத்திக்கான் வானொலியில் நான் பேசியது


 www.radiovaticana.va/in3/index.asp

தமிழ் நிகழ்ச்சிகள்
Monday, December 29, 2014 4:31 PM பகுதியில் க்ளிக் செய்து  கேட்கலாம்
Media files
tamil_291214.mp3 (VLC media file (.mp3), 8.8 MB)

Wednesday, October 22, 2014

பாராட்டு விழா

ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சார்பில் ஆரணியில் நடைபெற்ற விழாவில்  எழுத்துப் பணியை ஊக்கப்படுத்தி  பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார் கவிஞர் பாபு உடன் தமிழ்ச் சங்கத் தலைவர் க.பரமசிவன்.  உடன் செயலாளர் பொன். தங்கவேலன், கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் ப.சேஷன், லூம் சிட்டி அரிமா  டாக்டர். சசிகலா மாதவன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Thursday, October 16, 2014

அக்டோபர் - 2

மகாத்மாகாந்திக்கு மரியாதை செலுத்திய ஆரணி வட்டத் தமிழ்ச்சங்க நன்பர்களுடன் நான்

Friday, July 11, 2014

கலைஞர் டி.வி யில் நான்

வணக்கம்,
              கலைஞர் டி.வி யில் நாளை (13.7.2014) காலை 10.00 மணிக்கு லியேனியின் “ நல்லா பேசுங்க - நல்லதே பேசுங்க “ நிகழ்ச்சியில் நான்https://www.youtube.com/watch?v=5Wz4GHTKW10

Monday, July 7, 2014

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் நடத்திய பாராட்டு விழா


 நெய்வேலியில் 6.7.2014 அன்று  N L C  நிறுவனத்தின்
புத்தக கண்காட்சி திடலில் N L C  நிறுவன நிதித்துறை இயக்குநர்

திரு,ராகேஷ் குமார் அவர்கள் தலைமையில்

முதன்மை விருந்தினர் திரு,S.சுரேஷ் குமார்,IAS

மாவட்ட ஆட்சித் தலைவர், (கடலூர் மாவட்டம் )
அவர்கள் என்னை பாராட்டி கேடயமும்,பொற்கிழியும்
தந்து  கெளரவித்தனர்

பெண்மையை மதிப்போம்


எங்களுக்கும் உங்களுக்குமிடையே
மாறுபட்டு நிற்பது
சில மெல்லிய படைப்பு முடிச்சுகளே
அதை நீர் அறிந்தவராவீர்

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
எத்தனை எத்தனை சேதிகள்?
பெண்கள் மீதான அலைவரிசை
மாறிப் போனதன் அபத்தமே
பெருகிப் போன இத்துணை 
வன்கொடுமைகள்

சகோதரனாக சிநேகிதனாக
கணவனாக சகமனிதனாக
பார்த்து பழகிய கண்கள்
பலவேளைகளில் சந்தேகித்து நிற்கிறது
கொடூரனாய் இருக்குமோ எனும்
அச்சம் தோய்ந்த பார்வையில்...
எங்கள் இயல்பு தொலைந்துபோகும் 
தருணங்கள் அவை

பட்டுப்புழுவாய் வாழ்ந்த நாங்கள்
பட்டாம்பூச்சிகளாய் தற்போதே 
மகிழ்ந்திருக்கிறோம்
மீண்டுமொரு கூட்டுப்புழு 
வாழ்க்கையை பரிசளிக்காதீர்
உங்கள் சுவடுகளை நீங்களே 
இழந்தவர்களாவீர்


 நன்றி : தின மலர்-பெண்கள் மலர்

சிறகு உதிர் காலம்

29.6.2014 தினமணி கதிரில் வெளிவந்த சிறுகதை விரைவில்

Saturday, June 14, 2014

சீன வானொலியில் நான் `` கோலம் `` பற்றி பேசிய பதிவு
ஆயகலை அறுபத்தி நான்கினுள்
சிறந்த கலை கோலம்
அற்புத காலைப் பொழுதை
இனிமை பொங்க வரவேற்கும்
அழகியதொரு அடையாளம்

நிலைப்படியோ தெய்வசன்னதியோ
பூஜையறையோ தெருவாயிலோ
தீட்டப்படும் கோலங்களை
தெய்வங்களும் விரும்பும்

புள்ளிகளோடு கோடுகளை
இணைக்கும் சூத்திரம் உரைத்து
அதிகாலைத் தொட்டே
தியானத்தை பழக்கும்

புள்ளிகள் சிவமாயும்
கோடுகள் சக்தியாயும்
ஒன்றுபட்டு உணர்த்துகிறது
நல்லதொரு இல்லறத்தை

சேதாரம் இல்லா அணிகலனாய்
அழகு சேர்க்கும் வாசலுக்கு
பாரம்பரியத்தின் அடையாளமாய்
மெருகூட்டும் பெண்மைக்கு

கலாசாரத்தை பறைசாற்றி
பண்பாட்டை பிரதிபலித்து
இறையுணர்வை வெளிப்படுத்தி
பூமித்தாய்க்கு செய்யும் ஒரு முதல் மரியாதை

அடுப்பு தாண்டி
பெண்களை கலைஞராக்கும்
அன்றாடம் ரசனை மிகுத்தி
வாழ்வில் ஆரோக்யம் கூட்டும்

நேர்மறை எண்ணங்களை
வாரிக் கொடுத்து
தேடுதல் துவக்கி
நேர்த்தியை கூட்டும்

அறிவியல்பூர்வ ஆதாயத்தின்
அவசியம் சொல்லி
உடற்பயிற்சி உத்தியை
உரக்கச் சொல்லும்

தீபாவளியும் பட்டாசும் போல
பிரிக்க முடியாத்து
பொங்கலும் கோலமும்

இளங்சிட்டுகள் வட்டமிட்டு
வண்ண வண்ண பொடிகளிட்டு
வானவில்லை வளைத்துப் போட்டு
வீதியிலே மண்டியிட்டு
குளிரை விரட்டி விட்டு
இதழ்களில் புன்னகையிட்டு
இடப்படுகிறது கோலம்

பலமணி நேர தூக்கத்தை
விழுங்கி ஏப்பம் விடும்
ஆயினும் அயர்ச்சியின்றி
மலர்ச்சியை மனதில் நிறைக்கும்

தெருவிளக்கின் புன்னகையில்
பேசப்படாத வார்த்தைகளை கொண்டிருக்கும்
பிறர் பேசிச் செல்வதை
மௌனியாய் நின்று ரசிக்கும்

நேர்புள்ளி ஊடுபுள்ளி
என வித்தியாசம் காட்டும்
இரட்டை இழை புள்ளி ரங்கோலி
என ரம்மியம் கூட்டும்

வளைவித்து நெளிவித்து
பெண்ணுக்கு பொறுமை சேர்க்கும்
இறுதி புள்ளி இட்டு நிரப்புகையில்
அவளுக்கு பெருமை கோர்க்கும்

புதுமைகளை புகுத்தி
புத்துணர்ச்சி ஏற்றும்
சமயத்தில் கருத்துச் சொல்லி
விழிப்புணர்வு ஊட்டும்

பொங்கலுக்கு நகரத்து பெண்களையும்
நறுவிசாக மெனக்கெட வைக்கும்
அடுக்குமாடி வாசிகளை மூன்று நாட்கள்
அங்கலாய்த்து ஏங்க வைக்கும்

எல்லைகளை விரிவாக்கி விரிவாக்கி
தினம் புது பிரசவத்தை நிகழ்த்தும் எங்கள் கோலம்

Sunday, May 25, 2014


விரைவில் கலைஞர் தொலைக்காட்சியில் திண்டுக்கல்  லியோனி- யின்
``நல்லா பேசுங்க- நல்லதையே பேசுங்க’’ நிகழ்ச்சியில் பேச்சாளராக நான்

Saturday, May 10, 2014

வெயில்வெறித்துப் போன வீதியிலே
விரித்து போட்ட பாலைவனமாய்
தன் முத்திரையை கோலோச்சி
புவனம் ஆள்கிறது வெயில்

பருத்த கொடுங்கோல் அரக்கனாய்
பிசுபிசுத்த ஈர நாக்கு விரித்து
கசகசப்புக்கிடையே பூமியை சுட்டெரிப்பினும்
நெகிழ்ச்சியான தருணங்களுக்கும் இங்கு இடமுண்டு

கத்திரி வெண்டை என
கண்ணில் படுபவற்றையெல்லாம்
வற்றலாக்கும் கலையில்
ஆழ்ந்திருக்கிறாள் அம்மா

விடுமுறையில் கொட்டமடித்தபடி
சொந்தங்களை வாசல்
பார்த்து வரவேற்று
உறவு பாலம் அமைக்கிறது வாண்டுகள்

பிள்ளைகள் படிப்பின்பால்
கிடைக்கும் தற்கால இளைப்பாறலில்
தேர் திருவிழாக்களில்
அசைந்தாடுகிறது பெண்மையின் மனம்

தர்பூசணியும் வெள்ளரியும்
பலாக்காயும் முலாம்பழமும்
குளுகுளுப்பிகளாய் வயிற்றை நிறைத்து
சண்டையிடுகின்றன மாங்காய்பிஞ்சுடன்

சுற்றுலா எண்ணத்தை
காய்ச்சி மனதினுள்
ஊற்றுகிறது வெக்கை
வியர்வை ஊற்றுக்கிடையே

தாமரை மலர்கள்
வைகறை தொட்டே
வெடித்து சிரிக்கிறது
தன் காதலனை பார்த்து

தண்ணீரை அனுபவித்து அருந்தியும்
மத்திம கால தம் பணிகளுக்கு
விடுப்பு விடுத்தும்
ஓய்வெடுக்கிறார் தாத்தா

தொடர் மழையை
வையும் சாபக்கேட்டின்
பிடி விலகுவது
கோடையில் மட்டுமே

தகிக்கும் நெருப்பாக மட்டுமின்றி
வசந்தத்தின் பெரு நதியாகவும்
திகழ்கிறது வெயில்
யதார்த்தத்தின் வாயிலில் நின்றபடி

வெக்கையின் ஈர நினைவுகள்
மூளைக்குள் தேங்கி குளிர
பெய்யென பெய்கிறது
மனதிற்குள் பெருமழை

பதிவுகளின் சாட்சியாய்
வரலாற்றின் நீட்சியோடு
நம்பிக்கையை நீர் கொண்டு
நெஞ்சில் விதைக்கிறது வெயில்
நினைவுகளை கட்டவிழ்த்தபடி...

தமிழன் டி.வி. கவியரங்கில் வெயில் குறித்து நான் வாசித்த கவிதை

Tuesday, April 29, 2014

ரிக்‌ஷா சவாரி   
 ரங்கசாமிக்கு ரொம்ப நாட்களாக ரிக்‌ஷாவில் சவாரி செய்ய வேண்டும் என்று ஆசை.  63 வயது பூர்த்தியாகி இருந்தாலும் அவர் இதுவரை ரிக்‌ஷாவில் சவாரி செய்ததில்லை.  அப்பா அந்தக் காலத்தில் பெரிய செல்வந்தராக இருந்ததால் சொந்த மாட்டுவண்டி இருந்தது.  அவருடைய இளமைக் காலமெல்லாம் பள்ளிக்கு, கோவிலுக்கு, வயக்காட்டுக்கு என முழுப் பயணமும் மாட்டு வண்டியிலேயே நடக்கும்.
         சொகுசான ‘காரைசீதனமாக பெற்று வந்த மணமகள் மனைவியாக அமைந்து விடவே இவர்களின் பருத்த உடல்களை எப்பொழுதும் காரே சுமந்து திரிந்தது.  ரிக்‌ஷா சவாரி செய்யும் நபர்களை தெருவில் நோக்கும் போதெல்லாம் அவர்கள் ஏதோ தேர் பவனி வருவது போலவே இருக்கும் ரங்கசாமிக்கு.  கணவன் மனைவியாக இருக்கும் பட்சத்தில் ரிக்‌ஷாவில் அவர்களின் அன்னியோன்ய இருப்பு பார்க்க அழகாக இருக்கும்.
          ரிக்‌ஷாவில் செல்பவர்கள் ஏதோ கம்பீரமாக செல்வது போலவும் காரில் பவனி வரும் தாமெல்லாம் ஏதோ தீப்பெட்டிக்குள் அடங்கி ஒடுங்கிச் செல்வது போலவும் அவருக்கு எப்போதும் தோன்றும்.
          கார் சர்வீசுக்குப் போயிருக்க, டூவீலரும் மகனுடன் இருக்க,  ரிக்‌ஷா ஆசை தொற்றிக் கொண்டது.  சரி,சாவதற்குள் ஒருமுறையேனும் ரிக்‌ஷாவில் சென்று விடிவோம்என்ற ஆவலில் கிழிந்து பல ஒட்டு போடப்பட்டிருந்த நீலவண்ண லுங்கி நபரிடம் ரிக்‌ஷாவுக்கு அணுகினார்.  ‘ஆட்டோவில் வராமல் ஏன் அசிங்கமாக ரிக்‌ஷாவில் வருகிறீர்கள் என மனைவி கோபித்து கொள்வாள்என அவருக்குத் தெரியும்.  இருந்தும் ஆசை விடுவேனா என்றது.
               இவர் தெருப் பெயரைச் சொன்னதும் இந்த வாசு வண்டிய எடுத்தான்னாலே 40 ரூபா தான் சார்என்றான்.
                “சின்னதா ரெண்டு தெரு மெரிக்கறதுக்கா 40 ரூபா கேக்குற. அநியாயமா இருக்கே.  அதுவும் நான் ஒண்டி ஆளு”, மெல்லிய முருவலுடனே ஆரம்பித்தார் ரங்கசாமி.
             “என்னா சார்...அடிக்குற வெயில் மூஞ்ச தீய்க்குது.  ஒரு லோட்டா மோர் வாங்கி குடிச்சா அதுவே 10 ரூபா ஆகிப் போகுது. விக்கிற வெலவாசியில 40 ரூபா எந்த மூலைக்கு.  எல்லாரும் சர் சர்னு ஆட்டோவுல தான் போறாங்க.  எங்கள யார் சார் சீண்டுறாங்க.  ஏதோ, என்ன நம்பி வந்துட்டீங்க.  30 ரூபா குடுங்க.  வாங்க சார்’.
          அவன் பேசியது அவருக்கு நியாயமாகப் பட ஒத்துக் கொண்டு ஏறி அமர்ந்தார்.  இரட்டை இருக்கைகள் மட்டுமே கொண்ட நீள வாக்கு ரிக்‌ஷா வண்டியாதலால் தேர் பவனி போவது போல் ஒய்யாரமாகத் தான் இருந்த்து.  எதையோ சாதித்து விட்டது போன்ற பூரிப்பு அவர் உள்ளத்தில்.
               ரிக்‌ஷா மேடு பள்ளத்தில் ஏறி இறங்கி சிரமப்பட்டு அவரை இழுத்துச் சென்றது.  இப்பொழுது தான் அவர் அந்த வாசுவை கவனித்தார்.  கேசமெல்லாம் செம்பட்டை அப்பியிருக்க கழுத்து முழுதும் வியர்வை முத்துக்கள் கூர் கூராய் பியாபித்திருந்த்து.  ரொம்ப நாள் பழக்கம் போல இவரிடம் நாட்டு நடப்பை அவலைப் போல மென்று கொண்டே வந்தான் வாசு.  வழிப்போக்கர்கள் ரங்கசாமியை சற்று உற்று நோக்கிப் பார்க்கும் போது தான் என்னவோ போலிருந்தது.
           வண்டி டீக்கடையோரம் சென்ற போது அந்த பத்து வயது மதிக்கத்தக்க பொடியன் வண்டியை இடைமறித்தான்.
      “யென்னடா...கழ்த நவுந்து நில்லு அந்தாண்ட”.
         “ நைனா...எம்மான் நாளா கேட்டுனு கிரேன் கெச்சு பேனா வாங்கிக் குடுன்னு.  இன்னிக்கு யெடுத்துனு வரலன்னு எங்க டீச்சர் வெளிய நிக்க வெச்சிட்டாங்க.  போ நைனா... இன்னிக்கு கண்டிப்பா வாங்கினு வர்ற.  இல்லாங்காட்டி டீச்சர் நாளைக்கு என்ன அடிப்பாங்க”.
         “போடா போடா... கூறு கெட்டவனே.  நாங்கெல்லான் பேனாவ கண்டமா பென்சில கண்டமா... இசுகெச்சு பேனா வோணுமான் இசுகெச்சுபேனா.  நோட்டு, புக்கு, லொட்டு, லொசுக்குன்னு துரைக்கு அழுவுறதுக்கே சரியா கீது.  போடா...
         “ நைனா...ராத்திரிக்கா நீ மெய்யாலுமே வாங்கியாரணும்...என்ற பொடியனின் குரல் தூரத்தில் காற்றில் கரைந்து கொண்டிருந்தது.
           அதற்கு மேல் ரிக்‌ஷாப் பயணம் ரசிப்புக்குரியதாய் இல்லை ரங்கசாமிக்கு.  அந்தப் பொடியனைப் பற்றிய நினைவாகவே இருந்தது.  மறு நாள் அவன் ஸ்கெட்ச் பென் இல்லாமல் போய் டீச்சரிடம் அடி வாங்குவது போலவே மனதில் நிழலாடியது.  வாசு காசு இல்லாமல் அவன் பிள்ளைக்கு வாங்கிக் கொடுக்காமல் விட்டு விட்டால்... என்ற பதைபதைப்பு தொற்றிக் கொண்ட்து.
         இரண்டு வீடுகளுக்கு முன்னரே இறங்கிய ரங்கசாமி. அவன் கேட்டதற்கும் அதிகமாக இரு மடங்கு தொகையை கொடுத்து பிள்ளைக்கு ஸ்கெட்ச் பென் வாங்கிக் கொடுக்குமாறு சொல்லி விடைபெற்றார்.  30 ரூபாய்க்கு 60 ரூபாய் வந்த சந்தோஷத்தில் திக்குமுக்காடி நகர்ந்தான் வாசு.
         நடு இரவு ரங்கசாமியின் மனைவிக்கு மூச்சுத் திணறல் அதிகமாக டூவீலரில் ரங்கசாமி ஆட்டோ பிடிக்க ஸ்டேண்டுக்கு விரைந்து வந்தார்.  நியான் விளக்கொளியில் மலை போன்று குவிந்திருந்த குப்பைக்கு மிக அருகில் உருண்டு கிடந்த்து ஒரு உருவம்.  சட்டென அந்த கைலி ஞாபகத்துக்கு வர அட மாலை தன்னை அழைத்து வந்த வாசு தானே அதுஎன உணர்ந்தார்.  அவனின் போதை இவருக்கு கிறுகிறுத்தது. 
        தன் மனைவியின் மூச்சுத்திணறல் கூட சற்று நேரம் மறந்து அந்த பொடியனின் அழுகை முகம் மன அடுக்கில் வந்து போனது அவருக்கு.

 நன்றி : இலக்கியச்சோலை