blogger tricksblogger templates

Sunday, December 22, 2013

 
கற்றலை தாண்டி
 
ஒரு மதிய பொழுதின்
இரண்டாவது பாட வேளையில்
தலைவலி எனச் சொல்லி
அமர்ந்திருந்த நேரத்தில்
அயர்ச்சியில் நிமிடங்கள் கரைய...
என்னாச்சு? தண்ணி வேணுமா மிஸ்?
நீர் போத்தலை எடுத்து வந்தான்
எப்போதும் பெயிலாகும் முத்து
கொஞ்சமே கொஞ்சம் தைலம் தடவுறீங்களா?
கணித உபகரண பெட்டியிலிருந்த
குட்டி டப்பாவை எடுத்து வந்தான் சபரி.
கேண்டீனில் காபி வாங்கி வரட்டுமா?
பரபரத்த கால்களுக்கு அனுமதி
கோரியபடி கேள்வியுடன் அருண்
என் மெல்லிய புன்னகை
அவர்களின் ஆவலுக்கு
இரையோ இரைச்சியோ
போட்டிருக்கக் கூடும்.
கற்றலில் பிந்தங்கிய அந்த
மாணவர்களின் தோழியாயிருந்தேன்
சில நிமிடங்களுக்கு
முதல் மதிப்பெண் எடுக்கும் பாலாஜி
இப்பொழுதும் ஆழ்ந்திருந்தான் தன் புத்தகத்தினூடே
என் புருவச்சுருக்கம் உள்ளுக்குள் மணியடித்தது
கற்றலை தாண்டி இப்போது நான்
கவனம் செலுத்த வேண்டியது
இவர்களுக்கா அவனுக்கா
எனக்குள் சின்ன தடுமாற்றம்...

Friday, October 18, 2013

சற்றே பெரிய தனிமை

எனது முதல் சிறுகதை தொகுப்பாக “சற்றே பெரிய தனிமை” என்னும் நூலை 14-10-2013 அன்று திருவண்ணாமலை எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்களால் வெளியிடப்பட்டது. கல்கியின் தலைமை உதவி ஆசிரியர் எழுத்தாளர் அமிர்தம் சூர்யா நூல் குறித்து அறிமுக உரையாற்றி சிறப்பித்தார்.
                 இப்புத்தகம் 168 பக்கங்கள் கொண்டது. எழுத்தாளர் இந்துமதியின் அணிந்துரையோடு வரும் இத்தொகுப்பை ஆரணி நந்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  விலை ரூ.120.
                விரும்பும் நண்பர்கள் ரூ.120க்கு [தபால் செலவு இலவசம்] மணியார்டர் மூலமாகவோ  S. நந்தகுமார், 45/25, மண்டி வீதி, ஆரணி -632 301, திருவண்ணாமலை மாவட்டம்.  என்ற பெயருக்கு காசோலை அனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம்.
               இதர தகவலுக்கு.... பதிப்பாளர்  S. நந்தகுமார் - 9443006882 என்ற தொலைபேசியை தொடர்பு கொள்ளவும்.
                      உங்கள் பார்வைக்கு ‘சற்றே பெரிய தனிமை’ சிறுகதை நூலின் வெளியீட்டு விழா  புகைபடங்களில் சில...Wednesday, October 16, 2013

”சற்றே பெரிய தனிமை”

பவித்ரா நந்தகுமாரின்
             “சற்றே பெரிய தனிமை”
சிறுகதை நூல் வெளியீட்டு விழா
விரைவில்

Friday, September 13, 2013

எழுத்தாளர் இந்துமதியுடன் நாங்கள்

சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த கதை பயிற்சியில் எழுத்தாளர் இந்துமதி அவர்களுடன் மனதளவில் நாங்கள் நெருங்கி போனோம். சுருக்கமாக சொன்னால்......
           மிதமான வெளிச்சம்
           இதமான தேனீர்
           ஈரமான கதைக்கருக்கள்
           ஆழமான விளக்கங்கள்
           அழகிய யோசனைகள்
           சுவாரஸ்யமூட்டிய கருத்துக்கள்
           சிந்தனை சிதறல்கள்
           உணர்வுபூர்வ கண்ணீர்துளிகள்
           அன்பூறிய ஆசிர்வாதங்கள்
           அசரடித்த அவரின் ஆளுமை  
           என அது ஒரு அற்புத தருணம்.

Thursday, September 12, 2013

அப்பாவின் அஸ்தி
    அப்பாவின் அஸ்தியை எங்கே கரைப்பது என அண்ணா கேட்டபோது துளி யோசிப்புக்கும் இடமின்றி நான் முதலில் சொன்னது ராமேஸ்வரத்தைதான்.

    ரொம்ப தொலைவு ஆச்சேப்பா… ரெண்டு நாள் பொழப்பு கெடும் என சொந்த பந்தங்கள் விலகிக் கொள்ள நானும் அண்ணாவும் மட்டும் பயணப்பட்டோம்.

    அஸ்தி கரைக்க செல்கையில் யாரிடமும் சொல்லிவிட்டு போகக் கூடாது என நீலகண்ட சாஸ்திரிகள் சொன்னதன் பொருட்டு அவ்வாறே செல்வதுதான் கொஞ்சம் சிரமமாக இருந்தது.  தாயா புள்ளையா பழகிட்டு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போகுதுகள் பார்  என தெருவாசிகள் பேசுவார்களே என்ற ஒருவித அச்சம் மனதினுள் வேறூன்றி இருந்தது.

    வெளிப்புற ஜன்னலின் வடகிழக்கு மூலையில் மஞ்சள் பையினுள் இட்டு கட்டப்பட்டிருந்த அந்த அஸ்தியை தொடுகையில் கைகள் நடுங்கியது.  சிந்தாமல் சிதறாமல் அப்படியே என் ஹேண்ட் பேகினுள் நுழைக்க தொடங்கியது பயணம்.

    வேலூரிலிருந்து மதுரைக்கு, பின் அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு என அண்ணா சொகுசு பேருந்தில் ரிசர்வ் செய்துவிட அலுப்பின்றி பயணப்பட்டது உடல்.  அஸ்தியை கரைத்து வந்துவிட்டதன் மேல் வீட்டில் ஏற்படும் வெறுமையை எப்படி ஜீரணிப்பது என்பது தெரியாமல் விசும்பிக் கொண்டிருந்தது மனம்.

    மூளையில் கட்டி வந்து அம்மா இறந்து போனதாக நினைவு தெரிந்த வயதில் அப்பா சொன்னதாக ஞாபகம்.  பாட்டி எத்தனை முறை வற்புறுத்தியும் அவளைப் போல் இனி ஒரு மனைவி எனக்குக் கிடைக்க மாட்டாள்.  ஆளை விடுங்கள் என்பதாய் இருந்தது அப்பாவின் பதில்.  கொள்ளை பிரியம் வெச்சவனோட வாழக் கொடுத்து வெக்கலயே என பாட்டி வரும் போதெல்லாம் அரற்றி விட்டு செல்வாள்.

    அப்பாவுக்கு தமிழ் மொழி மீது அளவு கடந்த பாசம்.  நான் சின்ன ‘ன’ பெரிய ‘ண’ என மாறி மாறி சொல்லும் போதெல்லாம் தென்னகரம் நன்னகரம் என உச்சரிக்கச் சொல்லி திருத்துவார்.  ஆங்கில இலக்கியம் படிக்கப் போகிறேன் என பயந்து பயந்து என் விருப்பத்தை தெரிவிக்கையில் கூட மொழியை படிக்க தன்னிடம் தடை எதுவும் இல்லை என யதார்த்தவாதியாக நின்றவர்.

    இருப்பினும் ஆங்கிலம் பேசுவதானால் ஆங்கிலமே பேசு.  தமிழ் பேசுவதானால் தமிழிலேயே பேசு.  இரண்டையும் ஒன்றோடொன்று கலக்காதே.  அது காப்பியையும் டீயையும் கலக்குவது போல நாராசமாக இருக்கும் என கண்டிப்பு காட்டுவார்.

    அப்பாவை பலர் அறிவது சந்தனப்பொட்டுக்காரர்  என்ற அடைமொழியில்தான்.  எங்கள் தெருவிலேயே அவர் ஒருவர் தான் சந்தனப் பொட்டுக்காரர்.   அவர் தினசரி  சந்தனப்பொட்டை வைக்கும்போது பார்வையாளராய் பார்க்கும் சந்தர்ப்பம் எப்போதும் எனக்கு மட்டுமே அதிகமாக வாய்க்கும்.  சந்தனத்தை அதிக நீர் சேர்க்காது அடர்வாக குழைத்து வட்டமாக உருட்டி நடுநாயகமாக நெற்றியில் பார்த்து இருத்தி,  ஈரப்படுத்திய குளியல் துண்டை லாவகமாக அழுத்தி எடுப்பார்.  நல்ல வடிவில் திருப்தியாய் வந்ததுமே அவர் முகம் மெல்லிய மகிழ்ச்சிக்கு ஆட்படும்.  அப்பாவின் பெயரே மறந்து போகும் அளவு ‘சந்தனப் பொட்டுக்காரர்’ அவரை ஆக்கிரமித்திருந்தது.

    பெரும்பாலும் மாலை வரும்வரை சந்தனப்பொட்டு அவர் முகத்தில் குடிகொண்டிருக்கும்.  சிற்சில வேளைகளில் மட்டுமே அவரை சந்தன பொட்டின்றி பார்த்ததாக ஞாபகம்.  அண்ணனுக்கு மஞ்சள் காமாலை வந்து ஒரு வாரம் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை எடுக்க, முழி பிதுங்கி நின்றது போன்ற ஒருசில சந்தர்ப்பங்கள்தான்.

    ஒரு சமயம் அதிகாலையில் எனக்கு விழிப்பு கண்டு எழுந்து அழுகையில் மொத்த குறிப்பையும் மெல்ல கோர்த்து வாங்கி ‘பயப்படாதடா..  நீ வயசுக்கு வந்துட்ட’ என்று கண்கள் பனிக்க சொன்னார்.  தீட்டுத் துணிகளை எப்படி மாற்றுவது என்பது உட்பட சொல்லிக் கொடுத்தவர்.  பாசத்தை எப்போதும் அதீதமாக கொட்டி பேசுவது அப்பாவுக்கு பழக்கப்படாத ஒன்று.  உடல் மொழியிலும் உள்ளக் குறிப்பிலும் அழகாக வெளிப்படுத்துவது அவரின் வழக்கம்.

    தினமும் காலை 5.30க்கெல்லாம் நித்திரையில் இருக்கும் என் தோள்பட்டையை தொட்டு மெல்ல உலுக்கும் பூப்பஞ்சு கைகளுக்கு சொந்தக்காரர்.  காலத்திற்கேற்ப பள்ளிக்கு போகணும்ல, டைப்ரைட்டிங் கிளாஸ்குடா, டியூசன் மிஸ் நேரமானா சத்தம் போடுவாங்கம்மா, பஸ்ஸ பிடிக்கணுமே என்பதான ஏதாவது ஒரு காரணம் அவருக்கு எப்போதும் இருக்கும்.

    அப்படிப்பட்ட அப்பா எந்த காரணத்தின் பொருட்டு இப்படி ‘பட்’ என்று ஒரே நிமிடத்தில் மாரடைப்பில் இல்லாமல் போனார் என்பதான யோசனை சத்தியமாய் சாத்தியப்படாது போக பேருந்து நாற்காலியில் சாய்ந்திருந்த நான் தேம்பலால் முன்னே உலுக்கி தள்ளப்பட்டேன்.

    என் விசும்பலை கவனித்த அண்ணனுக்கும் துக்கம் தொண்டையை அடைத்திருக்க வேண்டும்.  அவன் முகமும் இறுகிப் போயிருந்தது.  முன்னே நகர்ந்தபோது தெரியாது அஸ்திப்பையின் மேல் என் வலதுகால் பட்டுவிட தொட்டுக் கும்பிட என் கைகள் பறந்தது.

    தெரியாம பட்டதுதானே ஏனிப்படி பதறுற என்று பலமுறை அப்பா சொன்ன பழைய வார்த்தைகள் செவிகளில் ஒலித்தது போன்ற பிரமை.

    ராமேஸ்வரம் வந்தாயிற்று.  அண்ணா 3 முறை தலை முழுகிவிட்டு வந்து அமர மந்திர உச்சாடனைகள் புரிந்தவண்ணம் இருந்தார் அய்யர்.

    இறுதியாக அப்பாவின் அஸ்தியை கொண்டுபோய் கடலில் சற்று உள்ளே போய் கையை தோள் மேல் தூக்கி பின்புறமாக கொட்டச் சொன்னார்  அய்யர். அண்ணாவும் அஸ்தியை எடுத்துக் கொண்டு நகர ஆரம்பித்தான்.  21 வருடங்கள் என்னுடனே இருந்த அப்பா என்னைவிட்டு முழுமையாக விலகப் போகிறார் என்ற நிஜம் சுட வேண்டாம், வேண்டாம் என்றபடி உடன் ஓடினேன்.  நீ இங்கேயே இரு என்பதாய் சைகை செய்தார் அண்ணா.  மாட்டேன் என உடன் ஓடினேன்.  கண்மூடியபடி கடலில் அவர் முதுகுப்புறம் சாய்க்க மூளை இட்ட கட்டளையாய் வலதுகை அப்பாவின் ஒரு பிடி சாம்பலை பிடித்துக் கொண்டது.

    அஸ்தியை வீட்டிற்குள்ளேயே கொண்டு வரக்கூடாது என வீட்டு வாயிலிலேயே கட்டி தொங்கவிடச் செய்த சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு என் செய்கை ஒரு அசட்டுச் செயல்தான்.  இருப்பினும் அப்பா பேசாத புழங்காத வீட்டிற்கு அவர்  இல்லாமல் செல்ல மனம் வரவில்லை.  கவனமாக கரையினில் வந்து யாரும் குறிப்பாக அண்ணா பார்க்காத வண்ணம் காகிதத்தில் மடித்து பத்திரப்படுத்திக் கொண்டிருந்தேன் கைப்பிடி அஸ்தியை.

    மழலை வகுப்பின் முதல் நாள் சேர்க்கையின்போது அப்பா ஆறுதலாய் சொன்ன அந்த சொல் மட்டும் என் காதுகளில் தற்போது ஒலித்துக் கொண்டே இருந்தது.    “திரும்ப வருவேன்டா…   எதுக்கு பயப்படுற”.

                               

Friday, August 16, 2013

கதை பயிற்சி - நல்விதை முயற்சி


     வேலூரில் தினமலர் வீட்டு உபயோக பொருட்காட்சி ஏற்படுத்திக் கொடுத்த  நடந்த ”கதை பயிற்சி” நிகழ்ச்சியில் எழுத்தாளர் இந்துமதி அவர்களுடன் வாசகிகளான நாங்கள் மனதளவில் நெருங்கி போனோம். சுமார் மூன்று மணி நேரம் கடந்தததே தெரியவில்லை.
      பயிற்சிக்கு செல்வதற்காக காலையில் வெறும் வயிருடனே ஆரணியிலிருந்து பேருந்தில் ஏறிவிட்டேன். மதியம் 2.30 மணி வரை என் வயிறு பசியை எனக்கு உணர்த்த சற்றே மறந்து போனது.
    ‘அனுபவித்து எழுதுங்கள்என்பதே அவரின் முதல் சாராம்சமாக இருந்தது.
    எழுதுபவர்கள் முதலில் நிறைய வாசிக்க வேண்டும். அதிலும், வாசிப்பை ரசித்து நேசியுங்கள் என்றார். அந்த ரசனைத்தன்மை தான் கதைக்கு உரமாக தேவைப்படுகிறது என்பதை அவருக்கே உரிய நடையில் சுவைபட தெரிவித்தார்.
    தம் வாழ்வில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளை மேற்கோள் காட்டி அவர் விளக்கியது அவரின் சான்றாமையை காட்டியது. அவரின் அர்ப்பணிப்பு உணர்வையும் இறை பக்தியையும் மெய்சிலிர்க்க கவனித்துக் கொண்டிருந்தேன். அதனால் இடையில் அவர் என்னை பேசச் சொன்ன போது கூட உணர்வற்று நின்றுவிட்டேன். அவரின் அளுமையின் வசீகரம் எங்கள் அனைவரையும் கட்டிப் போட்டது.
       

Monday, August 5, 2013

ஆறடி நிலம்

மூணு பங்களா
நாலு வீடு
கொண்டிருந்த தங்கப்பனைக்
கூட இடுகாட்டு
ஆறடி நிலத்தில்
ஏழு பேருக்கு மேலே
எட்டாவதாகத்தான்
புதைத்தனர்
புல் முளைத்த
பழைய குழி பார்த்து
சில பல
மண்டை ஓடுகளின்
சாட்சியுடன்.

ஆறடி தான் உனக்கு
சொந்தம் என்ற
அப்பத்தாவின் வார்த்தையை
பொய்யாக்கி இருந்தது
122  கோடி
மக்கள்தொகை.
 நன்றி:தினமலர்-வாரமலர்