Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Sunday, March 9, 2014

எனக்குப் பிடித்த பாரதி கவிதை, ஏன்?



                    
       


       இந்த தலைப்பில் நான் எழுதிய பரிசு பெற்ற கட்டுரை இது.


   இலக்கண வரைமுறைகளை தவிடுபொடியாக்கியவன் எங்கள் பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி.  அறிவிற் சிறந்த புலவர்களை கொண்டு மட்டுமே பாக்களின் உள்ளர்த்தம் புலப்பட்டு வந்த நிலையில் சாமன்யர்களுக்கும் புரியும்படி தமிழை எளிமைப்படுத்தி ஆடம்பரமாய் நம் மனதில் பதிந்து போனவர் நம் முண்டாசு கவி.

     மகாகவி பாரதியார் என்ற பெயர் இன்று தமிழ் மக்களாகிய நம் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த ஒன்று என்றால் மிகையில்லை.  தமிழர்களாகிய நாம் செய்த புண்ணியத்தால் தான் பாரதி இந்தத் தமிழ் மண்ணில் பதியும் பேறு பெற்றோம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு.  அதிலும் பாரதி என்றாலே அவரின் ரௌத்திரம் தான் என் கண்முன் நிழலாடும் சூத்திரம்.  அதன் பொருட்டே அவரின் அச்சமில்லை அச்சமில்லை என்னும் பாடல்.  இந்தப் பாடல் தான் அவரின் கவிப்புதையலில் எனக்கு பிடித்தமான வைர அணிகலன். இதோ
அந்தக் கவி...
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

    இக்கவியை மெல்ல வாசிக்கும் போதே மனதில் ஒரு துணிச்சல் நிறையும். “துச்சமாக வெண்ணி நம்மைத் தூறு செய போதினும் என்னும் வரிகள் நாம் பட்ட அவமான்ங்களை நினைவு கூர்ந்து அதை தள்ளி வைக்கச் சொல்லும்.  இச்சைக் கொண்ட பொருளெல்லாம் இழந்துவிட்ட போதினும் என்னும் வரிகள் நாம் இழந்தவைகளை கொண்டு வெம்பிய மன நிலையை ஆட்டம் காண வைக்கும்.  நஞ்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டு போதிலும் என்றவரிகள் எந்த சூழ் நிலையிலும் எதிர்க்ககும் வல்லமையை பெறத் தூண்டும்.  இறுதியில் உச்சி மீது வாணிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை என்னும் வரிகள் ஆகச் சிறப்பாய் நம் நம்பிக்கையை மனதில் உச்சாணிக் கொம்பில் ஏர்றி விட்டுச் செல்லும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
        பாரதி வாழ்ந்த்து சுதந்திரம் பெறாத சோதனை மிகுந்த காலகட்டம் ஒரு பக்கத்திலோ செல்வச் செழிப்பு, ஆடம்பரம் மற்றும் சுகபோகங்கள் ஆகியவை தலைவிரித்தாடும் சிலரின் வாழ்க்கை.  மறுபக்கத்திலோ போதிய உணவு மற்றும் உடை போனற அடிப்படை வசதிகள் கூட கிட்டாது வாழ்வதற்கே திணறும் பரிதாபமான சூழலில் சிக்கியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை.  ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக உயர்ந்து ஒலிக்கிறது பாரதியின் வரிகள்.
       இக்கால பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கும் அறிவியலுக்கும் இந்திய பாரம்பரியத்தின் தூய சாரத்தை எளிய நடையில் கூறுவதாகவும் உள்ளது.  அவரின் கவிதை அவை தமிழகத்துக்கு மட்டுமின்றி உலகளாவிய நோக்கம் கொண்டவையாகவும் எல்லா சமூகத்தினருக்கும் எல்லா மத்த்தினருக்கும் எல்லா இனத்தவருக்கும் பொருந்தியவையாகவும் திகழ்கின்றன்.  அவரின் ஆற்றல்மிக்க தூண்டுதல்கள் மக்கள் மனத்தை விழிப்புறச் செய்கின்றன.  வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் எதிர்கொள்ள உதவுகின்றன என்றும் நேர்வழியில் செல்வதற்கு வேண்டிய உத்வேகத்தை அவர்களுக்கு அளிக்கின்றன.  துன்பமும் தடுமாற்றமும் நிறைந்த இந்த மனித வாழ்க்கையில் நம் மைந்தர்களை சரியாக திசையிலும் முறையான பாதையிலும் வழி நடத்திச் செல்கின்றன.
          அச்சமில்லை என்னும் அவரின் கவி நம் மனவசியத்திலிருந்து நம்மை விடுவித்து உறங்கும் ஆன்மாவை தட்டி எழுப்புகின்றது.  அப்படி நம் விழிப்புணர்வுடன் இயங்கினோமேயானால் மாபெரும் சக்தி குடிகொள்ளும், பெருமை கூடும், நன்மைசேரும், செயலில் தூய்மை மிகும்.  எவையெல்லாம் சிறப்பானதோ அத்தனையும் அளவின்றி நம்மை வந்து சேரும்.
            அவர் வந்துசென்று நூறாண்டுகள் நிறைகின்ற காலகட்டத்தில் நிற்கிறோம் நாம்.  அவர் நமக்கு விட்டுச் சென்றுள்ள செய்திகளை சிந்தை கொண்டு மற்றுமொறுமுறை  நம்மை முழுமையுடன் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டிய கடமை மட்டுமல்ல அடுத்த தலையுறையினரிடம் அவரை கொண்டு சேர்க்கும் நேரமும் இதுவே.

4 comments:

  1. // வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் எதிர்கொள்ள உதவுகின்றன... //

    கட்டுரை சிறப்பு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அன்பின் பவித்ரா நந்தகுமார் அவர்களுக்கு

    சண்முகம் மாமா என்ற தலைப்பில் இன்றைய தினமணி கதிரில் வந்திருக்கும் உங்களது சிறுகதையை வாசித்தேன்...நல்ல எழுத்து நடை. நல்ல விவரிப்புகள். கதை எங்கே முடியுமென்று ஊகிக்க முடிந்தாலும், சிறிய கதையை அதன் போக்கிலேயே கொண்டு சென்று முடித்திருப்பது அழகு...

    அ முத்துலிங்கம், ச தமிழ்ச்செல்வன் போன்றோர் பெயர்களை ஒரு சிறுகதை போகிற போக்கில் தொட்டுக் கொண்டு போவது அந்த நீரோட்டத்திற்கே அழகு சேர்க்கிறது...

    உங்களது மெயில் முகவரி தெரியவில்லை..எனவே வலைப்பூவில் இந்தப் பதிவைப் போட வேண்டியதாய்ற்று...

    நன்றி...

    எஸ் வி வேணுகோபாலன்
    sv.venu@gmail.com

    ReplyDelete
  4. பரிசு பெற்ற தங்கள் கட்டுரை அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete