Banner

என் அன்பான கணவருடன்

Tuesday, May 3, 2016

தின மலர்-பெண்கள் மலர் 30.04.2016 இதழில் வெளிவந்த கவிதை

கோடை விடுமுறை


மீறுன வளத்தியும்
மிஞ்சுன பேச்சுமாகத்தான்
பேசித் திரிவோம்

யாருக்கும் அடங்காமல்
அழுக்கு மூட்டைகளாய்
சுற்றி வருவோம்

காய்ந்த கருவாடாய்
கழனியில் காய்பறித்து
திருடித் தின்போம்

முயலுக்கு மூன்று காலாய்
சேமியா குச்சிஐஸ்க்கு
பிடிவாதம் பிடிப்போம்

நித்தம் விளையாட்டுகளில்
சமரசம் காணாது
சண்டை பிடிப்போம்

தாய் மாமாக்களிடம்
கோக்குமாக்கு பேசி
வம்பு வளர்ப்போம்

நொறுக்கு தீனிகள்
வயிறு புடைக்கத் தின்று
ஏப்பம் விடுவோம்

செல்லம் கொஞ்சி கொஞ்சி
தாத்தா பாட்டியை
ஏங்க வைப்போம்

ஆம்! நாங்கள் பாட்டி வீட்டிற்குப் போகிறோம்!