Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Tuesday, April 29, 2014

ரிக்‌ஷா சவாரி   
 ரங்கசாமிக்கு ரொம்ப நாட்களாக ரிக்‌ஷாவில் சவாரி செய்ய வேண்டும் என்று ஆசை.  63 வயது பூர்த்தியாகி இருந்தாலும் அவர் இதுவரை ரிக்‌ஷாவில் சவாரி செய்ததில்லை.  அப்பா அந்தக் காலத்தில் பெரிய செல்வந்தராக இருந்ததால் சொந்த மாட்டுவண்டி இருந்தது.  அவருடைய இளமைக் காலமெல்லாம் பள்ளிக்கு, கோவிலுக்கு, வயக்காட்டுக்கு என முழுப் பயணமும் மாட்டு வண்டியிலேயே நடக்கும்.
         சொகுசான ‘காரைசீதனமாக பெற்று வந்த மணமகள் மனைவியாக அமைந்து விடவே இவர்களின் பருத்த உடல்களை எப்பொழுதும் காரே சுமந்து திரிந்தது.  ரிக்‌ஷா சவாரி செய்யும் நபர்களை தெருவில் நோக்கும் போதெல்லாம் அவர்கள் ஏதோ தேர் பவனி வருவது போலவே இருக்கும் ரங்கசாமிக்கு.  கணவன் மனைவியாக இருக்கும் பட்சத்தில் ரிக்‌ஷாவில் அவர்களின் அன்னியோன்ய இருப்பு பார்க்க அழகாக இருக்கும்.
          ரிக்‌ஷாவில் செல்பவர்கள் ஏதோ கம்பீரமாக செல்வது போலவும் காரில் பவனி வரும் தாமெல்லாம் ஏதோ தீப்பெட்டிக்குள் அடங்கி ஒடுங்கிச் செல்வது போலவும் அவருக்கு எப்போதும் தோன்றும்.
          கார் சர்வீசுக்குப் போயிருக்க, டூவீலரும் மகனுடன் இருக்க,  ரிக்‌ஷா ஆசை தொற்றிக் கொண்டது.  சரி,சாவதற்குள் ஒருமுறையேனும் ரிக்‌ஷாவில் சென்று விடிவோம்என்ற ஆவலில் கிழிந்து பல ஒட்டு போடப்பட்டிருந்த நீலவண்ண லுங்கி நபரிடம் ரிக்‌ஷாவுக்கு அணுகினார்.  ‘ஆட்டோவில் வராமல் ஏன் அசிங்கமாக ரிக்‌ஷாவில் வருகிறீர்கள் என மனைவி கோபித்து கொள்வாள்என அவருக்குத் தெரியும்.  இருந்தும் ஆசை விடுவேனா என்றது.
               இவர் தெருப் பெயரைச் சொன்னதும் இந்த வாசு வண்டிய எடுத்தான்னாலே 40 ரூபா தான் சார்என்றான்.
                “சின்னதா ரெண்டு தெரு மெரிக்கறதுக்கா 40 ரூபா கேக்குற. அநியாயமா இருக்கே.  அதுவும் நான் ஒண்டி ஆளு”, மெல்லிய முருவலுடனே ஆரம்பித்தார் ரங்கசாமி.
             “என்னா சார்...அடிக்குற வெயில் மூஞ்ச தீய்க்குது.  ஒரு லோட்டா மோர் வாங்கி குடிச்சா அதுவே 10 ரூபா ஆகிப் போகுது. விக்கிற வெலவாசியில 40 ரூபா எந்த மூலைக்கு.  எல்லாரும் சர் சர்னு ஆட்டோவுல தான் போறாங்க.  எங்கள யார் சார் சீண்டுறாங்க.  ஏதோ, என்ன நம்பி வந்துட்டீங்க.  30 ரூபா குடுங்க.  வாங்க சார்’.
          அவன் பேசியது அவருக்கு நியாயமாகப் பட ஒத்துக் கொண்டு ஏறி அமர்ந்தார்.  இரட்டை இருக்கைகள் மட்டுமே கொண்ட நீள வாக்கு ரிக்‌ஷா வண்டியாதலால் தேர் பவனி போவது போல் ஒய்யாரமாகத் தான் இருந்த்து.  எதையோ சாதித்து விட்டது போன்ற பூரிப்பு அவர் உள்ளத்தில்.
               ரிக்‌ஷா மேடு பள்ளத்தில் ஏறி இறங்கி சிரமப்பட்டு அவரை இழுத்துச் சென்றது.  இப்பொழுது தான் அவர் அந்த வாசுவை கவனித்தார்.  கேசமெல்லாம் செம்பட்டை அப்பியிருக்க கழுத்து முழுதும் வியர்வை முத்துக்கள் கூர் கூராய் பியாபித்திருந்த்து.  ரொம்ப நாள் பழக்கம் போல இவரிடம் நாட்டு நடப்பை அவலைப் போல மென்று கொண்டே வந்தான் வாசு.  வழிப்போக்கர்கள் ரங்கசாமியை சற்று உற்று நோக்கிப் பார்க்கும் போது தான் என்னவோ போலிருந்தது.
           வண்டி டீக்கடையோரம் சென்ற போது அந்த பத்து வயது மதிக்கத்தக்க பொடியன் வண்டியை இடைமறித்தான்.
      “யென்னடா...கழ்த நவுந்து நில்லு அந்தாண்ட”.
         “ நைனா...எம்மான் நாளா கேட்டுனு கிரேன் கெச்சு பேனா வாங்கிக் குடுன்னு.  இன்னிக்கு யெடுத்துனு வரலன்னு எங்க டீச்சர் வெளிய நிக்க வெச்சிட்டாங்க.  போ நைனா... இன்னிக்கு கண்டிப்பா வாங்கினு வர்ற.  இல்லாங்காட்டி டீச்சர் நாளைக்கு என்ன அடிப்பாங்க”.
         “போடா போடா... கூறு கெட்டவனே.  நாங்கெல்லான் பேனாவ கண்டமா பென்சில கண்டமா... இசுகெச்சு பேனா வோணுமான் இசுகெச்சுபேனா.  நோட்டு, புக்கு, லொட்டு, லொசுக்குன்னு துரைக்கு அழுவுறதுக்கே சரியா கீது.  போடா...
         “ நைனா...ராத்திரிக்கா நீ மெய்யாலுமே வாங்கியாரணும்...என்ற பொடியனின் குரல் தூரத்தில் காற்றில் கரைந்து கொண்டிருந்தது.
           அதற்கு மேல் ரிக்‌ஷாப் பயணம் ரசிப்புக்குரியதாய் இல்லை ரங்கசாமிக்கு.  அந்தப் பொடியனைப் பற்றிய நினைவாகவே இருந்தது.  மறு நாள் அவன் ஸ்கெட்ச் பென் இல்லாமல் போய் டீச்சரிடம் அடி வாங்குவது போலவே மனதில் நிழலாடியது.  வாசு காசு இல்லாமல் அவன் பிள்ளைக்கு வாங்கிக் கொடுக்காமல் விட்டு விட்டால்... என்ற பதைபதைப்பு தொற்றிக் கொண்ட்து.
         இரண்டு வீடுகளுக்கு முன்னரே இறங்கிய ரங்கசாமி. அவன் கேட்டதற்கும் அதிகமாக இரு மடங்கு தொகையை கொடுத்து பிள்ளைக்கு ஸ்கெட்ச் பென் வாங்கிக் கொடுக்குமாறு சொல்லி விடைபெற்றார்.  30 ரூபாய்க்கு 60 ரூபாய் வந்த சந்தோஷத்தில் திக்குமுக்காடி நகர்ந்தான் வாசு.
         நடு இரவு ரங்கசாமியின் மனைவிக்கு மூச்சுத் திணறல் அதிகமாக டூவீலரில் ரங்கசாமி ஆட்டோ பிடிக்க ஸ்டேண்டுக்கு விரைந்து வந்தார்.  நியான் விளக்கொளியில் மலை போன்று குவிந்திருந்த குப்பைக்கு மிக அருகில் உருண்டு கிடந்த்து ஒரு உருவம்.  சட்டென அந்த கைலி ஞாபகத்துக்கு வர அட மாலை தன்னை அழைத்து வந்த வாசு தானே அதுஎன உணர்ந்தார்.  அவனின் போதை இவருக்கு கிறுகிறுத்தது. 
        தன் மனைவியின் மூச்சுத்திணறல் கூட சற்று நேரம் மறந்து அந்த பொடியனின் அழுகை முகம் மன அடுக்கில் வந்து போனது அவருக்கு.

 நன்றி : இலக்கியச்சோலை


4 comments:

 1. அன்பின் பவித்ரா நந்த குமார் - ரிக்‌ஷா சவாரி பதிவு அருமை - படமும் அருமை - கதையும் அருமை - இயல்பான நடையில் எழுதப் பட்ட பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 2. தங்கள் வருகைக்கும் வழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 3. மிகவும் அருமையான கதையை எளிமையான வார்த்தைகளில் இயல்பாகச் சொல்லி அசத்தியுள்ளீர்கள். மிகவும் ரஸித்துப்படித்தேன். முடிவு வரிகள் ரங்கசாமியை மட்டுமின்றி என்னையும் கிறுகிறுக்க வைத்து போதை ஏற்றியது.

  இலக்கியச்சோலை வெளியீட்டுக்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துகள்,

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 4. ஏனோ தெரியவில்லை கதையின் முடிவில் இதயம் கனத்தது, கண்ணீர் துளிர்த்தது.
  https://www.scientificjudgment.com/

  ReplyDelete