blogger tricksblogger templates

Wednesday, February 16, 2011

பயணத்தின் போது...........

பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன்.என்னைப்போல்
ஒரு தம்பதியும் பேருந்திற்காகக் காத்திருந்தனர்.
அவர்கள் ஏற வேண்டிய பேருந்து வரவும் இருவரும்
ஆளுக்கொருபுறமாய் முண்டியடித்துக் கொண்டு ஏறினர் .
பேருந்திலோ பயங்கர கூட்டம். இந்த கூட்டத்தை சமாளிக்க
முடியாது, உட்காரவும் இடமில்லை என அந்த பெண்
இறங்கிவிட்டார் கணவரும் இறங்கிவிட்டிருப்பார் என்பது
அவர் யூகம்.

ஆனால் அவரோ பேருந்தினுள்ளேயே மாட்டிக்கொண்டு
வெளியே வர இயலாமல் போனது.வண்டியும் புறப்பட்டு
விட்டது. கணவர் தனது செல் போன் மூலம் மனைவியின்
செல் போனைத் தொடர்பு கொண்டு அடுத்த பேருந்தில்
கிளம்பி வரும்படி சொல்லிவிட்டார்.அந்தப் பெண்,கையில்
பணம் எதுவும் எடுத்து வரவில்லையே என்று புலம்ப
ஆரம்பித்தார்.அவர் சூழ்நிலையை உணர்ந்து அவருக்கு
பயணச்செலவுக்கான பணத்தை கொடுத்தேன். நெகிழ்ந்து
நன்றி கூறினார்.

ஆண்களோடு வீட்டை விட்டு வெளியே
கிளம்பும் பெண்கள் அவர்களையே சார்ந்திராமல் தம்
கையிலும் தேவைக்கேற்ப பணம் எடுத்து செல்வது
தர்மசங்கடமான வேளைகளில் கை கொடுக்கும்.

3 comments:

 1. நல்ல கருத்துகள் பொதுவாக இப்படி இருப்பதில்லை இந்த காரணங்களினால் தன் பல்வேறு சிக்கல் களும் தோன்றுகிறது .எப்போதும் பிறரின் கையை எதிர்பார்த்து கொண்டிருக்கும் படியான சூழலில்தான் இன்றய பெண்களும் உள்ளனர் இந்நிலை மாறவேண்டும்

  ReplyDelete
 2. உங்கள் பதிவுக்கு நன்றி

  ReplyDelete
 3. இதே போன்ற ஒரு சூழ்நிலை எனக்கும் என் மனைவிக்கும் பல்லாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.

  அப்போது என்னிடமோ அவளிடமோ, ஏன் ஊரில் வேறு யாரிடமுமோ செல்போன் இல்லாத காலம்.

  ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள BHEL லில் இருந்து புறப்பட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து வேறு ஒரு பஸ் பிடித்து ஸ்ரீரங்கம் சென்றோம். கடைசி ஸ்டாப்புக்கு முதல் ஸ்டாப்பில் இறங்க வேண்டும் என பஸ்ஸில் ஏறும் முன்பே படித்துப்படித்துச் சொல்லியிருந்தேன்.

  நான் இறங்க வேண்டிய அந்த ஸ்டாப்பில் எப்படியோ கஷ்டப்பட்டு நான் இறங்கிவிட்டேன். அவள் இறங்கவில்லை. கும்பலான அந்த பஸ்ஸும் கிளம்பிவிட்டது. அடுத்த ஸ்டாப் வரை நான் நடந்தே சென்றும் அவளை அங்கு காணோம்.

  பட்டுப்புடவை + நகை நட்டுக்களைத்தவிர அவளிடம் பர்ஸோ பணமோ ஏதும் கிடையாது. கொடுத்தாலும் வாங்கி வைத்துக்கொள்ள மாட்டாள். அதுபோன்ற ஒரு குணவதி.

  பஸ்ஸில் ஏறி இருப்பாள், ஏறி இருந்தாள் என்பது மட்டும் எனக்கு உறுதியாகத்தெரியும். முன்புறம்/பின்புறம் என இருவரும் பஸ்ஸில் ஏறியிருந்ததாலும், கும்பல் மிக அதிகமாக இருந்ததாலும் நான் 2 டிக்கெட் எடுத்து விட்டேனே, தவிர பஸ்ஸில் ஒருவரை ஒருவர் நாங்கள் கடைசிவரை பார்த்துக்கொள்ளவே முடியவில்லை. அவ்வளவு கும்பல் அந்த பஸ்ஸில்.

  நேராக கடைசி ஸ்டாப்பிங்கில் போய் இறங்கிவிட்ட இவள் அங்குள்ள தேவி டாக்கீஸ் அருகேயுள்ள ஒரு சந்துக்குள் சென்று, அங்கிருந்த ஸ்ரீராம் மெடிகல்ஸ் என்ற கடைக்காரரிடம் விஷயத்தைக்கூறிவிட்டு, அவரிடம் தயவாகக் கேட்டுக்கொண்டு, என் BHEL வீட்டிலிருக்கும் பையனுக்கு அவர் கடையிலிருந்து [LAND LINE] போன் செய்து விஷயத்தைச் சொல்லி, மேற்கொண்டு இப்போ என்ன செய்வது என அவனிடம் ஆலோசனை கேட்டிருக்கிறாள்.

  புத்திசாலியான என் மகன் “அம்மா, நீ அங்கேயே இரு. வேறெங்கும் நகராதே. அப்பா எப்படியும் எனக்கு இதே போல, அம்மாவை காணோம் என கவலையுடன் பதட்டத்துடன் போன் செய்வார். அப்போது நான் அவரிடம் நீ தேவி தியேட்டர் அருகே சந்துக்குள் உள்ள ‘ஸ்ரீராம் மெடிகல்ஸ்’ என்ற கடைக்குள் ஒரு நாற்காலியில் பத்திரமாக அமர்ந்திருப்பதாகச் சொல்கிறேன்” என்று சொல்லியுள்ளான்.

  பிறகு அதே போல நானும் என் பையனுக்கு போன்செய்ய, அவன் இது விஷயத்தை எனக்குச் சொல்ல நானும் அங்கு சென்று, கடைக்காரருக்கு நன்றியும் சொல்லிவிட்டு, போனுக்கான பணமும் கொடுத்துவிட்டு, அங்கிருந்தே என் மகனுக்கும் ஓர் போன் செய்துவிட்டு, பிறகு என் மனைவியுடன் ஓர் ஆட்டோவில் புறப்பட்டு திருமண மண்டபம் சென்றேன்.

  ஆனால் இவ்வளவெல்லாம் நடந்தும் கூட, இன்றும் என் மனைவி தன்னிடம் தனியாக பணம் ஏதும் வைத்துக்கொள்ளவே மாட்டாள்.

  அதன்பின் நாங்கள் ஆட்டோவிலோ அல்லது காரிலோ மட்டுமே சென்று வருகிறோம். கும்பலான பஸ்ஸில் ஏறுவதையே நிறுத்திவிட்டோம்.

  அனைவருக்கும் முன்னெச்சரிக்கை தரும் இந்தத் தங்களின் பதிவுக்கும் பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete