Banner

என் அன்பான கணவருடன்

Thursday, September 12, 2013

அப்பாவின் அஸ்தி




    அப்பாவின் அஸ்தியை எங்கே கரைப்பது என அண்ணா கேட்டபோது துளி யோசிப்புக்கும் இடமின்றி நான் முதலில் சொன்னது ராமேஸ்வரத்தைதான்.

    ரொம்ப தொலைவு ஆச்சேப்பா… ரெண்டு நாள் பொழப்பு கெடும் என சொந்த பந்தங்கள் விலகிக் கொள்ள நானும் அண்ணாவும் மட்டும் பயணப்பட்டோம்.

    அஸ்தி கரைக்க செல்கையில் யாரிடமும் சொல்லிவிட்டு போகக் கூடாது என நீலகண்ட சாஸ்திரிகள் சொன்னதன் பொருட்டு அவ்வாறே செல்வதுதான் கொஞ்சம் சிரமமாக இருந்தது.  தாயா புள்ளையா பழகிட்டு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போகுதுகள் பார்  என தெருவாசிகள் பேசுவார்களே என்ற ஒருவித அச்சம் மனதினுள் வேறூன்றி இருந்தது.

    வெளிப்புற ஜன்னலின் வடகிழக்கு மூலையில் மஞ்சள் பையினுள் இட்டு கட்டப்பட்டிருந்த அந்த அஸ்தியை தொடுகையில் கைகள் நடுங்கியது.  சிந்தாமல் சிதறாமல் அப்படியே என் ஹேண்ட் பேகினுள் நுழைக்க தொடங்கியது பயணம்.

    வேலூரிலிருந்து மதுரைக்கு, பின் அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு என அண்ணா சொகுசு பேருந்தில் ரிசர்வ் செய்துவிட அலுப்பின்றி பயணப்பட்டது உடல்.  அஸ்தியை கரைத்து வந்துவிட்டதன் மேல் வீட்டில் ஏற்படும் வெறுமையை எப்படி ஜீரணிப்பது என்பது தெரியாமல் விசும்பிக் கொண்டிருந்தது மனம்.

    மூளையில் கட்டி வந்து அம்மா இறந்து போனதாக நினைவு தெரிந்த வயதில் அப்பா சொன்னதாக ஞாபகம்.  பாட்டி எத்தனை முறை வற்புறுத்தியும் அவளைப் போல் இனி ஒரு மனைவி எனக்குக் கிடைக்க மாட்டாள்.  ஆளை விடுங்கள் என்பதாய் இருந்தது அப்பாவின் பதில்.  கொள்ளை பிரியம் வெச்சவனோட வாழக் கொடுத்து வெக்கலயே என பாட்டி வரும் போதெல்லாம் அரற்றி விட்டு செல்வாள்.

    அப்பாவுக்கு தமிழ் மொழி மீது அளவு கடந்த பாசம்.  நான் சின்ன ‘ன’ பெரிய ‘ண’ என மாறி மாறி சொல்லும் போதெல்லாம் தென்னகரம் நன்னகரம் என உச்சரிக்கச் சொல்லி திருத்துவார்.  ஆங்கில இலக்கியம் படிக்கப் போகிறேன் என பயந்து பயந்து என் விருப்பத்தை தெரிவிக்கையில் கூட மொழியை படிக்க தன்னிடம் தடை எதுவும் இல்லை என யதார்த்தவாதியாக நின்றவர்.

    இருப்பினும் ஆங்கிலம் பேசுவதானால் ஆங்கிலமே பேசு.  தமிழ் பேசுவதானால் தமிழிலேயே பேசு.  இரண்டையும் ஒன்றோடொன்று கலக்காதே.  அது காப்பியையும் டீயையும் கலக்குவது போல நாராசமாக இருக்கும் என கண்டிப்பு காட்டுவார்.

    அப்பாவை பலர் அறிவது சந்தனப்பொட்டுக்காரர்  என்ற அடைமொழியில்தான்.  எங்கள் தெருவிலேயே அவர் ஒருவர் தான் சந்தனப் பொட்டுக்காரர்.   அவர் தினசரி  சந்தனப்பொட்டை வைக்கும்போது பார்வையாளராய் பார்க்கும் சந்தர்ப்பம் எப்போதும் எனக்கு மட்டுமே அதிகமாக வாய்க்கும்.  சந்தனத்தை அதிக நீர் சேர்க்காது அடர்வாக குழைத்து வட்டமாக உருட்டி நடுநாயகமாக நெற்றியில் பார்த்து இருத்தி,  ஈரப்படுத்திய குளியல் துண்டை லாவகமாக அழுத்தி எடுப்பார்.  நல்ல வடிவில் திருப்தியாய் வந்ததுமே அவர் முகம் மெல்லிய மகிழ்ச்சிக்கு ஆட்படும்.  அப்பாவின் பெயரே மறந்து போகும் அளவு ‘சந்தனப் பொட்டுக்காரர்’ அவரை ஆக்கிரமித்திருந்தது.

    பெரும்பாலும் மாலை வரும்வரை சந்தனப்பொட்டு அவர் முகத்தில் குடிகொண்டிருக்கும்.  சிற்சில வேளைகளில் மட்டுமே அவரை சந்தன பொட்டின்றி பார்த்ததாக ஞாபகம்.  அண்ணனுக்கு மஞ்சள் காமாலை வந்து ஒரு வாரம் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை எடுக்க, முழி பிதுங்கி நின்றது போன்ற ஒருசில சந்தர்ப்பங்கள்தான்.

    ஒரு சமயம் அதிகாலையில் எனக்கு விழிப்பு கண்டு எழுந்து அழுகையில் மொத்த குறிப்பையும் மெல்ல கோர்த்து வாங்கி ‘பயப்படாதடா..  நீ வயசுக்கு வந்துட்ட’ என்று கண்கள் பனிக்க சொன்னார்.  தீட்டுத் துணிகளை எப்படி மாற்றுவது என்பது உட்பட சொல்லிக் கொடுத்தவர்.  பாசத்தை எப்போதும் அதீதமாக கொட்டி பேசுவது அப்பாவுக்கு பழக்கப்படாத ஒன்று.  உடல் மொழியிலும் உள்ளக் குறிப்பிலும் அழகாக வெளிப்படுத்துவது அவரின் வழக்கம்.

    தினமும் காலை 5.30க்கெல்லாம் நித்திரையில் இருக்கும் என் தோள்பட்டையை தொட்டு மெல்ல உலுக்கும் பூப்பஞ்சு கைகளுக்கு சொந்தக்காரர்.  காலத்திற்கேற்ப பள்ளிக்கு போகணும்ல, டைப்ரைட்டிங் கிளாஸ்குடா, டியூசன் மிஸ் நேரமானா சத்தம் போடுவாங்கம்மா, பஸ்ஸ பிடிக்கணுமே என்பதான ஏதாவது ஒரு காரணம் அவருக்கு எப்போதும் இருக்கும்.

    அப்படிப்பட்ட அப்பா எந்த காரணத்தின் பொருட்டு இப்படி ‘பட்’ என்று ஒரே நிமிடத்தில் மாரடைப்பில் இல்லாமல் போனார் என்பதான யோசனை சத்தியமாய் சாத்தியப்படாது போக பேருந்து நாற்காலியில் சாய்ந்திருந்த நான் தேம்பலால் முன்னே உலுக்கி தள்ளப்பட்டேன்.

    என் விசும்பலை கவனித்த அண்ணனுக்கும் துக்கம் தொண்டையை அடைத்திருக்க வேண்டும்.  அவன் முகமும் இறுகிப் போயிருந்தது.  முன்னே நகர்ந்தபோது தெரியாது அஸ்திப்பையின் மேல் என் வலதுகால் பட்டுவிட தொட்டுக் கும்பிட என் கைகள் பறந்தது.

    தெரியாம பட்டதுதானே ஏனிப்படி பதறுற என்று பலமுறை அப்பா சொன்ன பழைய வார்த்தைகள் செவிகளில் ஒலித்தது போன்ற பிரமை.

    ராமேஸ்வரம் வந்தாயிற்று.  அண்ணா 3 முறை தலை முழுகிவிட்டு வந்து அமர மந்திர உச்சாடனைகள் புரிந்தவண்ணம் இருந்தார் அய்யர்.

    இறுதியாக அப்பாவின் அஸ்தியை கொண்டுபோய் கடலில் சற்று உள்ளே போய் கையை தோள் மேல் தூக்கி பின்புறமாக கொட்டச் சொன்னார்  அய்யர். அண்ணாவும் அஸ்தியை எடுத்துக் கொண்டு நகர ஆரம்பித்தான்.  21 வருடங்கள் என்னுடனே இருந்த அப்பா என்னைவிட்டு முழுமையாக விலகப் போகிறார் என்ற நிஜம் சுட வேண்டாம், வேண்டாம் என்றபடி உடன் ஓடினேன்.  நீ இங்கேயே இரு என்பதாய் சைகை செய்தார் அண்ணா.  மாட்டேன் என உடன் ஓடினேன்.  கண்மூடியபடி கடலில் அவர் முதுகுப்புறம் சாய்க்க மூளை இட்ட கட்டளையாய் வலதுகை அப்பாவின் ஒரு பிடி சாம்பலை பிடித்துக் கொண்டது.

    அஸ்தியை வீட்டிற்குள்ளேயே கொண்டு வரக்கூடாது என வீட்டு வாயிலிலேயே கட்டி தொங்கவிடச் செய்த சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு என் செய்கை ஒரு அசட்டுச் செயல்தான்.  இருப்பினும் அப்பா பேசாத புழங்காத வீட்டிற்கு அவர்  இல்லாமல் செல்ல மனம் வரவில்லை.  கவனமாக கரையினில் வந்து யாரும் குறிப்பாக அண்ணா பார்க்காத வண்ணம் காகிதத்தில் மடித்து பத்திரப்படுத்திக் கொண்டிருந்தேன் கைப்பிடி அஸ்தியை.

    மழலை வகுப்பின் முதல் நாள் சேர்க்கையின்போது அப்பா ஆறுதலாய் சொன்ன அந்த சொல் மட்டும் என் காதுகளில் தற்போது ஒலித்துக் கொண்டே இருந்தது.    “திரும்ப வருவேன்டா…   எதுக்கு பயப்படுற”.





                               





13 comments:

  1. Madam, Unable to read at all. It is not in Tamil. Just for your information, pl.

    ReplyDelete
  2. Replies
    1. ஏன் ? என்ன ஆச்சு ? சரி செய்யுங்கோ, ப்ளீஸ்.

      If not possible, please retype & re-release as a fresh post.

      vgk

      Delete
  3. ஐயா சரியாகிடுச்சிங்களா? சரியா இருக்கா?. உங்க ஆர்வம் என்னை சிலிர்க்க வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இப்போ படிக்க முடிகிறது. முழுவதும் படித்து முடித்துவிட்டு மீண்டும் வருவேன்.

      Delete
  4. மனதை மிகவும் கனக்க வைத்த சம்பவமாக உள்ளது.

    நடுத்தர வயதில் மனைவியை இழந்து மறுமணம் செய்துகொள்ளாமல் இருந்துள்ளார். பெண் குழந்தையை தாய்க்குத்தாயாய் தந்தைக்குத் தந்தையாய் இருந்து வளர்த்து, நல்லது கெட்டது சொல்லி வளர்த்துள்ளார். மிகவும் பாரட்டப்பட வேண்டியவர் தான்.

    >>>>>

    ReplyDelete
  5. //ஒரு சமயம் அதிகாலையில் எனக்கு விழிப்பு கண்டு எழுந்து அழுகையில் மொத்த குறிப்பையும் மெல்ல கோர்த்து வாங்கி ‘பயப்படாதடா.. நீ வயசுக்கு வந்துட்ட’ என்று கண்கள் பனிக்க சொன்னார். தீட்டுத் துணிகளை எப்படி மாற்றுவது என்பது உட்பட சொல்லிக் கொடுத்தவர். //

    ஒரு தாய் இருந்து மனதில் பூரிப்புடன் மகிழ்ந்து, அதே சமயம் மனதில் சற்றே பயந்து சொல்லித்தரவேண்டிய சில ரகசியங்களை, எச்சரிக்கைகளை ஒரு தந்தை இங்கு சொல்லித்தர வேண்டிய சூழ்நிலை ... சற்றே வித்யாசமாகத்தான் உள்ளது. என்ன செய்வது ? அதில் தவறொன்றும் இல்லை தான்.

    >>>>>

    ReplyDelete
  6. //அப்பா பேசாத புழங்காத வீட்டிற்கு அவர் இல்லாமல் செல்ல மனம் வரவில்லை. கவனமாக கரையினில் வந்து யாரும் குறிப்பாக அண்ணா பார்க்காத வண்ணம் காகிதத்தில் மடித்து பத்திரப்படுத்திக் கொண்டிருந்தேன் கைப்பிடி அஸ்தியை.//

    கொண்டு வந்தது அப்பாவின் அஸ்தியை அல்ல. அவர் மீது வைத்திருந்த அளவிடவே முடியாத அன்பைத்தான். அதனால் ஒன்றும் தவறே இல்லை.

    >>>>>

    ReplyDelete
  7. //மழலை வகுப்பின் முதல் நாள் சேர்க்கையின்போது அப்பா ஆறுதலாய் சொன்ன அந்த சொல் மட்டும் என் காதுகளில் தற்போது ஒலித்துக் கொண்டே இருந்தது. “திரும்ப வருவேன்டா… எதுக்கு பயப்படுற”.//

    நிச்சயமாக அவர் மீண்டும் இதே வீட்டில் ஓர் குழந்தையாகப் பிறக்கக்கூடும் என்பதில் சந்தேகமே இல்லை தான்.

    >>>>>

    ReplyDelete
  8. இது உண்மைச்சம்பவமா அல்லது கற்பனைக் கதையா என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

    எப்படியிருப்பினும் உணர்வுபூர்வமாக சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
  9. அஸ்திக்கலசம் என்றதும் நான் எழுதியதோர் கதை ஞாபகம் வருகிறது.

    பலராலும் பாராட்டுப்பெற்றது.

    மங்கையர் மலரின் என் மனைவி பெயரில் வெளிவந்த நெடுங்கதை.

    தலைப்பு: உடம்பெல்லாம் உப்புச்சீடை

    இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_2406.html

    முடிந்தால் படித்துவிட்டு கருத்துச்சொல்லுங்கோ, ப்ளீஸ்.

    ReplyDelete